டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

திருமண சர்ச்சை ஓய்ந்த நிலையில் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் அனன்யா. கலைந்து போன திருமணக் கனவு, குடும்பத்தாருடன் மனக் கசப்பு என

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:06 pm

ஜி. அசோக்

திருமண சர்ச்சை ஓய்ந்த நிலையில் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் அனன்யா. கலைந்து போன திருமணக் கனவு, குடும்பத்தாருடன் மனக் கசப்பு என ஏக பிரச்னைகளை எதிர் கொண்டதால் புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். மலையாள வாய்ப்புகள் வந்த போதிலும், சமீப காலமாக தமிழ் படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார். கேரளத்தில் இருப்பதை விட தமிழ்நாட்டில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்பதையே அவர் விரும்புவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே "இரவும் பகலும்', "புலிவால்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்திலிருந்து ரீமேக் ஆகும் "காக்டெயில்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை தமிழில் ஸ்பெல் பௌண்ட் ஃபிலிம்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சீனு, நிகேஷ்ராம் ஆகியோருடன் அனன்யா நடிக்கிறார். "அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்குகிறார். "ஆன் தி வெல்' என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி இப்படம் உருவாகவுள்ளது.  

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் படம் "அங்குசம்.'  ஸ்கந்தா, ஜெயதி குஹா நடிக்கின்றனர். புதுமுகம் மனுகண்ணன் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். கமர்ஷியல், காமெடி என வர்த்தகரீதியிலான சினிமாக்களுக்கிடையே எப்படி தகவல் அறியும் உரிமை சட்டம்....? என்றால்... ""தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி தனது ஊரில் ஆக்கிரமிப்பால் காணாமல் போன காவிரி ஆற்றின் ஒரு பகுதியை மீட்டெடுத்தவரும், அதே சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்வாதிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் திருச்சி சீனிவாசன்தான் இந்த கதை உருவாகக் காரணம். மையம் அதுதான் என்றாலும், விழிப்புணர்வைத் தரும் அதே வேளையில் கமர்ஷியல் படத்துக்கான அம்சங்களும் இதில் இருக்கின்றன. ஊழல் புகாரில் சிக்கிக் கொள்ளும் ஒரு மாவட்ட ஆட்சியரின் நிழல் உலக விஷயங்களை ஹீரோ வெளிக் கொண்டு வருவதுதான் கதை. படம் வெளியான பின்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் என்னென்ன உரிமைகளைப் பெறலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது'' என்கிறார் மனுகண்ணன்.

அஜித்தின் "ஆரம்பம்', செல்வராகவனின் "இரண்டாம் உலகம்' ஆகிய இரு படங்களும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி உள்ளது. இரு படங்களும் இறுதி கட்ட பணிகளில் வேகம் எடுத்துள்ளன. கமலின் "விஸ்வரூபம் 2' தீபாவளிக்கு வெளிவரும் எனக் கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை. படத்தின் இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததே இதற்கு காரணம். இந்நிலையில் ""விஸ்வரூபம் 2' படத்தை டிடிஹெச்சில் வெளியிடுவேன்'' என கமல் அறிவித்திருப்பதால், "விஸ்வரூபம்' பட முதல் பாகத்துக்கு வெடித்த பிரச்னைகள் இதற்கும் வெடிக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் சிறு பட்ஜெட்டில் உருவான பல படங்கள் தீபாவளி ரேஸில் இடம் பிடிக்க காத்திருக்கின்றன. இதில் முதலில் சேர்ந்திருப்பது "கோலாகலம்'. அழுத்தமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை பி.ஜி.சுரேந்திரன் எழுதி, இயக்கி, தயாரிக்கிறார். அமல் நாயகனாக நடிக்கிறார். தங்கை கதாபாத்திரங்களில் நடித்த சரண்யாமோகன் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை மறுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். மீண்டும் இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார். 

30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் "ஞானகிறுக்கன்' என்ற தலைப்பில் படமாகிறது.  வில்லனாக நடித்து வந்த டேனியல் பாலாஜி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க சில நாயகிகளை அணுகிய போது நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த செந்தி இப்படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குநர் இளையதேவன் இப்படத்தை எழுதி, இயக்குகிறார். ""திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூர் என்ற கிராமத்தில் நடந்த சம்பவம்தான் கதை. சினிமாவுக்கான சமரசங்கள் எதுவும் இல்லாமல், சினிமா ஒப்பனைகள் இல்லாமல், எதார்த்த கதையாக இது உருவாகி இருக்கிறது. கிராமங்களில் நடக்கும் சம்பவங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத சுவடுகளாக மாறி விடுவதுண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது அதே கிராமத்தில் படமாக்கும் போது, அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். எல்லாமும் கிடைக்கிற ஒருவனுக்கு பிரச்னை இல்லை. எதுவுமே கிடைக்காத போதுதான் பிரச்னை என்பதுதான் கதையின் கரு'' என்றார் இயக்குநர் இளையதேவன். 

"ஆரம்பம்', "வீரம்' என இரு படங்களில் நடித்து வருகிறார் அஜித். "ஆரம்பம்' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது "ஆரம்பம்' படத்துக்கான டப்பிங் பேசி வருகிறார் அஜித். இதையடுத்து "வீரம்' படப்பிடிப்பில் அடுத்த மாதம் வரை கலந்து கொள்கிறார். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளிக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் "ஆரம்பம்' படத்துக்கான பேட்ச் ஒர்க் எனப்படும் விடுபட்ட துண்டு காட்சிகளைப் படமாக்க இயக்குநர் விஷ்ணுவர்தன் முடிவு செய்துள்ளார். குறிப்பிட்ட ஒரு காட்சி எதிர்பார்த்த அளவுக்கு வராததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. அஜித் - நயன்தாரா சம்பந்தப்பட்ட இந்தக் காட்சியை மீண்டும் படமாக்க இருவரிடமும் இயக்குநர் தரப்பில் பேசப்பட்டது. அவர்கள் நடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இந்த வாரத்தில் அஜித், நயன்தாராவுடன் படக்குழு துபாய் செல்கிறது. இதற்கிடையில் "வீரம்' படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து புனே சென்றிருக்கிறார், அஜித். அது முடிந்ததும் "ஆரம்பம்' பேட்ச் ஒர்க் பணிக்காக மும்பை செல்கிறார்.

ஒரே கதாபாத்திரங்களில் நடிக்காமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். ஹிந்தியில் "டி டே' படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்ததுடன் படுக்கை அறைக் காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் "ராமய்யா வஸ்தாவய்யா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதுடன் வில்லியாக வேடம் ஏற்றிருப்பதாக தகவல் வெளியானது. இது பற்றி பேசாமல் இருந்த ஸ்ருதி திடீரென்று மறுப்பு தெரிவித்திருக்கிறார். தனது டிவிட்டர் பகுதியில்...""நான் வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. வில்லியாக நடிக்கவில்லை. அதுவொரு ஸ்பெஷல் கேரக்டர். கெஸ்ட் ரோல் என்றாலும் எல்லோருக்கும் பிடிக்கும். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் என் திட்டம். ஆனால் இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கவில்லை. அதற்கான பக்குவமும் எனக்கு கிடையாது. இப்படம் இந்த மாத இறுதியில் வெளிவருகிறது'' என தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.