திரைக்கதிர்
நீயா நானா? நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி இப்போது படத் தயாரிப்பாளர். குழந்தைகளின் உலகத்தைப் படம் பிடித்துக் காட்டும் இப்படத்தின் தலைப்பு


நீயா நானா? நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனி இப்போது படத் தயாரிப்பாளர். குழந்தைகளின் உலகத்தைப் படம் பிடித்துக் காட்டும் இப்படத்தின் தலைப்பு "அழகு குட்டி செல்லம்'. ஆண்டனியின் நீண்ட கால நண்பரும், "நஞ்சுபுரம்' படத்தின் இயக்குநருமான சார்லஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""பெண் குழந்தை பிறந்து விட்டதே, ஆண் குழந்தை இல்லையே... என்று ஒருவருக்கு கவலை. குழந்தையே இல்லையே... என்று இன்னொருவருக்கு கவலை. 18 வயதில் திருமணத்துக்கு முன் கர்ப்பமான ஒரு பெண்... இப்படி பல கிளை கதைகள் இருக்கின்றன. நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுப்பதே நல்ல சினிமா. அப்படியோர் இடத்தில் இது இருக்கும். "அஞ்சலி', "பூவே பூச்சுடவா' படங்கள் எல்லாம் குழந்தைத்தனத்தோடு கூடிய பெண்மையை முன் எடுத்து வந்தன. இதிலும் அப்படித்தான். வசனங்கள் குறைவுதான். பல இடங்களில் மௌனமாகவே காட்சிகள் நகரும். நெகிழ வைக்கும் சம்பவங்கள் நிறைய இருக்கும். ஆனால் காட்சிக்குக் காட்சி காமெடி இருக்கும். அடுத்த என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கும். குழந்தைகளின் உலகத்துக்குள் நெருக்கமான பயணமாக இருக்கும்'' என்றார் இயக்குநர் சார்லஸ்.
எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி கடந்த வாரங்களில் படமான நிலையில் "ஐ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆஸ்கர் பிலிம்ஸ், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சாமானிய இந்திய குடிமகன் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் ஒலிம்பிக்கில் சாதனைகள் பலவற்றைப் படைத்து நிற்பதே திரைக்கதை என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கதை குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது. "ரன்னிங் ஆன் கர்மா' என்ற சீனப் படத்தை தழுவி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. புத்த துறவி ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுக்கும் இளைஞன் ஒருவன் புத்த துறவி ஆக முடியாமல் பாடி பில்டர் ஆகிறார். அப்போது இறந்து போனவர்கள் பற்றி அறியும் விசேஷ சக்தி அவனுக்குக் கிடைக்கிறது. அதை வைத்து நாட்டில் நடக்கும் பல மறைமுகச் சம்பவங்களின் முகமூடிகளைக் கிழிப்பதே கதை என்கிறது கோலிவுட் வட்டாராம். மே மாத இறுதியில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வரவுள்ளது.
ஜெகோவா பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படம் "காதல் பஞ்சாயத்து'. புதுமுகம் தேவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேகா நடிக்கிறார். வி.எஸ்.ராகவன், ரோபோ சங்கர், சிங்கமுத்து, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கலைசங்கர். ""காதல் எப்போதுமே அலுக்காது. எத்தனை யுகங்கள் கடந்து வந்த பின்னும் ஒற்றைப் பார்வை, சிநேக சிரிப்பு என ஒரு நிமிடத்துக்காக மணிக் கணக்கில் காத்திருக்கும் ஒருவனோ, ஒருத்தியோ இன்றும் இருக்கிறார்கள். இதயங்கள் பல கடந்த பின்னும் காதல் இன்றும் புதிதுதானே? அவற்றில் ஒரு வித்தியாசமான காதல்தான் இந்த "காதல் பஞ்சாயத்து'. ஓர் ஆண்டில் வெளியாகும்
100-க்கும் மேற்பட்ட படங்களில் காதல்தான் பிரதானமாக இருக்கும். அவற்றிலிருந்து இது நிச்சயம் வித்தியாசப்படும். படத்தில் இடம் பெறும் "ஒரு முறை சிறு பிழை... தழுவுதே என் சுவாசமே...' என்ற பாடலை இந்தியா - பாகிஸ்தான் எல்லையான குல்மார்க் பகுதியில் படமாக்கியுள்ளேன். எழில் கொஞ்சம் இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வித அச்சத்துடன் அந்தப் பாடலை உருவாக்கி வந்திருக்கிறோம்'' என்கிறார் இயக்குநர் கலைசங்கர்.
கன்னடத்தில் வெளியாகி பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "விஷ்ணுவர்தா', "ஹலோ பாஸ்' என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது. சிறு சிறு படங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்த "நான் ஈ' சுதீப்புக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்த படம் இது. ப்ரியாமணி, பாவனா ஆகிய இருவரும் கதாநாயகியர்களாக நடித்தனர். சோனுசூட், ஆர்த்தி, துவாரகீஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்தனர். ப்ரியாமணி இரட்டை வேடங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த "சாருலதா' படத்தை இயக்கிய பொன்குமரன் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது. காதல், காமெடி, ஆக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கி கமர்ஷியல் சினிமா வரிசையில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைத்து படமாக்கியுள்ளனர். சாமனியன் ஒருவன் சந்தர்ப்ப சூழல்களால் பெரிய தாதாவிடம் மோதுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் வெளியான சமயத்தில் இப்படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளிவருகிறது. இப்படத்தை நடிகர் துவாரகீஷின் சித்ரா பட நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு கத்தி என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் கொல்கத்தாவில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமுந்திரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது 40 நாள்கள் அடங்கிய அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். கூர்மையான நல்லவனும், வல்லவனும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் லைகா சுபாஷ்கரன், ஐங்கரன் கருணாமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தீபாவளி வெளியிடாக இப்படம் வெளியாகிறது. இதே போல் கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் அஜித்தும் இரட்டை வேடங்கள் ஏற்கிறார். படப்பிடிப்பின் தொடக்க நாளிலேயே அஜித்தும் அஜித்தும் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. படத்துக்கு "ஆயிரம் தோட்டாக்கள்' என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்க இருக்கிறார்கள்.
இயேசு அழைக்கிறார் ஊழிய சேவை நிறுவனத்துடன் இன்டோ ஓவர்சீஸ் ஃபிலிம் இணைந்து தயாரித்துள்ள படம் இயேசு. ஹாலிவுட்டில் வெளியாகி பரவலான பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் தமிழுக்கு வருகிறது. இயேசுவின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தெளிவாக சித்திரிக்கும் வகையில், இயேசுவின் உண்மை நிலையை விவரிப்பதோடு, இன்றைய சமூகத்துக்கு தேவைப்படுகிற இயேசுவின் அன்பையும் மனதுருக்கத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் படம் உருவாகியுள்ளது. எளிமையான பிறப்பிலிருந்து, அவருடைய போதனைகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் என இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை உள்ளடக்கி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போர்த்துகீசிய நடிகர் டியாகோ மொர்கடோ இயேசுவின் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் 25-ஆம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...