/

திரைக்கதிர்

"மங்காத்தா' படத்துக்குப் பின் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா. கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:06 am

ஜி. அசோக்

"மங்காத்தா' படத்துக்குப் பின் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாகிறார் த்ரிஷா. கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். "ஆயிரம் தோட்டாக்கள்' என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கதைப்படி அஜித்துக்கு இரட்டை வேடங்கள் என்பதால், மற்றொரு அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி கதாநாயகிகளிடம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வேடத்துக்கு த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் "டல்' அடிப்பதால், அனுஷ்கா நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக  நடிக்க ஒப்புக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் "அஜித் ஜோடியாக நடிக்க எப்போதுமே தயங்கியதில்லை. அவருடன் நடிக்கும் போது இமேஜை விட்டு விலகி நிற்பேன்' என்று த்ரிஷா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கதாபாத்திரத்துக்கு விவேக் தேர்வாகியுள்ளார். இவர் "முகவரி' படத்துக்குப் பின் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார்.

கணவன் மனைவி தங்களது நான்கு வயது குழந்தையுடன் சுற்றுலா செல்கிறார்கள். காரில் செல்லும் வழியில் அந்த பெண் குழந்தை தன் தந்தையிடம் கதை சொல்லும்படி கேட்கிறாள். தந்தையும் கற்பனையான பேய்க் கதை ஒன்றை சொல்கிறார். அக்கதை குழந்தையின் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அந்தக் கற்பனை பேய் கதையே உண்மைச் சம்பவமாக இவர்களுக்குள் எப்படி நிகழ்கிறது என்பதை விவரிக்கும் படமாக உருவாகி வருகிறது "இருக்கு'. கற்பனைக் கதையில் லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் தொழிலதிபர், ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கிக் குடியேறுகிறார். அந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் அமானுஷ்ய சக்தி ஒன்று நடமாடுவதாய் உணருகிறார். அதன் பின் அந்தக் கதைக்கும், இவர்களின் வாழ்கைக்கும் இடையில் நடப்பதை த்ரில் சம்பவங்களுடன் சொல்லுவதே திரைக்கதை. மெரினா மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜெயகாந்த், வேலன்டினா, பேபி ஷோபியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜ்குமார் ஒளிப்

பதிவில் விஜய் சங்கர் இசையமைக்கிறார். திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குவதுடன் தயாரிக்கிறார் எஸ்.டி.அசோக்.

பி.கே.ஜேம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இது என்ன மாற்றம்'. மக்களின் எண்ணங்கள் நன்மையை நோக்கிப் பயணிப்பதாக இருக்க வேண்டும். அப்படி நன்மையை நோக்கி மனித எண்ணங்கள் பயணமாகும் போது இந்த பூமியின் பயணமும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படத்தின் கதைக்கரு உருவாகியுள்ளது. நிபின், சீமா, மது, பாவா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் சத்தியநாராயணன் எழுதி இயக்குகிறார்.

இல்லற வாழ்வில் ஏற்பட்ட கசப்புகளையடுத்து கமலை விட்டு பிரிந்த சரிகா, சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். கடைசியாக கடந்த ஆண்டு "கிளப் 60' பாலிவுட் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தார். இதையடுத்து "ஷூ பைட்' என்ற படத்தில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கவிருந்தார். அப்படம் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. இதன் பின் பட வாய்ப்புகளில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்தார். தன்னைத் தேடி வந்த இயக்குநர்களிடம் கதை கேட்பதைத் தவிர்த்தார். இந்நிலையில் அமிதாப்பச்சனுடன் புதிய தொலைக்காட்சித் தொடரில் நடிக்கிறார் சரிகா. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடக்கிறது. அமிதாப் - சரிகா இணைந்து நடித்த காட்சிகள் படமாகி வருகின்றன. 35 பாகங்கள் கொண்ட இந்தத் தொடர் இந்த ஆண்டு இறுதியில் பிரபல சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்தத் தொடரை பிரபல பட இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்குகிறார். சரிகாவின் மகள்களான ஸ்ருதி, அக்ஷரா இருவரும் நடிகைகளாகி விட்டனர். மகள்கள் சினிமா நடிகையாகிவிட்ட நிலையில் டி.வி. நடிகையாக புதிய தோற்றம் எடுத்திருக்கிறார் சரிகா.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் அமைந்த போதும், தமிழில் நடிக்கவே பெரிதும் விரும்பினார் பூனம் கவுர். இதற்காகக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பளீச்செனத் தெரியும்படி நடிப்பை வெளிப்படுத்தினார். "தம்பிக்கோட்டை', "பயணம்' ஆகிய படங்கள் நல்ல வெளிச்சத்தை உருவாக்கி தந்தன. சமீபத்தில் வெளியான "6 மெழுகுவர்த்திகள்' படத்தில் காணாமற் போன குழந்தைக்குத் தாயாக வேடம் ஏற்று, நடிப்பில் தனி முத்திரை படைத்தார். இருப்பினும் வாய்ப்புகள் இல்லை. தற்போது மீண்டும் "அச்சாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். புதுமுகம் மோகனகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக நடிக்கிறார். ""தமிழில் நடிக்கும் படங்கள் எப்போதுமே எனக்கு நல்ல பெயரைத் தேடி தந்துள்ளன. இருந்தாலும், முன்னணி இடம் கனவாகவே உள்ளது. இந்த முறையும் நம்பிக்கையுடன் தமிழ் சினிமாவுக்கு வருகிறேன். சென்னை, கொடைக்கானல், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக என் வேடம் உருவாகியிருக்கிறது'' என்றார் பூனம் கவுர்.

அரசியல் பிரவேச சர்ச்சைகளுக்குப் பின் "தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகம் கண்டிருக்கிறார் வடிவேலு. வழக்கு சர்ச்சைகள், அரசியல்ரீதியான நடவடிக்கைகள் என ஒரு புறம் மிரண்ட "தெனாலிராமன்' ஒரு வழியாக திரையைத் தொட்டது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிடினும், வடிவேலுக்கு நம்பிக்கை மிகுந்த பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது "தெனாலிராமன்'. தற்போது இயல்பான சினிமா வாழ்க்கைக்கு வந்துள்ள வடிவேலுவை, பல முன்னணி இயக்குநர்கள் சந்தித்து வருகிறார்கள். சர்ச்சைகள் ஒய்ந்த நிலையில், இனி வடிவேலுவை வைத்துப் படமெடுத்தால் ஒன்றும் இல்லை என்கிற நிலை உருவாகியிருப்பதால், வடிவேலுவின் அலுவலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது முதல் தகவல். பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரபுதேவா, சிறிது இடைவெளிக்குப் பின் தமிழுக்கு வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.