ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்த மூலத்தைக் குணப்படுத்தும் சில வழிகள்!
இரத்தம் மலத்துடன் வெளியேறுவதற்கு வாயு மற்றும் கபதோஷங்களின் சேர்க்கையினால் ஏற்படக்கூடும் என்றும், பித்தத்தினுடைய


எனக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை மலத்துடன் இரத்தம் வருகிறது. மருத்துவப் பரிசோதனையில் வெளிமூலம் என்று தெரிந்து அதற்கான மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். சிறிது குணம் தெரிந்தாலும் அவ்வப்போது மலத்துடன் இரத்தம் வருகிறது. இதற்கு ஆயுர்வேதம் கூறும் தீர்வு என்ன?
ஜீ.ராமலிங்கம், கொரட்டூர், சென்னை.
இரத்தம் மலத்துடன் வெளியேறுவதற்கு வாயு மற்றும் கபதோஷங்களின் சேர்க்கையினால் ஏற்படக்கூடும் என்றும், பித்தத்தினுடைய சீற்றத்தாலும், இரத்தம் கெடுவதால் இரத்த மூலம் ஏற்படலாம் என்றும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. வறட்சி தரும் உணவினுடைய சேர்க்கை, எண்ணெய்ப்பசை உடலுக்குக் கேடு தருமோ என்று நினைத்து நெய், வெண்ணெய், எண்ணெய் ஆகியவற்றை சிறிய அளவில் கூட சாப்பிடாதிருத்தலாலும், வாயுவினுடைய சீற்றம் மலத்தை வெகுவாக இறுக்கி அதை மலப்பையின் பகுதியை சுற்றி இருக்கும் இரத்தக் குழாய்களை அழுத்துவதின் வாயிலாக மெலிதான நுரையுடன் மற்றும் வலியுடன் இரத்தக் கசிவானது மலத்துடன் பெரும் சிரமத்திற்கிடையே வெளியேறும். உடல் கடுமையாக சோர்ந்துபோகும். எளிதில் செரிக்காத அதிக எண்ணெய்ப் பசை கொண்ட உணவுகளின் சேர்க்கையினால் கபம் எனும் தோஷம் சீற்றமுற்று மலமானது இளகி வெண்ணிறம், மஞ்சள் நிறம், எண்ணெய் பிசுபிசுப்பு, கனம், குளிர்ச்சி போன்ற நிலைகளில் கெட்டியான நூலோடு கூடி வெளிர் மஞ்சள் நிறத்துடன் வழுவழுப்புடன் கூடிய இரத்தக் கசிவுடன் வெளியேறும். ஆசன வாயில் பூசப்பட்டதுபோன்ற உணர்ச்சி மற்றும் மரத்துப்போன தன்மையும் காணப்படும்.
இதனால் வாயுவினுடைய சீற்றத்தால் ஏற்படும் மலங்கலந்த இரத்த மூலத்திற்கு நெய்ப்பு மற்றும் குளிர்ச்சி தரும் உணவும் மருந்தும் பயன்படக்கூடும். கபத்தின் வாயிலாக ஏற்படும் இரத்தமூலத்திற்கு வறட்சி மற்றும் குளிர்ச்சி தரும் உணவும் மருந்துமே பயனுள்ளதாக இருக்கும். பித்தம் மற்றும் கபத்தினுடைய கலப்பினால் இரத்தமூலம் ஏற்படுவதாக இருந்தால் பேதி மருந்து மூலம் இந்த பிரச்னையைக் குணப்படுத்த வேண்டும். இவற்றின் சேர்க்கைக்கு தகுந்த மாதிரி இரத்தத்தில் ஏற்படும் தோஷக் கலப்பினை நன்றாக ஊகித்தறிந்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதில் தவறு ஏற்படும்பட்சத்தில் அது இரத்தபித்தம் எனும் நோயையும், காய்ச்சல், தண்ணீர் தாகம், பசியின்மை, ருசியின்மை, மஞ்சள்காமாலை, உடல்வீக்கம், ஆசனவாய் வலி, தோல் தடிப்புகள், சோகை, குடல் காற்று மலம் மற்றும் சிறுநீர் தடை, தலைவலி, திமிர்ப்பு, உடல் கனம் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கக் கூடும்.
கசப்புச் சுவை நிறைந்த மருந்துகளை உபயோகிப்பதன் வாயிலாக பசியை நன்றாகத் தூண்டிவிட்டு தோஷத்தின் சீற்றத்தை அடக்கி இரத்தக் கசிவையும் தடுக்கும் வழிகள் தங்களுடைய விஷயத்தில் நன்மை தரக்கூடும். அதற்கான சில மூலிகை பிரயோக விசேஷங்கள் சரகசம்ஹிதை எனும் ஆயுர்வேத புத்தகத்தில் காணப்படுகிறது. அவை:
1. குடகப்பாலைப் பட்டையை சுமார் 50 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 125 மில்லி லிட்டராக வெந்ததும் வடிகட்டி காலையில் 65 மில்லி லிட்டரும் மாலையில் 60 மில்லி லிட்டரும் இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி சேர்த்து சாப்பிடுவதால் நெய்ப்புடன் கூடிய இரத்தக் கசிவானது உடனடியாக நின்றுவிடும்.
2. மாதுளம் செடியின் பட்டைக் கஷாயமும், சந்தனக்கட்டையின் கஷாயமும் மேற்குறிப்பிட்டதுபோல் தயாரித்து சுக்குப் பொடியுடன் சாப்பிடுவதும் சிறந்ததே.
3. வெண்சந்தனம், நிலவேம்பு, சிறுகாஞ்சுரி வேர் மற்றும் சுக்கு ஆகியவற்றின் கஷாயம்.
4. மரமஞ்சள், இலவங்கப்பட்டை, அகில் கட்டை, வெட்டிவேர் மற்றும் வேப்பம்பட்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட கஷாயம் இரத்தமூலத்தை உடனடியாக குணப்படுத்தக் கூடியவை.
5. குடகப்பாலையினுடைய பட்டை மற்றும் பழங்கள், அதிவிடயம் மற்றும் மரமஞ்சள் ஆகியவற்றினுடைய தூள் ஆகியவற்றுடன் தேன் குழைத்துச் சாப்பிட இரத்தகசிவு உடனடியாக நிற்கும்.
6. அல்லி, முள்ளிலவு, செஞ்சந்தனம், கருப்பு எள்ளு மற்றும் வெள்ளிளோத்திப்பட்டை பொடித்து ஆட்டுப் பாலுடன் சாப்பிட்டு அரிசி சாதத்தை ஆட்டுப்பால் சேர்த்துச் சாப்பிடுதல் இரத்தக் கசிவை நிறுத்தும்.
7. தண்டுக் கீரையின் சாற்றை எடுத்து ஆட்டுப்பாலுடன் கலந்து சாப்பிட மூலத்திலிருந்து இரத்தம் விழுதல் நிற்கும்.
8. வட்டத்திருப்பி, குடகப்பாலை விதை, மரமஞ்சள், சுக்கு, வில்வஇலை மற்றும் ஓமம் சேர்த்துக் காய்ச்சப்பட்ட மூலிகைத் தண்ணீரைக் குடிப்பதால் இரத்தமூலத்திற்கு ஏற்படும் வலியைப் போக்கிவிடும்.
9. மஞ்சள், நிலவேம்பு, கோரைக்கிழங்கு மற்றும் சிறுகாஞ்சுரி ஆகியவற்றின் சூரணம் ஆகியவை இரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தக்கூடியவை.
10. அதிகமான வலியுடன் கூடிய இரத்தமூலத்திற்கு குடகப்பாலையினுடைய பழம் மற்றும் பட்டை, குங்குமப்பூ, அல்லி, வெள்ளிளோத்திப்பட்டை மற்றும் தாதிரிப்பூ ஆகியவை சேர்த்துக் காய்ச்சப்பட்ட மூலிகை நெய்யினால் விரைவில் குணமேற்படுவதாக சரகசம்ஹிதையில் காணப்படுகிறது.
11. மாதுளம்பழம் மற்றும் பார்லி எரித்த கரி ஆகியவற்றை நெய்யுடன் காய்ச்சி சாப்பிடுவதால் இரத்தமூலம் உடனடியாக குணம் ஆகும்.
12. கண்டங்கத்திரி மற்றும் அம்மான் பச்சரிசி ஆகியவற்றை நெய்யுடன் காய்ச்சி சாப்பிட வலியுடன் கூடிய இரத்தமூலம் குணமடையும்.
13. நெல்பொரியை குங்குமப்பூ மற்றும் அல்லி மலர்களுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடிப்பதனால் இரத்தமூலம் குணமாகும்.
14. சின்ன வெங்காயத்தை மோருடன் சேர்த்துச் சாப்பிடுவதாலும், கொண்டைக்கடலை சூப் புளித்த மோருடன் சாப்பிடுவதாலும், பச்சைப்பயறு, கொண்டக்கடலை ஆகியவற்றை கஞ்சியாக தயாரித்து பாலுடன் கலந்து சாப்பிடுவதாலும் இரத்தமூலம் குணமாகும்.
15. கறுப்பு எள்ளுப்பொடியுடன் வெண்ணெய் குழைத்துச் சாப்பிடுதல், குங்குமப்பூவைப் பொடித்து வெண்ணெய் சர்க்கரை குழைத்துச் சாப்பிடுதல், ஆடாதோடை வேரை கஷாயமிட்டு ஆசன வாயைக் கழுவுதல், பதிமுகம், செஞ்சந்தனம், தர்ப்பை, நாணல், அதிமதுரம், தாமரைத் தண்டு ஆகியவற்றைக் கஷாயமிட்டு அந்த கஷாயத்தில் ஆசன வாய் படும்படி அமர்ந்திருத்தல், வாழை இலையை ஆசன வாய்ப்பகுதியில் படும்படி அமர்ந்து கொள்ளுதல், ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய சததொதக்ருதத்தை ஆசனவாயில் பூசுதல் போன்றவை இரத்தமூலத்தை குணப்படுத்தும் ஒரு சில வழிகளாகும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...