டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

சிவாஜி நடித்த "இருவர் உள்ளம்' பட டைட்டிலை ஒரு புதிய படத்துக்குச் சூட்டியுள்ளனர்.   "திருடா திருடி', "நாளை' உள்ளிட்ட படங்களில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:36 am

ஜி. அசோக்

சிவாஜி நடித்த "இருவர் உள்ளம்' பட டைட்டிலை ஒரு புதிய படத்துக்குச் சூட்டியுள்ளனர்.   "திருடா திருடி', "நாளை' உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரமேஷ்.ஜி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் ஓர் இளைஞன், ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவரை அமெரிக்கா அழைத்து செல்கிறார். புதிய இடத்துக்கு செல்லும் பெண் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வாழ முடியாமல் தவிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் திரைக்கதை. விநய் ஹீரோ. பாயல் ராஜ்புத் ஹீரோயின். அர்ச்சனா குப்தா மற்றொரு ஹீரோயின். சத்யன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி அமெரிக்காவில் நடந்துள்ளது. "இருவர் உள்ளம்' என்ற டைட்டில் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்த ரமேஷ் ஜி. பழைய "இருவர் உள்ளம்'  பட தயாரிப்பாளரின் அனுமதியுடன் அந்த டைட்டிலை வைத்துள்ளாராம்.

காதல் திருமண சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் "திருப்புகழ்' படத்தின் தலைப்பை, தணிக்கை குழு "திரு - புகழ்' என மாற்ற சொல்லியிருக்கிறது.  திலிப்குமார், திவ்யா சிங், சீதா, நளினி, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை அர்ஜூனராஜா இயக்குகிறார். ""காதல்தான் பிரதானம் என்றாலும் இன்றைய சமூக சூழலுக்கான கதையாக இது இருக்கும். காதல்தான் மனித மனங்களில் இருந்த வேறுபாடுகளை களைந்து ஒன்றாக வாழும் கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அந்த காதல் சமூகத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி விட்டது. காதல் திருமணங்கள் செய்வதால் ஜாதி, மதம் அழியும் என ஒரு பிரிவினருக்கும், காதல் திருமணம் செய்வதால் ஜாதிக்கு அவமானம், காலாசார சீர்கேடு நடக்கும் என மற்றொரு பிரிவினருக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில்தான் இந்த திரைக்கதை. இதைத்தவிர பெண்களுக்கான சுதந்திரம் பற்றியும் கதை பேசும்'' என்கிறார் இயக்குநர் அர்ஜூனராஜா. 

சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு அஞ்சலி அவர்களை பிரிந்தார். அஞ்சலியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பாரதி தேவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி முதல் களஞ்சியம் இயக்கும் "ஊர் சுற்றி புராணம்' பட ஷூட்டிங்கில் பங்கேற்க கால்ஷீட் கொடுத்திருந்தார் அஞ்சலி. ஆனால் அதில் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து திரையுலக அமைப்புகளிடம் அஞ்சலி மீது புகார் தந்திருந்தார் களஞ்சியம். இதற்கு அஞ்சலி மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் சூர்யாவின் "சிங்கம் 2' பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் அஞ்சலி. தூத்துக்குடியில் இதற்கான ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அஞ்சலி நடனம் ஆடுகிறார். சூர்யாவும் இந்த காட்சியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து அஞ்சலி "போல் பச்சன்' ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். களஞ்சியம் படத்தில் நடிப்பது பற்றி அஞ்சலி தரப்பில் கேட்ட போது பதில் எதுவுமில்லை. 

என்.எஸ்.எஸ். முகாமில் பங்கேற்க தலக்கோணம் காட்டுப் பகுதிக்கு செல்லும் கல்லூரி மாணவர்களில், கதையின் நாயகனும், நாயகியும் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்கள்.  அதிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதும், கடத்தல் சம்பவத்தின் சுவாரஸ்யமான பின்னணியும்தான் "தலக்கோணம்' படத்தின் கதை. ஜிதேஷ்  நாயகன். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ரியா நாயகி. கோட்டா சீனிவாசராவ், கஞ்சாகருப்பு, பெரோஸ்கான் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். சமுத்திரகனியின் உதவியாளர் பத்மராஜ் இப்படத்தை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.  "" முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திகில் இருந்தாலும் அழுத்தமான காதலும் இருக்கிறது. முழுக்க முழுக்க வனப்பகுதிகளில் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர். 

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை படமாகிறது. "ராமானுஜன்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை  ஞானராஜசேகரன் எழுதி இயக்குகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. நடிகை சாவித்ரியின் பேரனும், விஜய சாமுண்டீஸ்வரியின் மகனுமான அபிநய் நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகை பாமா ஹீரோயினாக நடிக்கிறார். சுஹாசினி, நிழல்கள் ரவி, அப்பாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த கெவின் மெக்கோவன், கிரஹாம் சியாடில், மைக்கேல் வியாபர் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ராமானுஜன் வாழ்ந்த கும்பகோணம் மற்றும் நாமக்கல், வேலூரிலும், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது. ரமேஷ் விநாயகம் இசையமைப்பில், சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார்.

பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சினிமா தயாரிக்கும் பணியில் இளம் ஹீரோக்கள் இறங்கியுள்ளனர். தனுஷ் தயாரித்துள்ள "எதிர்நீச்சல்' கடந்த 1-ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் சேதுபதி தான் நடிக்கும் "சங்கு தேவன்' உட்பட சில படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்க இருக்கிறார். இதே போல் விமல், விதார்த் இருவரும் பட தயாரிப்பில் ஈடுபட இருக்கின்றனர். இதற்கான ஆலோசனையில் இருவரும் இறங்கியுள்ளனர். சிவகார்த்திகேயனும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் தயாரிக்க உள்ளார். சித்தார்த் "காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் விநியோக உரிமையைப் பெற்றிருந்தார். ஆர்யா "படித்துறை' படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியுள்ளார். விஷால் தற்போது "பாண்டிய நாடு' என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார்.  அருள்நிதி உள்ளிட்ட ஹீரோக்கள் ஏற்கெனவே பட தயாரிப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.