ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: அடுக்குத் தும்மலா? எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்!
பல வருடங்களாக எனக்கு அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், பின் தலைப் பகுதியில் வலி, தாங்க


பல வருடங்களாக எனக்கு அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், பின் தலைப் பகுதியில் வலி, தாங்க முடியாத தலைவலி, குளித்தால் அலர்ஜி, பீனிசம் ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். ஆயுர்வேத, யுனானி ஆங்கில மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. இதற்கு நிவாரணம் என்ன?
எம்.சேக் உசேன், வடகரை.
சகிப்புத் தன்மைக் குறைவினால் பீனிசம் அதாவது ஜலதோஷம் உபாதை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எந்த நாட்களில் ஏற்படும் என்று நிர்ணயிப்பது கடினம். பருவ மாறுதல் அதாவது கோடை மாறிக் காற்றோ, காற்று மாறி மழையோ, மழை மாறி பனியோ, பனி மாறிக் கோடையோ ஏற்படும்போது புழுக்கம், மந்தாரம், பனி, காற்று என்று ஒவ்வொன்றும் இதற்குக் காரணமாகிவிடும். கோடைச் சளியும், மழைச் சளியும் தீர நாளாகும். மற்றவற்றின் தொந்தரவு சகிக்காது. பருவ மாறுதல் போல இடமாறுதல், நாம் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தும் தண்ணீரின் மாற்றம், தண்ணீரை உபயோகிக்கும் வகையில் மாறுதல் போன்றவை கூட ஜலதோஷத்தை உண்டாக்கலாம். இவ்வகை மாறுதலைக் கூட உடல் தாங்க சக்தியற்றிருப்பதுதான் காரணம். மூக்கிலும், நுரையீரலிலும், தோலிலுமுள்ள சிறு உறுப்புகள் தளர்ந்து போனால், நம்மைக் கெடுத்து பீனிச உபாதையை ஏற்படுத்திவிடுகிறது.
நீங்கள் முதலில் இந்த உபாதையிலிருந்து விடுபட சகிப்புத் தன்மை குறைவிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு,
* வாரமிருமுறை, முடிந்தால் தினந்தோறும் உடல் முழுவதும் நல்லெண்ணெய்யையும் விளக்கெண்ணெய்யையும் சம அளவில் கலந்து, வெதுவெதுப்பாக தடவித் தேய்த்துக் கொண்டு, உடல்நிலைக்கும், கால நிலைக்கும், தேச நிலைக்கும் ஏற்றவாறு குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளிக்கவும்.
* பகலில் தூங்காமல் இரவில் கண் விழியாமல் இரவின் முன் யாமத்திலேயே தூங்க ஆரம்பித்து விடியற் காலையிலேயே எழுந்து கொள்ளவும்.
* மலசுத்தம், உடல் சுத்தம் இவற்றில் கருத்துள்ளவராக இருக்கவும்.
* தேகப் பயிற்சியை உடல் களைப்பு ஏற்படாத வகையில் விடாமல் செய்து வரவும்.
* காலத்தில் மிதமாயும், இதமாயுமுள்ள உணவையே சாப்பிடவும்.
* உற்சாகம், தைரியம், அமைதி இவற்றை வளர்க்கும் செயல்களில் ஈடுபடவும்.
இவற்றின் மூலமாக உங்களுக்கு பலக் குறைவே ஏற்படாது. பீனிசம் வராது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலைக்கும் தோலுக்கும் வெளி சீதோஷ்ண நிலையைத் தாங்கும் வலுவை நீங்கள் பெறலாம். உடற்பயிற்சி நுரையீரலை வலுவாக்குகிறது. தூக்கத்தில் கட்டுப்பாடு நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகளுக்கு வலுவூட்டுகின்றது. உண்ணும் உணவு தேய்வை ஈடு செய்து நிரப்புகிறது. மனக் களைப்பை நீக்கும் உபாயங்கள் மற்றவை. தேக மன ஆரோக்கியத்தில் இன்றியமையாத சாதனங்கள் இவை.
அடிக்கடி சளி பிடித்துக் கொள்பவர்கள் சளி வராமல் பாதுகாப்பதற்காகவும்,பொதுவாகவே உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் சியவனபிராசம், அச்வகந்தாதி லேகியம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைச் சாப்பிட்டு உடலைச் சீராக்கிக் கொள்ளலாம். தலையில் எண்ணெய் தடவாமல் குளிர்ந்த நீரில் குளிப்பதையும், உடலில் எண்ணெய் தேய்க்காமல் வெந்நீரில் குளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், கொம்பரக்கு ஆகியவற்றை தலைக்கும் உடலுக்கும் தேய்த்துக் குளிக்கும் எண்ணெயில் சேர்த்துச் சிறிது சூடாக்கிய பிறகு பயன்படுத்துவது மிகவும் நல்லது.
அஸன வில்வாதி தைலம் தலைக்கும், பலாச்வகந்தாதி தைலம் உடலுக்கும் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். எளிதில் ஜலதோஷம் பிடிக்கும் தன்மை, காது, மூக்கடைப்பு, காதில் சீழ் முதலிய உபாதைகளால் கஷ்டப்படுபவர்களுக்கு அஸனவில்வாதி தைலத்தைத் தலைக்கும், இளஞ்சூடாக்கி 4 - 5 சொட்டுகள் காதுக்குள்ளும் விட்டும் பயன்படுத்தினால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...