/

திரைக்கதிர்

வெகு நாள்களுக்குப் பின் மலையாளத்தில் மோகன்லாலுக்கு வெற்றி வாகை சூடித் தந்திருக்கிறது "த்ரிஷ்யம்'. இதன் தமிழ் பதிப்பு

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:21 am

ஜி. அசோக்

வெகு நாள்களுக்குப் பின் மலையாளத்தில் மோகன்லாலுக்கு வெற்றி வாகை சூடித் தந்திருக்கிறது "த்ரிஷ்யம்'. இதன் தமிழ் பதிப்பு உரிமையை பெற தயாரிப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் இப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பு சுரேஷ் பாலாஜி வசம் வந்துள்ளது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். தமிழ் நட்சத்திரங்கள் பலருக்கும் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்ட ரஜினிகாந்த், இதில் நடிக்கவும் விரும்பினார். இதே போல் விக்ரமும் நடிக்க விருப்பப்பட்டார். ஆனால் இப்போது நடிப்பவர் கமல்ஹாசன். இந்த திடீர் மாற்றங்களுக்குக் காரணம் என்ன? என்பது குறித்து ஜீது ஜோசப்... ""ரஜினிகாந்த், விக்ரம் இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் நெகிழ்ந்து போயினர். இது போன்ற படங்கள் தமிழில் வர வேண்டும் என்கிற அவர்களது ஆசையையும் தெரிவித்தனர். அதே சமயத்தில் தங்களது ரசிகர்கள் இந்த பட ஹீரோ வேடத்தை ஏற்பார்களா என்பதில் இருவருக்கும் சந்தேகம் இருந்தது. கமல் இந்த வேடத்துக்கு பொருந்துவார் என முடிவு செய்து இறுதியில் அவருக்கு அழைப்பு விடுத்தோம். அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.''

விஜயகாந்த் நடித்த "பூந்தோட்ட காவல்காரன்', சரத்குமார் நடித்த "பாலைவன பறவைகள்', "காவல் நிலையம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய செந்தில்குமார் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி, இயக்கும் படம் "சின்ன பருவத்திலே'. குழந்தை உலகத்தை படம் பிடிக்கும்விதமாக உருவாகியுள்ள இக்கதை, குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு படமாகவும் உருவாகிறது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் கோலிவுட்டின் முன்னணி முகங்கள் சிலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்க உள்ளனர். சிறு வயதில் குழந்தைகள் செய்யும் தவறுகளை பெற்றோர்கள் திருத்தி வளர்த்தால்தான் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர முடியும் என்ற கருவை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டாகச் செய்யும் தவறுகளை பெற்றோர்கள் உரிய நேரத்தில் களையவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை என்னவாகும்? சிறு வயதில் செய்யும் தவறுகள் அவர்களின் வாழ்க்கையைப் பின்னாளில் எப்படி மாற்றுகிறது? போன்ற விஷயங்கள் இக்கதையின் பிரதானம். ஜூப்ளின் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடக்கவிருக்கிறது.

பொதுவாக சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இயக்குநர்கள் திரைக்கதை அமைப்பது வழக்கம். அவ்வாறு உருவாகும் கதைகளில் தங்களுக்கு நேர்ந்த சில அனுபவங்களைச் சேர்த்து காட்சிக்கு பலம் சேர்ப்பர். தனது காதல் அனுபவங்களில் கொஞ்சம் கற்பனை கலந்து கௌதம் வாசுதேவ்மேனன் "விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை இயக்கினார். இந்த பாணியில் உருவாகும் படம் "ஒரு மோதல் ஒரு காதல்'. விளம்பர பட உலகில் பரவலாக அறியப்பட்ட கீர்த்திகுமார் இரண்டு பெண்களைக் காதலித்த நிஜ அனுபவங்களைக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்.விவேக், மேகா, பர்மன், ரூபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர்... ""பெங்களூரில் வேலை பார்த்து வந்த சமயத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவரும் என்னை விரும்பினார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த சமயத்தில், என்னுடைய முதல் காதல் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அப்போது நடந்தது என்ன?  என்பதுதான் கிளைமாக்ஸ்'' என்கிறார் கீர்த்திகுமார்.

எப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் துவார்.ஜி.சந்திரசேகர் தயாரிக்கும் படம் "தொட்டால் தொடரும்'. தமன், அருந்ததி, பாலாஜி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பி.சி.சிவன் இசையமைத்துள்ளார். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவில், திரைத்துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட கேபிள் சங்கர் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். ஒவ்வொரு மனிதனுக்குமான பிரச்னைகள் வெவ்வேறு. அது வேண்டும், இது வேண்டும் என்கிற தேடலில் எதுவுமே கிடைக்காத நிமிடம்தான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி. சில பிரச்னைகள் அபாயகரமானவை. அவற்றைத் தொட்டு விட்டால் கால காலத்துக்கும் துரத்திக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொள்பவர்களை உருவகப்படுத்தும் கதை. ஐ.டி.துறையில் பணியாற்றும் தமனும், கால் சென்டரில் பணியாற்றும் அருந்ததியும் காதலிக்கிறார்கள். அவர்களின் காதலின் பின்னணியில் அந்தந்த துறைகளின் பிரச்னைகளைச் சொல்வதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்னையில் சிக்கி அதிலிருந்து தப்பிக்கும் அருந்ததியை அந்தப் பிரச்னை அவரை அறியாமலேயே துரத்துகிறது. அதைக் கண்டுபிடிக்கும் நாயகன் அதை எப்படிச் சரி செய்கிறார் என்பது கதை.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, கடந்த ஆண்டு "டி டே' என்ற படத்தில் பாலியல் தொழிலாளி பெண் வேடம் ஏற்று நடித்தார். இதில் ஹீரோ ராம்பாலுடன் ஸ்ருதி நடித்த நெருக்கமான காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. தற்போது இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. ஸ்ருதி நடித்த காட்சிகளுக்கு அவரையே டப்பிங் பேச அழைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஸ்ருதி அப்படத்துக்கு தன்னால் டப்பிங் பேச முடியாது என்றும், அப்படத்தைத் தமிழில் வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ருதி வெளியிட்ட அறிவிப்பில்... ""டி டே' படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் போவதாக அறிந்தேன். அதற்கு என் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது. அது எனது உரிமையை மீறும் செயலாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறேன். இதுபற்றி முழு விவரங்களையும் விரைவில் தெரிவிப்பேன். நான் இப்படிச் சொல்வதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. விரைவில் அது பற்றி பேசுவேன்'' எனக் கூறி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார் ஸ்ருதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.