ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மூலிகைத் தைலமும் மூலிகை கஷாயமும்!
என் வயது 59. வலது விதைப்பையில் வலி உள்ளது. வலது அடி வயிறு, வலது இடுப்பு, வலது கால் வரை வலி உள்ளது.


என் வயது 59. வலது விதைப்பையில் வலி உள்ளது. வலது அடி வயிறு, வலது இடுப்பு, வலது கால் வரை வலி உள்ளது. தரையில் சம்மணமிட்டு தியானம், உடற்பயிற்சி செய்தாலும், கொஞ்சநேரம் நின்று கொண்டு இருந்தாலும் வலி அதிகமாக உள்ளது. இதைக் குணப்படுத்த மருந்து உள்ளதா?
ஜெயராமகிருஷ்ணன், ஈரோடு.
விதைப் பையினுள் அமைந்துள்ள ரத்தக் குழாய்கள் கரியமில வாயுவை எடுத்துச் செல்வதற்காக, வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள வால்வுகள் பழுதடையும் பட்சத்தில், அவை சுருண்டு விடும். பழுதடைந்த ரத்தக் குழாய்களிலிருந்து ஒருவிதமான மந்தநிலையிலுள்ள வலி ஏற்படும். பாதிப்படைந்த விதைப்பை மற்ற பகுதியைவிட அதிக அளவில் கீழ்நோக்கி தொங்கக் கூடும். லங்கோடு மூலம் இப்பகுதி இறுக்கமாக மேல்நோக்கிக் கட்டப்படாமல் போனாலோ, அதிக நேரம் நிற்க நேர்ந்தாலோ, வலி அதிகமாக இருக்கும். விதைப் பையினுள் குடல் இறக்கம் ஏற்பட்டிருந்தாலும் வலி ஏற்படக் கூடும். குட்டையாகவும், குண்டாகவும் இருக்கக் கூடியவர்களைவிட, உயரமாகவும், ஒல்லியாகவும் இருக்கும் நபர்களுக்கு விதைப் பையில் வலி அதிகமாகத் தென்படும் என்பது நவீன ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
இந்த உபாதை ஏற்படக் காரணமாக அடி வயிற்றில் ஏற்படும் குடல் காற்றின் அழுத்தம், அதனை உதாசீனப்படுத்தி உடற்பயிற்களைச் செய்தல், குடலில் மலத்தின் சேர்க்கையை அதிகப்படுத்தும் மொச்சை, உளுந்து, ஆட்டின் மாமிசம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், இருசக்கர வாகனத்தில் அதிக நேரம் சவாரி செய்தல், இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல் அல்லது பலவந்தமாக வெளியேற்றுதல், இறுக்கமான உள்ளாடைகளை விதையைத் தாங்குமாறு அணியாமல் ட்ரவுசர் அணிதல், குளிர்ந்த நீரில் அதிக நேரம் நீச்சலடித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த உபாதையில் கையாள வேண்டிய சில ஆயுர்வேத சிகிச்சைமுறைகளில் முன்னிற்பது வஸ்தி எனும் ஆசன வாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், மூலிகைக் கஷாயமும்தான். இதனால் கீழ்க்குடல் பகுதியிலுள்ள மலம், சிறுநீர் ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அப்பகுதி சுத்தமடைகிறது. அதன் பிறகு வலியைப் போக்கக் கூடிய சுகுமாரம் கிருதம், விதார்யாதி கிருதம், இந்துகாந்தம்கிருதம் போன்றவற்றில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. ஐந்து பல் பூண்டை நசுக்கி, கால் டம்ளர் பாலுடன் கலந்து, ஒன்றே கால் டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு, பால் அளவு மட்டும் மிஞ்சும்போது வடிகட்டி, அந்தப் பாலை காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக, வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதன் மூலமாக, விதைப் பையில் ஏற்பட்டுள்ள ரத்தக் குழாய் சுருட்டலையோ அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்டிருக்கும் வலியையோ குறைத்துவிடலாம்.
ஹிங்கு திரிகுணம் எனும் மூலிகைக் தைலத்தை வெதுவெதுப்பாக வயிற்றின் கீழ்ப்பகுதி, விதைப்பை பகுதிகளில் பூசி, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் காலையில் குளிப்பதால், விதைப்பை வலியைப் போக்கிக் கொள்ளலாம்.
விதைப்பை வலிக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறப்பான மருந்தாகும். வாரம் இருமுறை சுமார் 10 - 15 மி.லி. விளக்கெண்ணெய்யை அரை கிளாஸ் சூடான பாலுடன் கலந்து, காலை , இரவு உணவுக்குப் பிறகு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடுவதன் மூலம், விதைப்பையின் உள்ளே அமைந்துள்ள ரத்தக் குழாய் சுருட்டலை, நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
உங்களுடைய உணவில் வாயு பண்டங்களைத் தவிர்க்கவும். உணவு வகைகளை வெதுவெதுப்பாகச் சாப்பிடவும். வெந்நீர் மட்டுமே அருந்தவும். முன் குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்க்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...