திரைக்கதிர்
புரூஸ்லி, ஜாக்கிசான் என உலகப் புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோக்கள் வரிசையில் இந்தியாவில் களம் இறங்குகிறார் டோனிஜா. ஹாலிவுட்டில் தனக்கென தனி


புரூஸ்லி, ஜாக்கிசான் என உலகப் புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோக்கள் வரிசையில் இந்தியாவில் களம் இறங்குகிறார் டோனிஜா. ஹாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள டோனிஜாவின் படங்கள் இந்தியாவில் அதிகமாக வெளியாவதில்லை. அந்தக் குறையை அவரது சூப்பர் ஹிட் படமான "ஓங் பேங் 1' என்ற படம் நீக்க வருகிறது. ஹாலிவுட் அரங்கில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த இப்படம், இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளியாகி வரவேற்புகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக 20 நிமிடங்கள் வரை ஓடும் பைக் சேஸிங் காட்சியைப் படமாக்கியவிதம், பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தற்போது தமிழில் "கும்கி வீரன்' என்ற பெயரில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ஏற்கெனவே ஜாக்கிசான் நடிப்பில் உருவான "சிஇசட் 12' படத்தை வெளியிட்ட இண்டோ ஒவர்சிஸ் நிறுவனத்துடன் ஆர்ட் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து வெளியிடுகிறது. ஆக்ஷன் பாணி படங்களுக்கு பெயர் பெற்ற பிரச்சாய் பிங்கே, சண்டை பயிற்சியாளர் கிட்டிகேரி, டோனிஜா கூட்டணி சுமார் பத்து வருடங்களுக்குப் பின் இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிக்கும் "வீரம்', விஜய் நடிக்கும் "ஜில்லா' ஆகிய இரு படங்களும் ஒரே தினத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின் எதிரெதிர் துருவங்களாகச் செயல்படும் இரு நடிகர்களின் படங்களும் நேருக்கு நேர் மோதத் தயாராகின்றன. அஜித்தின் "வீரம்' படத்தை "சிறுத்தை' சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கிடையில் விஜய்யின் "ஜில்லா' படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. "பிடிச்சிருக்கு' படத்தை இயக்கிய நேசன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "வீரம்' படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாவதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பொங்கல் தினத்தில் இது உற்சாக விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவரும் படங்களின் பட்டியலில் இணைகிறது "சங்கராபரணம்'. 35 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பரதநாட்டியத்தையும் - இசையையும் ஒருங்கிணைத்து துளி கூட கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது, 35எம்எம்., சினிமாஸ்கோப், டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என இன்றைய கால கட்ட சினிமா வடிவத்திற்கு உருமாறுகிறது. புதிய வசனங்களால் திரைக்கதை இணைக்கப்படுகிறது. பழைய சங்கராபரணத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். புது வடிவத்தில் படம் உருவாகி வரும் இப்படத்துக்கு ரவிராகவ் இசை. புது வடிவத்துக்கான பாடல்களை கவிஞர்கள் தமிழமுதன், தாயன்பன் எழுதுகின்றனர். ஸ்ரீசபரிகிரி வாசன் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ஹரிஹரன் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்.
கோலிவுட்டின் தற்போதைய ராசியான நடிகை லட்சுமிமேனன். "கும்கி' படத்தில் அறிமுகமானவருக்கு "சுந்தரபாண்டியன்', "குட்டிபுலி', "பாண்டிய நாடு' என எல்லா படங்களும் ஹிட். தொடர்ச்சியான ஹிட்டால் தனது சம்பளத்தை ரூ.40 லட்சத்துக்கு உயர்த்தியிருக்கிறார். ஆனாலும் அவரது கால்ஷீட்டுக்கு இயக்குநர்கள் மொய்த்த வண்ணம் இருக்கின்றனர். தான் நடித்து தயாரித்த "பாண்டிய நாடு' ஹிட்டான மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் விஷால், அடுத்து திரு இயக்கத்தில் தயாரித்து நடிக்கும் "நான் சிகப்பு மனிதன்' படத்திலும் லட்சுமிமேனனையே ஹீரோயினாக புக் செய்து விட்டார். தற்போது சித்தார்த்துடன் "ஜிகர்தண்டா', விமலுடன் "மஞ்சப்பை', விஜய்சேதுபதியுடன் "வசந்தகுமரன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். முன்னணி மற்றும் இளம் ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், வருகிற வாய்ப்புகளை கதை கேட்காமலேயே ஒப்புக் கொண்டு வந்தார். இதுவரை நடித்த எந்த படங்களின் கதையையும் கேட்காமல் நடித்து வந்தவருக்கு, இப்போது கதை கேட்கும் எண்ணம் வந்திருக்கிறது. புதுமுக இயக்குநர்கள் அதிக அளவில் கதை சொல்ல வருவதால்தான் இந்த மாற்றமாம்.
ஓர் ஆல்பத்துக்காக நான்கு ஆண்டுகளைச் செலவழித்து இருக்கிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ். கடந்த சில ஆண்டுகளாக சினிமாக்களில் செயல்படாமல் இருந்தவர், இப்போது திருக்குறளை மையப்படுத்தி பிரம்மாண்டமான ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சுமார் 500 பாடகர்கள் இந்த ஆல்பத்தில் பங்கேற்று பாடியிருப்பதுதான் இந்த ஆல்பத்தின் சிறப்பு. ஆல்ப பணிகள் குறித்து பரத்வாஜ்.... ""நான்கு வருடங்களுக்கு முன் சினிமாவில் எனக்கு சின்ன இடைவெளி ஏற்பட்டது. அப்போது வந்த படங்கள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனால் அந்த இடைவெளியை பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றுக்கு வெவ்வேறு பாணியில் இசையமைத்துள்ளேன். 12 நாடுகளுக்குச் சென்று 500 பாடகர்களை வைத்து இந்த ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறேன். இசையின் மூலம் சொல்லும் போது, எவ்வளவு கடினமான கருத்தும் மக்களைச் சென்றடையும் என்பதால் இவ்வளவு பெரிய முயற்சியில் ஈடுபட்டேன். ஜனவரி 17, திருவள்ளுவர் தினத்தன்று இந்த ஆல்பத்தைச் சென்னையில் வெளியிட உள்ளேன்'' என்றார்.
காட்சன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "திகார்'. முழு ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை பேரரசு கதை எழுதி, இயக்குகிறார். புதுமுகம் உன்னிமுகுந்தன் கதாநாயகனாக நடிக்கிறார். "அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் சிறு வேடத்தில் நடித்த அகன்ஷாபூரி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தனி சாம்ராஜ்யம் நடத்தும் டான் அலெக்ஸ்சாண்டர் என்ற கற்பனைப் பாத்திரத்தை முன்னிறுத்தி திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது பார்த்திபன் அந்த இடத்துக்குத் தேர்வாகியுள்ளார். ""என் முந்தைய திரைக்கதைகளில் ஆக்ஷன் முன்னிறுத்தப்பட்டாலும், தங்கை, அண்ணன், அம்மா என குடும்ப உறவுகளை பக்க பலமாக வைத்திருப்பேன். ஆனால் இந்த முறை முழுக்க முழுக்க ஆக்ஷன் களத்தில் மட்டுமே இயங்கியிருக்கிறேன். போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் வாழ்ந்த ஒரு டான் பற்றிய கதை என்பதால், முழுக்கவே ஆக்ஷன் மட்டும்தான் இதற்கு தேவைப்பட்டது. அதற்குப் பொருத்தமான நடிகராக பார்த்திபன் இருப்பார். படத்தின் பெரும்பகுதி துபை, ஸ்பெயின், மும்பை ஆகிய இடங்களில் பயணிக்கும். இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது'' என்கிறார் பேரரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...