ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அத்தி இலை மாத்திரை!
அத்தி இலைக் குடிநீர்: ஒரு கைப்பிடி பச்சரிசியை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் களைந்த கழுநீரை சுமார் 2 அவுன்ஸ் எடுத்து


அத்தி ஒரு சித்த மூலிகை என்று கேள்விப்படுகிறேன். அதனுடைய இலைகளின் மருத்துவகுணம் என்ன? அதை எப்படி தயாரித்துச் சாப்பிடலாம்?
பிரசாத், வாலாஜாபாத்.
அத்தி இலைக் குடிநீர்: ஒரு கைப்பிடி பச்சரிசியை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் களைந்த கழுநீரை சுமார் 2 அவுன்ஸ் எடுத்து அதில் அத்தி இலை 40 கிராம், சர்க்கரை 20 கிராம் இவ்விரண்டையும் நன்கு அரைத்துக் கலந்து சிறிது நேரம் கழித்து வடிகட்டிக் கொள்ளவும். மலசுத்தி சரியாக ஆகாவிடில் இதிலேயே வேளைக்கு 5-10 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து கலக்கிச் சாப்பிடலாம். மலசுத்தியாவதற்கு ஏற்றவாறு சிற்றாமணக்கு எண்ணெய்யைக் கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். அல்லது செவதை வேர் 3 கிராம் அல்லது கடுக்காய்தோல் தூள் 5 கிராம் வரை சேர்த்துக் கொள்ளலாம். அதிகமாக சிறுநீர் வெளியாகும் போது காலை மாலை வெறும் வயிற்றில் 150 மில்லி லிட்டர் மோரில் 15 கிராம் அத்தி இலையைச் சேர்த்து அரைத்துக் கலக்கிக் குடிக்கலாம்.
மார்பு படபடப்பு, இதயநோய், மயக்கம், தலை சுற்றுதல், இரத்தக் கசிவு உபாதை இவை இருக்குமாயின் கொஞ்சம் பாலும், சீமைக் காஞ்சூரி சர்க்கரையும் (துரஞ்சபீன்), சேர்த்துக் கொள்ளலாம். பாலும் கழுநீரும் உலர்திராட்சையும் துரஞ்சபீனும் சேர்த்துக் கொடுக்க சிறுநீர் தாராளமாகப் பெருகி சிறுநீரகம் சுத்தமாகிறது.
சிறுநீரகச் சுத்தம், இரத்தக்கொதிப்படங்கி தெளிவடைதல், இதயத்திற்கு பலம், மலசுத்தி, சிறுநீர்பையில் ஏற்படும் கொதிப்படங்குதல் ஆகியவை இதன் குணங்கள்.
அத்தி இலை மாத்திரை: அத்தி இலையை நன்கு அரைத்து மாத்திரையாக்கிக் கொள்ளவும். வெயிலிலிட்டு நன்கு காயவைத்துக் கொள்ளவும். அல்லது அத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை பெரிய பீங்கான் பேஸினிலிட்டுக் காய வைத்து மெழுகு பதத்தில் மாத்திரையாக்கிக் கொள்ளவும். அத்தி இலை பச்சையாகக் கிடைக்காவிடத்தில் இதை உபயோகப்படுத்திக் கொள்ளவும். பாலும் சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட இதயப் படபடப்பு, கல்லீரல் கெடுவதால் ஏற்படும் வயிற்றுவலி, புளித்த ஏப்பம், உணவு செரிக்கும் தறுவாயில் ஏற்படும் வயிற்றுவலி போன்றவற்றுக்கு நல்லது. புளித்த பித்தத்தினால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி உள்ளவர்கள் பருப்பு வகைகளைச் சேர்க்கக் கூடாது. வயிற்றுவலி இல்லாதிருந்தால் பாசிப்பருப்பு வேக வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். மலசுத்தியாகாவிட்டால் முன் கூறியவாறு விளக்கெண்ணெய், கடுக்காய்த்தூள், செவதை வேர் இவற்றில் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளலாம். வலி இருக்குமிடத்தில் அத்தி இலையை அரைத்துப் பூசி ஒத்தடம் செய்து மேலே துணிவைத்துக் கட்டவேண்டும். வலி நிற்கத் தாமதமானால் மணிக்கொரு தரம் இதே மருந்தை உள்ளுக்குச் சாப்பிடச் செய்யலாம். ஒரு அவுன்ஸ் விளக்கெண்ணெய்யையும் முன் சொன்ன குடிநீருடன் கலந்து கொடுக்கலாம். உணவு செரிக்காமல் வலி இருந்தால் வாயில் விரலிட்டு வாந்தி செய்து விடலாம். சாப்பாடு ஜீரணமாகும் வேளையில் ஏற்படும் வலிக்கு சாப்பிடுவதற்கு ஒரு மணி முன்னதாகவே ஒரு வேளை மருந்து சாப்பிடுவது நல்லது.
பேதி, கிராணி, இரத்தக்குறைவு இருக்கும்போது ஏற்படும் மலமிளகிப்போகுதல் போன்றவற்றுக்கு இதன் உபயோகம் நல்ல குணம் அளிக்கின்றது. நான்கு அத்தி இலை, மிளகு 2 (எண்ணிக்கையில்) இவற்றை அரிசிக் கழுநீர் விட்டு சட்டினி மாதிரி அரைத்துச் சிறிது கரியுப்பு சேர்த்து சுமார் 4 அவுன்ஸ் மோரில் கரைத்துத் துணியில் கசக்கி வடிகட்டிக் கொள்ளவும். இதைத் தினம் 3 வேளை சாப்பிடச் செய்யவும். வயிறு உப்பியிருந்தால் அல்லது 3 நாட்களில் குணம் தெரியாவிட்டால் அவசியத்திற்கேற்றவாறு ஆமணக்கெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம். நரம்பெடுத்த அத்தி இலையை வாட்டி அரைத்து மிளகு, உப்பு, மோர் சேர்த்துக் கூட்டு செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். இரவு மோருக்குப் பதில் பால் சேர்த்த சாதம், வீக்கமிருந்தால் உப்பும் தண்ணீரும் நீக்கி பால்சாதம் மாத்திரம் சாப்பிடலாம். இதில் சுகம் கிட்டாவிடில் அரை லிட்டர் தண்ணீரில் 100 கிராம் அத்தி இலையை அரைத்துக் கலக்கி வடிகட்டிச் சுட வைத்து இதமான சூட்டில் எனிமா கொடுக்கலாம். அவசியத்திற்கேற்றவாறு இதில் 15- 30 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.
பசி குறைவாக இருந்தாலும் இதே மாதிரி குடிநீர் தயாரித்துச் சாப்பிடலாம். அத்திப்பிஞ்சு விதைநீக்கிய கறி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இவற்றின் தண்ணீர் மட்டும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுக்கொண்டு எண்ணெய் நெய் சேர்க்காமலிருக்க லவண பாஸ்கரம் கந்தகத்ராவகம் போன்ற கடும் பாசனமருந்துகளை விட இதில் குணம் காணுகின்றது. அத்திக்காயை கறியாகவோ கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு, பசியின்மை நன்கு நிவர்த்தி அடைகின்றது.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...