டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

தனக்கு நரம்புத் தளர்ச்சி இருப்பதாகவும், இதனால் சில சமயங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டிவிட்டர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:17 am

ஜி. அசோக்

தனக்கு நரம்புத் தளர்ச்சி இருப்பதாகவும், இதனால் சில சமயங்களில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் ஹன்சிகாவே டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதற்கான மருத்துவச் சிகிச்சையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. இதனால் தனது நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற ஹன்சிகா முடிவு செய்துள்ளார். தொடர்ந்து படப்பிடிப்புகளில் இருப்பதால் உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்க முடியவில்லை. இந்த மாதத்துக்குள் அவர் சிகிச்சைக்காகச் செல்ல இருக்கிறார். ஹன்சிகா கேரளத்தில் தங்கி சிகிச்சை பெறும் சமயத்தில் சில மலையாளக் கதைகளைக் கேட்கும் முடிவில் இருக்கிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் எனத் தென்னக மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா இதுவரை மலையாளத்தில் நடிக்கவில்லை.  இந்த முறை எப்படியாவது மலையாளத்தில் அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள், நேர்த்தியான கதைகளுடன் இயக்குநர்களைத் தயார்ப்படுத்தி வருகிறார்களாம். ஹன்சிகாவிடம் இயக்குநர்களை கதை சொல்ல வைப்பதற்கும் நேரம் கேட்டுள்ளார்கள். இதனால் ஹன்சிகா கேரளா வந்ததும் புதுப் பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருணாஸ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களைத் தொடர்ந்து மனோபாலாவும் தயாரிப்பாளராகிறார். அவர் தயாரிக்கும் படத்துக்கு "சதுரங்க வேட்டை' என பெயரிடப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வினோத். நட்ராஜ் கதாநாயகனாக  நடிக்கிறார். இஷாரா நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். பொன்வண்ணன், இளவரசு, பிறைசூடன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர்.  "இயற்கையின் சமநிலை தவறும் போது  அழிவு நடக்கிற மாதிரி, மனிதனின் சமநிலை தவறும் போதும் அழிவேற்படும்' என்ற கருத்தைக் கருவாகக் கொண்டு உருவாகிறது இப்படம். ""அது வேண்டும், இது வேண்டும் என்கிற தேடல் மிகுந்த இந்த வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத போதுதான் பிரச்னை தொடங்குகிறது. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று வருகிற தைரியம், பணத்தையும் எப்படியும் சம்பாதிக்கலாம் என்ற வழி வகைகளைக் கற்றுக் கொடுக்கிறது. இறந்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். ஆனால் இருக்கும் போதே அபரிமிதமான பணம் கையில் இருந்தால் சொர்க்கத்தை பார்க்கலாம் என எண்ணுகிற சிலரின் வாழ்க்கைதான் இந்த கதை. காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவாகியுள்ள இப்படத்தின் மொத்த திரைக்கதை 6 உப கதைகளாகச் சொல்லப்பட உள்ளது'' என்றார் இயக்குநர் வினோத். 

கோலிவுட்டில் சமீப காலமாக பேருந்து பயணத்தின் போது நடக்கும் சம்பவங்கள் கதையாகி வருகின்றன. இந்த பாணியில் மறைந்த ராசுமதுரவன் கடைசியாக இயக்கிய "சொகுசுப் பேருந்து', எஸ்.பி.ராஜகுமார் இயக்கி வரும் "பட்டைய கௌப்பணும் பாண்டியா' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. கிராமத்துக்கும் மதுரை மாநகரத்துக்கும் இடையில் ஒடும் ஒரு மினி பேருந்தை மையமாகக் கொண்டு இந்த இரண்டு கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பேருந்தின் ஓட்டுநர் விதார்த்துக்கும், தினமும் பயணிக்கும் மனீஷாவுக்கும் காதல். அதனால் ஏற்படும் பிரச்னைகளைக் காமெடியாக சொல்வதுதான் "பட்டைய கௌப்பணும் பாண்டியா'. மனீஷா கதாபாத்திரத்தில் நடிக்க பிந்து மாதவி, ஓவியா, அனன்யா, சுனேனா, ஸ்வாதி உள்ளிட்ட பல நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க முடியாததால், இறுதியில் மனீஷா தன் வழக்கமான சம்பளத்தைக் குறைத்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதே போல் தினமும் பேருந்தில் பயணிக்கும் ஜானி, யுவன், லியாஸ்ரீ, லீமா ஆகியோரின் காதலை முன்னிறுத்தி "சொகுசுப் பேருந்து' கதை உருவாக்கப்பட்டுள்ளது.

போரஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "நான் பொன்னொன்று கண்டேன்'. கதாநாயகனாக அஸ்வின்ராஜ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனாமிகா நடிக்கிறார்.  யுக்திவேல், பேயக்கா மீனா, தேனிமுருகன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். ""காதல் மழை மாதிரி... இசை மாதிரி... என கவிதை கிறுக்குகிற காதல்கள் இப்போது சினிமாவில் இல்லை. அடுத்த கட்டத்தில் இருக்கிறது சினிமா. அந்த சினிமாவுக்கு ஏற்ற கதை இது. தீராத அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யார்? என்பதுதான் லைன். எல்லாம் இழந்தவனுக்கு ஒரு சின்ன அன்பு கை வந்து சேர்ந்தால், அதுதான் இந்த உலகத்தில் அவனுக்குப் பேரின்பம். அரவணைக்கவும், அன்பு செலுத்தவும் யாருமில்லாத பொழுதுகளில் வந்து சேருகிற ஒரு காதல், திடீரென்று கை நழுவி விழும் போது, அந்த வாழ்க்கையின் எல்லை என்ன? அந்தக் காதல் மீண்டும் சொல்லப்பட்டதா? சொல்லாமலே கொல்லப்பட்டதா? என்பதே கதை. பேருந்து நிலையத்தின் பின்னணியில் கதை சொல்லப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கனமான அர்த்தங்களைக் கொடுக்கும் படமாக இது இருக்கும்'' என்றார் சஞ்சீவ் சீனிவாஸ்.

"ஜெயம் கொண்டான்', "வந்தான் வென்றான்', உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இயக்கும் அடுத்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு "சக்கரை' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது. இப்போது அந்த பெயர் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி கண்ணன்... "" நகைச்சுவைதான் களம் என்பதால், அதற்கு பொருத்தமான தலைப்பு பிடிப்பதில் கவனமாக இருந்தேன். சில நேரங்களில் கதைக்கும், காமெடிக்கும் தலைப்பு பொருத்தமாக அமைய வேண்டும். இல்லையென்றால் சொல்ல வந்த விஷயம் எதுவும் எடுபடாமல் போய் விடும். அதனால்தான் இந்தப் படத்துக்கு மூன்று தலைப்புகள் தேர்வு செய்திருந்தேன். விமலுடன் சதிஷ் நடிப்பதாக இருந்தது. இதனால் "சக்கரை' என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் சூரி நடிக்கிறார். இவர்களுக்கு "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாக இருந்தது. அதனால்தான் இந்த பெயர் மாற்றம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து படம் உருவாகி வருகிறது'' என்றார் கண்ணன்.  

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ருதி, தெலுங்கு, ஹிந்தியில் பரவலாக நடித்து வருகிறார். இரண்டு மொழிகளிலும் இதுவரை நடித்த 4 படங்களுமே ரீமேக் படங்களாக அமைந்து விட்டன. இதனால் அவரை பாலிவுட்டில் "ரீமேக் குயின்' என அழைக்கின்றனர். அதே சமயம் ரீமேக் படங்களில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால் அத்தகைய படங்களையே ஸ்ருதி தேர்வு செய்வதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டர் பகுதியில் கேட்ட கேள்விக்கு ஸ்ருதி அளித்துள்ள பதில் இது... ""ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்று நானாகத் தேடிச் செல்வதில்லை. தானாக அமைந்த வாய்ப்புகள் இவை. ரீமேக் படங்களில் நான் மட்டுமல்ல. சோனாக்ஷி உள்ளிட்ட பல பாலிவுட் ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனால் நான் மட்டும் ரீமேக்கில் நடிப்பது போல் பரப்பி விடுகிறார்கள். ரீமேக் என்பது ரிஸ்க் இல்லாத ஒன்றுதான். ஆனால் 100 சதவீதம் திருப்தி கொடுக்காது. அதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஹிந்தியில் "வெல்கம் பேக்', "கப்பர்' ஆகிய படங்களில் நடிக்கிறேன். ஹிந்தியில் அறிமுகமான "லக்' சரியாகப் போகவில்லை. ஆனால் தெலுங்கில் நான் நடித்த மூன்று படங்களுமே ஹிட். இவற்றை அனுபவமாகப் பார்க்கிறேன்'' என அந்த ரசிகருக்குப் பதிலளித்துள்ளார் ஸ்ருதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.