திரைக்கதிர்
94-இல் வெளியான "அமைதிப்படை'யின் இரண்டாம் பாகம் "நாகராஜன் சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ' என்ற பெயரில் படமாகிறது.


94-இல் வெளியான "அமைதிப்படை'யின் இரண்டாம் பாகம் "நாகராஜன் சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ' என்ற பெயரில் படமாகிறது. முதல் பாகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யராஜ், இதில் துணை முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் பதவியேற்கிறார். முதல்வர் சத்யராஜுக்கும், மலைவாழ் மக்களுக்கும் நடக்கும் மோதல்தான் கதை. காட்டிலுள்ள மரங்களை அழித்து வெளிநாட்டு நிறுவனத்துக்கு தாரை வார்க்கத் துடிக்கிறார் சத்யராஜ். மலைவாழ் மக்களின் நலனுக்காகப் போராடும் சீமான், அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை. ஏப்ரலில் படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கும் வகையில் தொடர் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. மணிவண்ணன் இயக்கும் 50-வது படம். சத்யராஜ் நடிக்கும் 200-வது படம் என்ற சிறப்பம்சங்களையும் இப்படம் பெற்றுள்ளது. மிருதுளா, கோமல் சர்மா, வர்ஷா உட்பட பலர் நடிக்க, இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
---------------------------------------
மம்மூத் மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுமந்த்குமார் ரெட்டி தயாரிக்கும் படம் "கூட்டம்'. நவீன் சந்திரா, பியா, கிஷோர், நாசர், கிஷோர்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். புதுமுக இயக்குநர் எம்.ஆர்.ஜீவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""சமூகத்தில் தங்களுக்கான உரிமைகள் கிடைக்காத போது உருவாகும் நக்சலைட்டுகள், ஒரு கட்டத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து சரணடைகின்றனர். ஆனால் பணம், பதவி உள்ளவர்களுக்கு அடியாள்களாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. திருந்தி வாழ ஆசைப்பட்ட போதும், சமூகம் மறுக்கும் உரிமைக்காக அந்த நக்சலைட்டுகள் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதுதான் கதை. கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய வனப்பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது'' என்றார் இயக்குநர் எம்.ஆர்.ஜீவன்.
---------------------------------------
"விஸ்வரூபம்' இரண்டாம் பாக உருவாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். முதல் பாகத்தை உருவாக்கும் போதே, இரண்டாம் பாகத்துக்குரிய பெரும்பான்மையான காட்சிகளைப் படமாக்கி முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டின் இறுதியிலே "விஸ்வரூபம் 2' வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் மேலோங்கி வரும் தீவிரவாதம்தான் கதை என்பதால், அது பற்றி சில விவரங்களைத் திரட்டி வருகிறார். இதற்காக மும்பையில் தற்போது கமல்ஹாசன் தங்கியிருக்கிறார். தீவிரவாதம்தான் கருப் பொருள் என்றாலும், அம்மா - மகன் சென்டிமெண்ட் திரைக்கதையில் அதிகமாக இருக்கும்'' என்று கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
---------------------------------------
நடிகைகள் இலியானா, நயன்தாரா ஆகியோர் தமிழில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இருவருக்கும் தெலுங்கில் அதற்கு மேல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இப்போது அந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார் அமலாபால். பெல்லங்கொண்டா சுரேஷ் தயாரிக்கும் தெலுங்குப் படத்தில் மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு ஹீரோவாக நடிக்கிறார். நாகேஷ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்துக்காக அமலாபாலுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------
காதல் திருமண சர்ச்சை "திருப்புகழ்' என்ற பெயரில் படமாகிறது. திலீப்குமார், திவ்யா சிங், சீதா, நளினி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை அர்ஜூனராஜா இயக்குகிறார். ""திருப்புகழ் என்ற தலைப்பை பார்த்து விட்டு, இது பக்தி படமா? என்கிறார்கள். சமூக கதைதான். ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது. காதல்தான் மனித மனங்களில் இருந்த வேறுபாடுகளை களைந்து ஒன்றாக வாழும் கலாசாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் அந்த காதல் இப்போது சமூகத்தில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி விட்டது. காதல் திருமணங்கள் செய்வதால் ஜாதி, மதம் அழியும் என ஒரு பிரிவினருக்கும், காதல் திருமணம் செய்தால் ஜாதிக்கு அவமானம், கலாசார சீர்கேடு நடக்கும் என மற்றொரு பிரிவினருக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்'' என்றார் அர்ஜூனராஜா.
---------------------------------------
விக்ரம் நடிப்பில் ஷங்கர் எழுதி இயக்கும் படம் "ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் 150 கோடி என்றும், இந்தியாவின் ஒலிம்பிக் கனவுதான் கதையென்று உறுதியாகத் தெரிய வருகிறது. படத்தைப் பற்றிய தகவல் கசிய, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ""கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கிய "ஐ' படப்பிடிப்பு மார்ச் 15-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடந்து வந்தது. நான்கு சண்டை காட்சிகள், மூன்று பாடல் காட்சிகள் என 23 காட்சிகளை முடித்து விட்டோம். சீனா, பாங்காக், ஜோத்பூர், பொள்ளாச்சி, கொடைக்கானல், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சிலர் கொடைக்கானலில் சீனா போன்று செட் போட்டு படமாக்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். சீனாவில் அனைத்து இடங்களிலுமே எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் சீனாவில்தான் படமாகியுள்ளன'' என தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.
---------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...