/

திரைக்கதிர்

ரஜினியின் "கோச்சடையான்' ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாவதாகச் செய்திகள் வந்த போது, அதே நாளில் "விஸ்வரூபம் 2' படமும் வெளியாகும் என

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:28 am

ஜி. அசோக்

ரஜினியின் "கோச்சடையான்' ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாவதாகச் செய்திகள் வந்த போது, அதே நாளில் "விஸ்வரூபம் 2' படமும் வெளியாகும் என செய்திகள் பரவின.  ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என திரை அமைப்புகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் தேதியிலும் ரிலீஸ் இல்லை. அதே போல் "கோச்சடையான்' பட வெளியீட்டை ஒட்டியோ அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்தோ கூட "விஸ்வரூபம் -2' பட வெளியீடு வேண்டாம் எனவும் திரையுலகினர் கூறி வருகிறார்களாம். ஒரே மாதத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வருகிற போது, திரையரங்கப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் இந்த கோரிக்கையாம். இதனால் பட ஆடியோ, டிரெய்லர் எதுவும் வெளியிடப்படாததால் அடுத்த மாதமும் "விஸ்வரூபம் 2' வெளியாவது சந்தேகமே. மே மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்பது கமலின் தற்போதைய திட்டமாம். 

 பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் "குக்கூ'. லிங்குசாமியின் உதவியாளராக அறிமுகமாகி விகடனில் "வட்டியும் முதலும்' மூலம் அன்பையும், நேசத்தையும் விதைத்த ராஜூமுருகன் கதை எழுதி இயக்குநராகிறார். "வட்டியும் முதலும்' எழுதிய போது, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள். "வட்டியும் முதலும்' பாணியில் ஒரு கதை தேடிய போது எனக்குக் கிடைத்த கதைதான் இது. தமிழ், சுதந்திரகொடி என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேரின் காதல்தான் படம். ரசனை, காமெடி, உற்சாகம் என வாழ்க்கையை வாழ்கிறவன் தமிழ். ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையை நம்பிக்கையோடு கடக்கும் மனுஷி சுதந்திரகொடி. இவர்கள் இருவருக்கும் இருட்டுதான் உலகம். ஆனால் யோசிக்க முடியாத, கடந்து போக முடியாத ஓர் அற்புதமான காதல் இருக்கிறது. காசு, பணம், வசதி வாய்ப்புகள் என எதுவும் இல்லாமல் அன்பையும், அக்கறையையும் முன் வைக்கிற காதல் அது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் கடந்து போகிற ஒவ்வொருவரும் ஹீரோதான். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நாம் கடந்தவர்கள்தான் இந்த கதையின் நாயகர்கள்'' என்கிறார் ராஜூமுருகன்.

80-களில் நடனம் மற்றும் தேர்ந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஆனந்த்பாபு. பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் "ஆதவன்' படத்தில் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்தார். அப்போதுதான் அவர் மனநலப் பாதிப்பில் இருந்து மீண்டதாகப் பலருக்கும் தெரியவந்தது. ஆனால் அதன் பின் வந்த வாய்ப்புகளை ஏற்காமல் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில் "ஜமாய்' எனும் படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு வருகிறார். 28 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு ஹீரோவாக நடித்த "பாடும் வானம்பாடி' படத்தை இயக்கிய ஜெயக்குமார், இப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகிறார். இயக்குநர் ஜெயக்குமாருக்கும், ஆனந்த்பாபுவுக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால், கதையின் முக்கியத்துவம் அறிந்து இப்படத்தில் நடிக்க வந்திருக்கிறார் ஆனந்த்பாபு. ஓர் இசைக் கலைஞன் மீது காதல் கொள்ளும் ஒரு ரசிகையின் சாதாரண நேசிப்பு காதலாக மாறி நிற்பதுதான் கதை. கல்லூரி கதையின் பின்னணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம் என்பதால், அந்த குழுவுக்கு மாஸ்டராக இருக்க நடனமும், இசையும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். ஆனந்த்பாபுவைச் சந்தித்து ஜெயக்குமார் கதையைச் சொன்னதும், சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஆனந்த்பாபு.

அடிமைத்தனத்திலிருந்து மீண்டெழும் ஒரு நாடோடி இனத்தின் விடுதலை குறித்த கதையாக உருவாகி வரும் படம் "நாடோடி வம்சம்'. வாசன் கார்த்தி, அர்ச்சனா நடிக்கின்றனர். "நான் கடவுள்', "வில்லு' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற தேவராஜ் நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தில் நடிக்கிறார். கதை, எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பழ.ராஜ்கண்ணன். படம் குறித்து இயக்குநர்... ""இப்போதும் ஏதாவது ஒரு பகுதியில் அடிமைப்பட்டு கிடக்கும் இனமும், சமூகமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மீடியாவின் வெளிச்சத்துக்குள் வராமல்  ஒரு வட்டத்துக்குள்ளேயே சுருங்கி வாழும் மக்களின் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் மையம். ஹாலிவுட் சினிமாக்களில் நாம் பார்த்து வியக்கும் பல படங்கள் அடிமைத்தனத்தை மையமாக கொண்டே உருவாகின்றன. அது தமிழ் சினிமாவில் இல்லாதது குறை. அதற்காகவே சில ஆய்வுகளில் ஈடுபட்டு இந்த கதையை உருவாக்கியிருக்கிறேன். நிச்சயமாக எல்லோரின் கவனத்தையும் இப்படம் ஈர்க்கும். இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன'' என்றார் இயக்குநர்.

"அவன் இவன்', "பாகன்' உள்ளிட்ட படங்களைத் தவிர ஜனனி அய்யருக்கு இங்கே பெரிய வாய்ப்புகள் இல்லை. ஆனால் மலையாளத்தில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் குவிந்தன.  ஆனாலும் தமிழில் நடிக்கவே விரும்பினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார் ஜனனி அய்யர். படத்தின் பெயர் தெகிடி. அசோக் செல்வன் கதாநாயகன். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் பி.ராஜேஷ் எழுதி, இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர்... ""தெகிடி என்பது தாயம், பகடை போன்று ஒரு விளையாட்டைக்  குறிக்கும் சொல். தந்திரமாக எதிரிகளை வீழ்த்தும் விளையாட்டாக நம் தமிழ் சமூகத்தில் இருந்து வந்தது.  ஆனால் அந்த சொல்லோ, விளையாட்டோ இப்போது நம்மிடம் இல்லை. அந்த விளையாட்டின் பாணியில் இந்த திரைக்கதை அமைந்துள்ளதால், அந்த பெயரை இதற்கு தலைப்பாக வைத்துள்ளேன். கிரைமாலஜி படித்து விட்டு வரும் ஹீரோவுக்கு ஒரு கும்பலை பின் தொடர்ந்து செல்லும் வேலை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஹீரோவை சுற்றி எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. கொடுக்கப்பட்ட அந்த வேலையை அவர் எப்படி பூர்த்தி செய்தார்? என்பது கதை. ஹாலிவுட்டில் வரும் கிரைம் டிராமா பாணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' என்கிறார் இயக்குநர்.

மலையாளத்தில் ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த "த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில்   கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.  இது குறித்து மீனாவிடம் பேசிய போது.... "" த்ரிஷ்யம் வெற்றி நான் எதிர்பார்க்காத ஒன்று. கதை பிடித்துப் போனதால் மட்டுமே அதில் நடித்தேன். தொடர்ந்து படங்களில் நடிப்பது குறித்து என்னிடம் வரும் கதைகள்தான் தீர்மானிக்க வேண்டும். தற்போது எந்த படங்களிலும் நடிக்கும் முடிவில் இல்லை'' என்றார் மீனா. ஆனால் இப்படத்தில் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பில் மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.