திரைக்கதிர்
'மாற்றான்' படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் தேர்வு சென்னையில் நடந்து வருகிறது. பல தமிழ் முன்னணி நாயகிகளின் கால்ஷீட் கிடைக்காததால்,


• 'மாற்றான்' படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் தேர்வு சென்னையில் நடந்து வருகிறது. பல தமிழ் முன்னணி நாயகிகளின் கால்ஷீட் கிடைக்காததால், மற்ற மொழி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருக்கும் அலியாபட்டிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. இந்நிலையில் அலியா பட் தனுஷ் படத்தை ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து கே.வி.ஆனந்த் வட்டாரங்களில் விசாரிக்கும் போது, ""அலியா பட்டிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது உண்மை. ஆனால் அவர் வேண்டுமென்றே இப்படத்தை மறுக்கவில்லை. அவருடைய கால்ஷீட் இப்படத்துக்கு ஏற்றாற்போல் இல்லை. கால்ஷீட் கேட்ட நேரத்தில் வேறு படத்துக்கு ஒப்பந்தமாகி விட்டார். தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசை என்று அவர் கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் இல்லாமல் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
• ஒரு சின்ன மாற்றம், வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி யூகிக்க முடியாத பிரச்னைகளைக் கொண்டு வருகிறது என்பதை குறிக்கும் "சாஸ் தியரி'யை மையமாக வைத்து உருவாகும் படம் "என்றென்றும்'. சம்பந்தப்பட்ட ஜோடி வாழும் போதுதான் காதலும் வாழும். அவர்கள் இறந்து விட்டால் காதலும் இறந்து விடும் என்பதுதான் நியதி. மாறாக குறிப்பிட்ட ஜோடியின் இறப்புக்குப் பின்பும் அந்த காதல் வாழ்வதுதான் படத்தின் திரைக்கதை. திரில்லர் மற்றும் காதல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை புதுமுகம் சினிஷ் எழுதி, இயக்குகிறார். முதலில் டெலி ஃபிலிமாக உருவாக்கப்பட்ட இந்த படம், திரைக்கதையில் இருந்த சுவாரஸ்யத்தின் காரணமாக முழு நீள திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. "வாரணம் ஆயிரம்', "உன்னாலே உன்னாலே' படங்களில் நடித்த "மானாட மயிலாட' சதீஷ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகிறார். பிரியங்கா ரெட்டி நாயகி. தீப்பெட்டி கணேசன், மீரா கிருஷ்ணன், நிஷா கோஷல் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். சென்னை மற்றும் குன்னூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
• பத்து வருடங்களை நிறைவு செய்பவர்கள் பட்டியலுக்கு வந்திருக்கிறார் விஷால். அர்ஜுனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த விஷால், 2003-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த "செல்லமே' படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த பத்தாவது வருடத்தில் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் சினிமாவில் நிலை நிறுத்தியிருக்கிறார். ""இந்த மாதத்தில் "மதகஜராஜா' படம் வெளிவருகிறது. என் படங்கள் எல்லாமே குறிப்பிட்ட நேரத்திற்குள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. "சமர்' படத்தில் நடித்ததை விட, அது வெளிவந்த போதுதான் சந்தோஷப்பட்டேன். அப்போதுதான் தயாரிப்பாளராக வெளிப்பட வேண்டிய நேரம் வந்தது. அதற்காகத்தான் "விஷால் ஃபிலிம் பேக்டரி' என்ற பெயரில் புரொடக்ஷன் நிறுவனத்தை ஆரம்பித்தேன். தற்போது "மதகஜராஜா' படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்றிருக்கிறேன். சுசீந்திரன் இயக்கி வரும் "பாண்டிய நாடு' படத்தை தயாரித்து நடிக்கிறேன். நிறைய இலக்கு இருக்கிறது. எதையும் சாதிக்காத மன குறையோடு பத்து வருடங்களை நிறைவு செய்கிறேன்'' என்கிறார் விஷால்.
• மக்கள் முன்னிலையில் மெட்டமைக்க வருகிறார் இளையராஜா. வெளிநாடுகளில் அல்லது தனியறைகளில் மட்டுமே பாடல்களுக்கு இசையை உருவாக்கி வந்த இளையராஜா, முதன் முறையாக மக்கள் முன்னிலையில் பாடலை உருவாக்குகிறார். இந்த நிகழ்வு இராஜராஜ சோழனின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் "இராஜராஜ சோழனின் போர்வாள்' படத்துக்காக நடக்க இருக்கிறது. கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூராரின் சன்னதியில் இந்நிகழ்வை நடத்த இருக்கிறார். இராஜராஜ சோழனின் குருவான சித்தர் கருவூரார் இந்த கோயிலில் ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த ஆலயத்தில் வரும் 11-ஆம் தேதி படத் தொடக்க விழாவும், பாடலுக்கு மெட்டமைக்கும் நிகழ்வுகளும் நடக்க உள்ளன. இராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் ஒருவர் ஏற்க பேச்சு நடக்கிறது. கவிஞர் சிநேகன், சிநேகா, ஸ்ரேயா, அப்புக்குட்டி, தம்பிராமையா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாசிலின் மாணவர் அமுதேஷ்வர் இப்படத்தை எழுதி, இயக்கி
அறிமுகமாகிறார்.
• ரதக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் "குளு குளு நாள்கள்'. ஸ்ரீஜித் விஜய், ஹரீஸ், அர்ஜுன், ஷாஃபி, மாளவிகா நாயர், சுபிக்ஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வி.பிரபாகர் வசனத்தில் புதுமுகம் காதர்ஹசன் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கும் 4 பையன்களும், கான்வென்ட்டில் படிக்கும் 4 பெண்களும் தேர்வில் வெற்றி பெறாததால், எம்.எஸ்.பாஸ்கர் நடத்தும் டுடோரியலில் சேருகிறார்கள். வெவ்வேறு சூழல்களிலிருந்து வந்தாலும் நட்புடன் பழகுகிறார்கள். இந்திய கலாசாரத்தில் பிறந்து வளர்ந்த பெண், வெளிநாட்டு கலாசாரத்தின் மீது ஈர்ப்பு கொள்கிறாள். வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த இன்னொரு பெண், இந்திய கலாசாரத்தை விரும்புகிறாள். இப்படி பல்வேறு குணாதிசயங்களுடன் பழகும் 8 பேரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது.
• சமந்தா, நஸ்ரியா, ஹன்சிகா, அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்ட இளம் நடிகைகளின் வரவால் ஸ்ரேயா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் மார்க்கெட் "டல்' ஆனது. இந்த நிலையில் பிரியாமணி, சார்மி உள்ளிட்ட நடிகைகள் தங்களின் மார்க்கெட்டை தக்க வைக்க ஒரு பாடலுக்கு நடனம் ஆட முன் வந்திருக்கின்றனர். இந்த பட்டியலில் இடம் பிடிக்க காத்திருப்பவர் ஸ்ரேயா. ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தயார் என அறிவித்திருக்கிறார் ஸ்ரேயா. விழுந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இந்த அறிவிப்பா? என கேட்பவர்களுக்கு ஸ்ரேயாவிடம் இருந்து வந்த பதில் இதோ... "" என்னுடைய உடல்கட்டு குத்து பாடலுக்கு ஏற்ற வகையில் இருப்பதால் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒப்புக் கொள்கிறேன். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னுடைய மார்க்கெட் இன்னும் முடிந்து விடவில்லை. ஒரு நடிகையாக யாரும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்க கூடாது. குத்துப்பாடல்களுக்கு ஆடுவதால் எந்த வகையிலும் இழப்பு இல்லை. எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. எல்லா மொழி படங்களிலும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...