திரைக்கதிர்
தொடர் வெற்றிகள்... பத்துக்கும் அதிகமான படங்களுக்கு கால்ஷீட்... என பரபரப்பில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வரிசையில் அடுத்த படம் "இதற்குதானே ஆசைப்பட்டாய்


தொடர் வெற்றிகள்... பத்துக்கும் அதிகமான படங்களுக்கு கால்ஷீட்... என பரபரப்பில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வரிசையில் அடுத்த படம் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. சுவாதி, நந்திதா நடிக்கின்றனர். "ரௌத்ரம்' படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். ""நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்துதான் ஒப்புக் கொள்கிறேன். கால்ஷீட் கைவசம் இல்லாத நேரத்தில் வரும் தயாரிப்பாளர்களை ஒரு வருடம் காத்திருங்கள், 2 வருடம் காத்திருங்கள் என்று காக்க வைப்பதில்லை. அவர்களிடம் வெளிப்படையாக அதை சொல்லி விட்டு, அவர்கள் கொண்டு வரும் கதைக்கு எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என்பதையும் சொல்லி அனுப்பி விடுவேன். அப்படி எந்தெந்த ஹீரோக்களிடம் அனுப்பினேன் என்பதை சொல்ல முடியாது. எனது படங்களைப் பொறுத்த வரை இங்கேயே ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதற்கு என் முகம்தான் காரணம் என நினைக்கிறேன். என் முகம் வெளிநாட்டு ஷூட்டிங்கிற்கு சரி வராது என நினைக்கிறேன். அதனால்தான் கபாலி தோட்டத்திலும், பட்டினப்பாக்கத்திலும் ஷூட்டிங் வைத்து விடுகிறார்கள்'' என்றார் விஜய் சேதுபதி.
அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் சிறப்பு பயிற்சி பெற்று சண்டை காட்சிகளில் நடித்தனர். "தலைவா' படத்தில் தற்போது போலீஸ் வேடத்தில் நடித்த அமலாபால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார் காஜல் அகர்வால். "துப்பாக்கி' படத்துக்குப் பின் விஜய் ஜோடியாக "ஜில்லா' படத்தில் நடிக்கிறார் காஜல். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். சமீபத்தில் அவர் நடித்த விறு விறு சண்டை காட்சிகள் சென்னையில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. போலீஸ் சீருடையில் வில்லன்களுடன் மோதினார். முதன் முதலாக சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி காஜல் கூறுகையில், ""ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதற்காக காத்திருந்தேன். வாய்ப்புகள் சரி வர அமையவில்லை. "ஜில்லா' படத்தில் கேட்ட போது, எனக்கு போலீஸ் வேடம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்காக போலீஸ் உடை அணிந்து டெஸ்ட் ஷூட் எடுத்த பின் போலீஸ் வேடம் எனக்கு பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினர். அதன் பின்னரே இந்த வேடத்தில் நடித்திருக்கிறேன்'' என்கிறார் காஜல்.
பலரும் ஏற்க தயங்கும் வேடங்களை ஏற்பது நித்யாமேனனின் வழக்கம். இந்த முறை பலாத்காரம் செய்யப்படும் பெண் வேடத்துக்கு வந்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான "22 ஃபிமேல் கோட்டயம்' படம் தமிழில் "22 மாலினி பாளையங்கோட்டை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பலாத்கார கொடுமை பற்றிய இக்கதையில் நடித்த அனுபவம் குறித்து தன் டிவிட்டர் பகுதியில்... ""ஸ்ரீபிரியா இப்படத்தில் நடிக்க கேட்ட போது ஏற்க தயங்கினேன். அந்த நேரத்தில் தில்லி பலாத்கார சம்பவம் நடந்திருந்தது. நான் தயங்கியதற்கு காரணம் அந்த வேடத்தில் எந்த அளவுக்கு என்னால் பொருந்த முடியும் என்ற சந்தேகம் இருந்தது. பிறகு நடிக்க முடிவு செய்தேன். பெண் இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பதால் சில தயக்கங்களை போக்க முடிந்தது. இந்தப் படம் என்னை வேறொரு சினிமா தளத்துக்கு எடுத்து செல்லும். படமாகி கொண்டிருக்கும் போதே மும்பை சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது போன்ற சம்பவங்களை கேட்டறியும் போது ஏற்படும் மாற்றத்தை விட அது விஷூவலாக பார்க்கும் போது பெரிய பாதிப்பு இருக்கும். நிச்சயம் விழிப்புணர்வு படமாகவும் இது இருக்கும்'' என்கிறார் நித்யாமேனன்.
""பட புரமோஷனுக்கு வருவதில்லை. பெரிய ஹீரோக்களுக்கு மட்டும்தான் கால்ஷீட்'' என பரபர புகார்களில் இருக்கிறார் நயன்தாரா. தற்போது வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர மறுத்த சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடிக்கும் கோபிசந்த், தமிழிலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிக்கும் அதே தயாரிப்பாளர் ஏற்கெனவே ஒரு படத்தை தயாரிக்க இருந்தார். இதை பூபதிபாண்டியன் இயக்குவதாக இருந்தது. அந்த படத்துக்காக நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸ் பணம் தரப்பட்டது. ஆனால் பூபதி பாண்டியனுக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் மனக்
கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தார்கள். இதனால் அந்தப் படம் டிராப் ஆனது. இந்நிலையில் நயன் தன் அட்வான்ûஸ திருப்பி தராமல், ""வேறொரு படம் தயாரியுங்கள். அதில் நடிக்கிறேன். அட்வான்ஸ் பணம் என்னிடமே இருக்கட்டும்'' என்றாராம். இதை வெளியில் சொல்ல முடியாத தயாரிப்பாளர் நயன்தாராவிடம் கொடுத்த அட்வான்ஸ் பணத்துக்காகவே வேறு ஓர் இயக்குநரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தார். அப்படம்தான் கோபிசந்த், நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ளது. ஏவி.எம். ஸ்டூடியோவில் சமீபத்தில் நடந்த இதன் பூஜை விழாவிலும் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் தந்தார் நயன்.
பாடகர்களுக்கு ராயல்டி கொடுப்பதற்கு இசையமைப்பாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல் எழும்பியிருக்கிறது. பின்னணி பாடகர்களும் ராயல்டி பெறுவதற்கு வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை பாடகர்கள் தரப்பும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் மலையாள சினிமா இசையமைப்பாளர்கள் "பெப்கா' என்ற இசை யூனியனை தொடங்கியுள்ளனர். இதன் தொடக்க விழாவில் பேசிய சிலர்.... ""பாடகர்கள் ராயல்டி உரிமை கோருவதில் அடிப்படை இல்லை. பாடலாசிரியர்கள் தந்தை போன்றவர்கள். இசையமைப்பாளர்கள் தாய் போன்றவர்கள். ராயல்டி என்பது படைப்பாளிகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது. அடுத்தபடியாக ராயல்டி கேட்க உரிமையுள்ளவர்கள், தயாரிப்பாளரும் வெளியீட்டாளரும்தான். வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. பாடகர்களைப் பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் பாடலை பாடி விட்டு சென்று விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் வேறு எந்த பணியும் செய்வது கிடையாது. பாடகர்கள் இலவசமாக பாடினால் மட்டுமே அவர்களுக்கு ராயல்டி கேட்கும் உரிமை வரும்'' என சூடு கிளப்பியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...