திரைக்கதிர்
மாதவன், ராதா மகள் துளசி என மலையாள நட்சத்திரங்களை தமிழில் அறிமுகம் செய்த மணிரத்னம், அடுத்து மற்றுமொரு மலையாள நட்சத்திரமான பஹத் பாசிலை தமிழில் அறிமுகம் செய்ய உள்ளார். மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான


மாதவன், ராதா மகள் துளசி என மலையாள நட்சத்திரங்களை தமிழில் அறிமுகம் செய்த மணிரத்னம், அடுத்து மற்றுமொரு மலையாள நட்சத்திரமான பஹத் பாசிலை தமிழில் அறிமுகம் செய்ய உள்ளார். மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான பாசிலின் மகனான இவர் தற்போது முன்னணி இடத்தில் உள்ளார். கடந்த ஆறு மாதங்களில் வெளியான இவரின் மூன்று படங்களும் ஹிட். "காற்று' என்ற பெயரில் புதிய படத்தை மணிரத்னம் இயக்க முடிவு செய்திருப்பதாகவும், அப்படத்தில்தான் பஹத் பாசில் அறிமுகமாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது. பஹத் பாசில் நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆனால் பஹத்தை காதலிக்கவில்லை என்று ஆண்ட்ரியா கூறிய போதும், தான் இன்னும் ஆண்ட்ரியாவை காதலித்து வருவதாக பஹத் மீண்டும் தனது காதலை உறுதி செய்து பேட்டியளித்தார். இருவரும் மலையாளத்தில் "அன்னயும் ரசூலும்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தக் காதல் பிரச்னையை அடுத்து மற்றொரு படத்தில் பஹத்துடன் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஆண்ட்ரியா நிராகரித்திருந்தார்.
நேர்த்தியான கதை அமைப்பின் மூலம் "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் கவனத்தை ஈர்த்த அருண்குமார் உருவாக்கும் படம் "பண்ணையாரும் பத்மினியும்'. மேஜிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக "அட்டக்கத்தி' ஐஸ்வர்யா நடிக்கிறார். நீலிமா ராணி, ஜெயப்பிரகாஷ், துளசி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். ""ஒவ்வொரு மனிதனுக்கும் அவனோடு தொடர்புடைய ஓர் உயிரற்ற பொருள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். அதை பிரிய நேரும் போதோ, அதை தவற விடும் போதோ எழும் மனித உணர்வுகள் மதிப்பிட முடியாத ஒன்று. அதை மையப்படுத்திதான் திரைக்கதை எழுதியுள்ளேன். 70-80 களில் பத்மினி பியட் கார் மீது, அதை வாங்கும் தகுதி கொண்டவர்களுக்கு அன்பு இருந்தது. காரோடு பேசுவது, அதை குழந்தையைப் போல பாதுகாப்பது என அதனுடனே வாழ்க்கை நடத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் களத்தில்தான் கதை சொல்லப்படுகிறது'' என்கிறார் அருண்குமார்.
கமலின் மூத்த மகள் ஸ்ருதியை தொடர்ந்து இளைய மகள் அக்ஷராவும் சினிமாவுக்கு வருகிறார். படம் இயக்குவது குறித்து படித்து வந்த அக்ஷரா, தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமிராவுக்கு பின்னால் இருப்பதே பிடிக்கும் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால் ஸ்ருதிஹாசன் நடித்த படங்கள் ஹிட் ஆகி அவர் பிரபலம் ஆனதை பார்த்த அக்ஷராவும் மனம் மாறினார். கேமிராவுக்கு பின்னால் இருந்து இயங்குவதை தள்ளி வைத்து விட்ட அக்ஷரா, நடிப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அவரை தமிழ், தெலுங்கில் நடிக்க வைக்க முன்னணி இயக்குநர்கள் முயன்றார்கள். மணிரத்னமும் தீவிர முயற்சி செய்தார். ஆனால் அக்கா ஸ்ருதியைப் போலவே பாலிவுட்டில் அறிமுகமாக அக்ஷரா விரும்பினார். அதே போல் அவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்து விட்டது. பால்கி இயக்கும் ஹிந்தி படத்தில் அக்ஷரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். அக்ஷராவுக்கு ஜோடி தனுஷ். பால்கி படங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் அமிதாப்பச்சனுக்கு இதிலும் முக்கிய வேடம். ஏற்கெனவே தனுஷுடன் நடித்த அனுபவம் ஸ்ருதிக்கு இருப்பதால், ஷூட்டிங் சமயத்தில் தனுஷூடன் ஏற்பட்ட அனுபவங்கள், தனுஷின் நடிப்பு பற்றியெல்லாம் தன் தங்கைக்கு கூறினாராம் ஸ்ருதி.
கிராமப்புற டூரிங் தியேட்டர்களில் "நாயகன்', "பாட்ஷா' படங்களைப் பார்க்கும் இளைஞன், தாதா ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வருகிறார். அவரால் தாதா ஆக முடிந்ததா? இல்லையா? என்பதைக் காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல வரும் படம் "அது வேற இது வேற'. பவர் புல் மீடியா நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். சானியா தாரா நாயகியாக நடிக்கிறார். எம்.திலகராஜன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ""சிறு வயதில் எங்கோ, எப்போதோ, நெருக்கமாக பார்த்த சம்பவங்களின் அடிப்படையில்தான் முழு வாழ்வும் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அதன் மையம்தான் கதை. நல்ல உடல் வாகு கொண்ட இளைஞனை "நாயகன்', "பாட்ஷா' படங்கள் கவர்ந்திழுக்கின்றன. அதில் வரும் ரஜினி, கமல் போல் ஆக ஆசைப்படும் அந்த இளைஞன் வாழ்வின் எந்த கட்டத்துக்கு சென்றான் என்பதுதான் திரைக்கதை'' என்கிறார் இயக்குநர் திலகராஜன்.
பருவ கால மாற்றங்களை மையமாக வைத்து ஒரு இசை ஆல்பம். "சீசன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர்களின் இசைக் குழுக்களில் பணியாற்றி வந்த கணேஷ் - குமரேஷ் இணைந்து இசையமைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ""இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "ஒரு வீடு இரு வாசல்' படத்தில் இருவரும் இரட்டை நாயகர்களாக இணைந்து நடித்தோம். அது முதல் திரையுலகில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இருவருக்கும் இசையில் ஆர்வம் இருந்ததால் இளையராஜா இசைக்குழுவில் பணியாற்ற தொடங்கினோம். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் பணியாற்றி வந்திருக்கிறோம். வெயில், பனி, வசந்தம் என்ற பருவ காலங்கள் இப்போது மாறி விட்டன. விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. அதை முன்னிறுத்தும் விதமாகவும், விழிப்புணர்வு தரும் விதமாகவும் இந்த ஆல்பத்தை உருவாக்கினோம். எங்களுடன் இணைந்து சின்மயி பாடல்களைப் பாடியுள்ளார்'' என்கின்றனர் இரட்டை இசையமைப்பாளர்கள்.
"காதல் கொண்டேன்', "7 ஜி ரெயின்போ காலணி' என தொடக்கத்தில் காதல் கதைகளின் மூலம் கவனத்தை ஈர்த்தார் இயக்குநர் செல்வராகவன். சோழர்களின் வாழ்க்கையை ஒட்டி உருவான "ஆயிரத்தில் ஒருவன்', தாதாக்களின் வாழ்க்கை பற்றி சொன்ன "புதுப்பேட்டை' ஆகிய படங்களை பெரும் பொருட் செலவில் உருவாக்கினார். தற்போது "இரண்டாம் உலகம்' படத்தையும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கியதுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷூட்டிங் நடத்தினார். இந்த இரு படங்களுக்கு இடையே "மயக்கம் என்ன' என்ற படத்தை இயக்கினார். தனுஷ் நடித்த அப்படம் சிறு பட்ஜெட்டில் உருவானது. இப்போது ஆக்ஷன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் செல்வராகவன் பேட்டியளிக்கும் போது, ""சினிமாவில் நான் நினைக்கும் கதைகளை எனது கற்பனையின் படி எடுப்பதில் பொருளாதார தடைகள் இருக்கிறது. என்னை யாராவது செல்வந்தர் தத்தெடுத்தால் சந்தோஷப்படுவேன்'' என்றார். இந்நிலையில் அவர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குட்பை சொல்லியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...