திரைக்கதிர்
நடிகர் சங்க விவகாரங்களில் விஷால் எப்போதும் அதிரடிதான். வரவு - செலவு கணக்கு தொடங்கி புதிய கட்டடம் வரை எல்லா


நடிகர் சங்க விவகாரங்களில் விஷால் எப்போதும் அதிரடிதான். வரவு - செலவு கணக்கு தொடங்கி புதிய கட்டடம் வரை எல்லா விஷயங்களிலும் சீனியர்களுக்கு "கிலி' கொடுக்கும் விஷால், இந்த முறை நடிகர் சங்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதும் அதே பரபரப்பு. அரங்கம் அதிரும் கைதட்டலோடு மைக் பிடித்தவர்... ""நான் நிச்சயமாக நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு வர மாட்டேன். தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் இல்லை. நடிகர் சங்கம் என்றாலே சீனியர்கள்தான் என்று சொல்லுகிறார்கள். இளம் தலைமுறைக்கும் இங்கே இடம் இருக்கிறது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நான், கார்த்தி, ஜீவா, ஆர்யா என எல்லோரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து அந்த வருமானத்தை சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என பரபரப்பை பற்ற வைத்து விட்டு போனார். "இந்தத் திட்டம் நல்லாயிருக்கே...' என கோலிவுட்டின் பல இடங்களில் குரல் ஒலிக்க ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என சீனியர்களும் இந்தப் படத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? என அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது விஷாலின் ஐடியா.
சினிமாவில் நடிக்கும் நேரம் போக, துறை சார்ந்த வெவ்வேறு முயற்சிகளில் கவனம் செலுத்துவது பாலிவுட் நடிகைகளின் வழக்கம். தற்போது ஆல்பங்களில் பாடி, நடனமாடுவதைப் பெரும்பாலான ஹீரோயின்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் முமைத்கான். ஒரு பாடலுக்குக் கவர்ச்சி நடனம் என்ற பார்வையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்ற முமைத்கான், கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகிராவின் ஆல்பத்தைப் பார்த்து அதே பாணியில் தன் இசை மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்த எண்ணினார். இதையடுத்து, "அடிக்ஷன்' என்ற மியூசிக் ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். மியூசிக் வீடியோவாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் முமைத்கான் ஷகிராவின் "லுக்'கில் ஆல்பத்தில் நடனமாடியுள்ளார். வசீகரிக்கும் குரலில் பாடல்கள் பாடியிருப்பது இன்னும் சிறப்பு. பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்துக்கு சர்வதேசப் புகழ்பெற்ற டி.ஜே.சீஸ்வுட் இசையமைத்துள்ளார். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். பரவலான பாராட்டுகளால் அடுத்தடுத்த மியூசிக் ஆல்பங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் முமைத்.
விஜய்யின் "கத்தி', விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "ஐ', விஷாலின் "பூஜை' ஆகிய மூன்று படங்கள் தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளில் "லிங்கா' வெளிவருகிறது. இதற்காக ஒரே கட்டமாக ரஜினியின் காட்சிகள் படமாகி வருகின்றன. இதையடுத்து பொங்கல் பண்டிகை நாளில் அஜித்தின் படம் வெளிவருகிறது. கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் நடந்து வருகிறது. அனுஷ்கா முதன் முறையாக அஜித்துடன் இப்படத்தில் நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்துக்காக இதுவரை இல்லாத இரு விதத் தோற்றங்களில் தோன்றுகிறார் அஜித். அனுஷ்காவுடன் அஜித் இணைந்து வரும் காட்சிகளில் பெப்பர் சால்ட் தோற்றத்தில் அதாவது கறுப்பு, வெள்ளை தலைமுடியுடன் தோன்றுகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளாக வரும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் கரு கரு தலைமுடியுடன் நடிக்கிறார் அஜித். இதற்காக வழக்கமான பெப்பர் சால்ட் தலைமுடிக்கு கறுப்பு நிற டை அடித்து இளமைப் பொலிவுடன் "காதல் கோட்டை' அஜித் தோற்றத்துக்கு தன் உடலைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளாராம் அஜித்.
1958-ஆம் ஆண்டு "அல்லி கலா நாடக மன்றம்' ஆரம்பித்து தேனி, அல்லி நகரம் பகுதிகளில் நாடகம் போட்டதுதான் பாரதிராஜாவின் முதல் கலைப் பயணம். 80 ரூபாய் கையில் சேர்ந்தால் மேடை, ஸ்கீரின், மேக்கப் என அமர்க்களமாக நாடகம் போட கிளம்பி விடுவார்களாம் பாரதியும், ஆர்.டி.பாஸ்கரும். 80 ரூபாயை ஒவ்வொரு ரூபாயாகச் சேர்ப்பதற்குள் அத்தனை போராட்டம் நடக்கும் அந்தக் காலகட்டத்தில், எப்போதும் 50 ரூபாய் நன்கொடை தந்து உதவி செய்வாராம் ராமானுஜம் என்கிற பெரியவர். அவர் கொடுத்த அந்த ரூபாயில்தான் அல்லி கலா நாடக மன்றமே இயங்குமாம். நிலக்கோட்டையில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்திருந்த ராமானுஜம் கொடுத்த உற்சாகத்தின் காரணமாத்தான் "பாசறை பலிகடாக்கள்', "பரிகாரம்', "ஓ நெஞ்சே...' என ஏகப்பட்ட நாடகங்களை நடத்தியிருக்கிறார் பாரதி. எல்லா நாடகங்களுக்கும் இசையமைத்தவர் பண்ணையபுரம் ராசா என்கிற இளையராஜா. தன் நாடகக் கனவுகளை உயிர் கொடுத்த அந்தப் பெரியவரின் நன்றிக் கடனாக அவரின் மகள் வழி பேரன் லட்சுமணனை தன்னுடையை "அன்னக்கொடி' படத்தின் நாயகனாக்கி கடன் தீர்த்தாராம் பாரதிராஜா.
கடந்த சில வருடங்களாக வெற்றியை ருசிக்காத பார்த்திபனுக்கு, வெற்றியைத் தேடி தந்திருக்கிறது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்.' உடல் உழைப்பு, சினிமா ஆளுமை என எல்லாவற்றையும் பரிசோதனை முயற்சியாகவே முன்வைக்கிற பார்த்திபன், இந்த முறை பரவலான பாராட்டுகளோடு கொஞ்சம் லாபமும் பார்த்திருக்கிறார். இதே உத்வேகத்துக்கு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தையும் தொடங்கியுள்ள பார்த்திபன், மீண்டும் கதை இல்லாமல் ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார். ""எதையும் வித்தியாசமாக செய்வேன் என்கிற பெயர் எனக்கு நிலைத்து விட்டது. உங்களின் வார்த்தைகளிலும், கொடுக்கும் அன்பு பரிசுகளிலும் எப்படி இத்தனை வித்தியாசம்? என்றவர்கள், என் படத்தை அந்த
அளவுக்குக் கண்டு கொள்வதில்லை. அந்த வேகம்தான் கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்கத் தூண்டியது. இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்குக் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. வெற்றி கிட்டாத போது வரும் கண்ணீரைவிட, வெற்றிக்கு அருகில் நின்று அழுகிற தருணம் உன்னதமானது. அடுத்த படம் தயாராக இருக்கிறது. இதிலும் கதை இல்லை'' என்றார் பார்த்திபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...