வாழும் கலைஞன்
மனிதர்களின் ஆதிபடைப்பு என்றால் அது கோடுகளாலான சித்திரமும், நிறங்களாலான ஓவியமும்தான்


ஓவியம் என்பது நிறம் இல்லை. சித்திரம் என்பது வடிவம் கிடையாது. ஆனால் சித்திரம் கோடுகளால் வடிவம் பெறுகிறது. வண்ணங்களால் வனப்பு பெறுகிறது. அது மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்வுகளின் படைப்பு. அறிந்தது என்பதை எல்லாம் பூரணமாக அறிய வைக்கிறது; அறியாதது என்பதையும் அறியவொண்ணாதது என்பதையும் அறிய முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. படைப்பு என்பதின் உயிர்த்தன்மையே அதுதான்.
மனிதர்களின் ஆதிபடைப்பு என்றால் அது கோடுகளாலான சித்திரமும், நிறங்களாலான ஓவியமும்தான்.அவற்றோடு இசையும் நடனமும் இணைந்து சென்றன. கோடுகளின் வழியாக எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டான். கலை, தத்துவம் என்பதற்கு எல்லாம் எழுதி ஓர் மரபை ஏற்படுத்திக் கொண்டான். அதில் முதல் அம்சம் மனிதன் என்கிறவன் தெரிந்து கொண்டாலும் சரி, தெரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, ஒரு கலைஞன் என்பதுதான். அவன் கலை வெளிப்பாடு என்பது கவிதை,இசை, நடனம், ஓவியம், சிற்பம் என்றெல்லாம் வெளிப்படுகிறது. அவன் காலம் காலமாக ஜீவித்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் அவன் படைப்பு புதுமை கொள்கிறது. எனவே புதுக்கவிதை, நவீன ஓவியம் என்று பெயரிட்டுக் கொள்கிறான்.
புதுக்கவிதை, நவீன ஓவியம்- என்பதெல்லாம் எங்களுக்கு நெடிய மரபும், பாரம்பரியமும் இருக்கிறது என்பதைச் சொல்வதுதான். நாங்கள் வெறுமையில் இருந்து வந்தவர்கள் இல்லையென்று சொல்லிக் கொண்டுதான் இருபதாம் நூற்றாண்டில் அசலான கவிஞர்களும், கலைஞர்களும், பூரண அமைதியுடனும், அழகுடனும் தங்கள் படைப்புகளை வழங்கினார்கள். அவர்களின் புதுமையான படைப்பில் வேர்கொண்டிருந்த பழமை மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்பட்டதை அறிந்து கொண்டார்கள். அதற்கு நாடு இல்லை; இடமில்லை. ஆட்சி முறை என்பதில்லை. முடியாட்சி நாட்டிலும், சர்வாதிகார நாட்டிலும், ஜனநாயக நாட்டிலும், அடிமைப்பட்டிருந்த நாட்டிலும் கலைஞர்கள், கவிஞர்கள் கூடிப் பேசி முடிவெடுத்தது போல ஒன்றாகச் செயல்பட்டார்கள் முகம் பார்க்காமலும், மொழி தெரியாமலும்.
ஒவ்வொரு காலத்திலும், புதிய படைப்பு என்பது நவீனமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக படைப்புகளில் உச்சமென சொல்லப்படும். ஆடும் ஆட வல்லான் தன் காலத்தில் நவீன படைப்பு. அது இன்னொன்றை சார்ந்து செயல்பட்டது இல்லை. கலை, தத்துவம், பண்பாடு- என்று பலவற்றையும் ஆதாரமாகக் கொண்டது. அது அறியப்படவில்லை என்பதற்காக இல்லையென்றாகிவிடாது. அதன் நவீனதன்மை என்பது என்றும் நிலைபெற்று இருப்பதாகும்.
இருபதாம் நூற்றாண்டின் நவீன ஓவியர் ரவீந்திரநாத் தாகூர் எம்.எஃப். உசேன். இருவரும் வெவ்வேறு கலாசாரம், மொழி, பண்பாடு சார்ந்து வாழ்ந்து இருந்தாலும் படைப்புக் கலைஞர்கள் என்ற வரிசையில் ஒன்றாகிறார்கள். அந்த வரிசையில் சேரக்கூடிய நவீன ஓவியர் கே.எம். ஆதிமூலம் (1938-2008 ஜனவரி 15). அவர் அசல் கலைஞர் என்றாலும் புராதனமான சென்னை ஓவியப் பள்ளியில் படித்தார். அது 1851-ஆம் ஆண்டில் கர்னல் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஓவியப் பள்ளி. அதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஓவிய, கலைப்பள்ளி. கலை விற்பன்னரான இ.பி.ஹேவல் சில ஆண்டுகள் முதல்வராக இருந்தார். இந்தியர்கள் தங்களின் உயர்ந்த கலைகள் மீது ஈடுபாடும், நம்பிக்கையும் கொள்ளத்தக்க விதமாக பாடத் திட்டத்தை அமைத்தார்.
ஓவிய கலைப்பள்ளி கலைகள் மீது அபிமானம் கொண்டவர்கள், கலைஞர்கள் என்று நம்பியவர்கள் என்று பலரும் வந்து சேர்ந்த காலத்தில் ஆதிமூலம் சென்னை ஓவிய கலைப்பள்ளியில் வந்து சேர்ந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பள்ளியின் முதல்வராக இருந்த புகழ்பெற்ற சிற்பியும், ஓவியருமான தேவி பிரசாத் ராய் செüத்ரி ஓய்வு பெற்று இருந்தார். நவீன ஓவியரான பணிக்கர் முதல்வராகி இருந்தார். கிருஷ்ணராவ், தனபால், சந்தான ராஜ், ஜானகி ராமன், முனுசாமி, அந்தோணிதாஸ்- என்று சில நவீன கலைஞர்கள் புதிய காற்றை சுவாசித்துக் கொண்டு இருந்தார்கள். பல நாடுகளில் ஏற்பட்டிருந்த கலை மறுமலர்ச்சியும் இந்திய சுதந்திரக் காற்றும், தங்கள் படைப்புக்கள் மீது புது நம்பிக்கை கொள்ள வைத்திருந்தது. அதனோடு இலக்கியம், சினிமா, நடனம், இசை- எல்லாம் பிரித்தறிய முடியாத விதத்தில் ஒன்று சேர்ந்து கலைப் படைப்பு என்பதை இயல்பாகவே நவீன படைப்பாக்கியது. அதன் படைப்பை தனித்தன்மை மிளிர ஒவ்வொரு கலைஞர்களும் அயராது உழைத்தார்கள்.
ஆதிமூலம் தன் சித்திரங்களை கோடுகள் வழியாகவே நிலைநிறுத்திக் கொண்டார். சித்திரம் என்பது கோடுகள் வழியாகவே புனையப்படுகிறது. வளைந்தும், நெளிந்தும், நேராகவும், குறுக்காகவும் பாய்ந்து செல்லும் கோடுகள்தான் கலையின் ஆளுமையாகிறது. அது கற்பதோ- கற்றுக்கொடுக்கப்படுவதோ இல்லை. ஒவ்வொரு கலைஞனும் தனக்கான கோட்டை தனித்தன்மையுடன் சிருஷ்டித்துக் கொள்கிறான். படைப்பு எழுத்தாளனுக்கு மொழி நடைபோல- சித்திரக்காரனுக்கு கோடுகள். உலகத்தின் முதல் தரமான சித்திரக்காரர்கள் எல்லாம் கோட்டோவியம் வரைந்து தன்னை நிலைநாட்டி இருக்கிறார்கள்.
ஆதிமூலம் தன் இளம் பருவத்தில் இருந்தே அசலான கோட்டோவியராகத் திகழ்ந்தார். அவர் கோடுகள் அவர் ஆளுமையின் வெளிப்பாடு. திண்மையும் வளமும் கொண்ட அவரின் கோடுகள் தனியழகு பெற்றவை. ஒவ்வொரு கோடும் ஒரு சித்திரம் என்றும், பல கோடுகள் ஒன்று சேர்ந்தும் ஒரு சித்திரமாகின என்றும் சொல்லலாம். ஒரு முப்பதாண்டு காலம் அவர் கறுப்பு கோடுகள்தான் கிழித்து வந்தார். ஆனால் அவரின் கோடுகள் இன்னொருவர் கோட்டைச் சார்ந்ததோ- அதில் இருந்து பெற்றதோ இல்லை. அவரின் கோடுகள் அவர்க்கானது. அவரே தன் ஆளுமையில் உருவாக்கிக்கொண்டது. ஆனால் அவர் சொல்ல விரும்பியதை எல்லாம் சொல்லக்கூடியது. அவரின் கோடுகள் வளர்ச்சி காலம் என்பது சார்ந்ததில்லை. அவரின் ஆரம்ப கால சித்திரம் என்று கருதப்படும் "எனது பள்ளிக்கூடம்' - என்ற சென்னை ஓவியப்பள்ளி கோட்டோவியம்- கோடுகளின் ஆளுமை சக்தி, வனப்பு என்பதால் என்றும் நவீன கோட்டோவியமாக விளங்குகிறது.
அவர் தன் படைப்பிற்கு பல்வேறு அம்சங்களை எடுத்துக்கொண்டார். அதில் ஒன்றுதான் தமிழகக் கோவில்களில் காணப்படும் எழுத்துக்களை அவர் நவீன தமிழ் எழுத்து சித்திரங்களாக்கினார். அவர் கோட்டோவியங்களில் பறவைகள், மனிதர்கள், அரிக்கன் விளக்குகள், மகாராஜாக்கள், விலங்குகள் ஆகியவற்றோடு தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் உண்டு. தன் கோட்டோவியங்கள் மீது அவர் அதிகமான நம்பிக்கைக் கொண்டிருந்தார். பல கோட்டோவியங்களை ஒன்றாகச் சேர்த்து "கோடுகளுக்கு இடையில்' ("ஆங்ற்ஜ்ங்ங்ய் ற்ட்ங் ப்ண்ய்ங்ள்') என்று நூலாக வெளியிட்டார்.
கோட்டோவியங்களை வடிவநேர்த்தியுடன் வரைந்து வந்த ஆதிமூலம் வடிவமற்ற அகவுலகத்தையும் வான மண்டலத்தையும் ஒன்று சேர்ப்பது போல கறுப்பு வெளுப்பில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். கோடு, எல்லையற்ற நெடும்பரப்பில் மாயமாகிவிட்டது. அதாவது இருந்த கோடுகள், கறுப்பில் மறைந்து பொருள் தந்தன. அது மனதைக் களிப்புற வைத்தது. தெரிவது போலவே- தெரியாத உலகமும் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டியது. அது அவரின் அகமனம் சார்ந்தது. தன்னை அவர் தன் படைப்புகள் வழியாகக் கண்டது போல- அவர் படைப்புக்களைக் காண்கிறவர்களையும் அதே அனுபவத்தைப் பெற வைத்தார்.
கலைஞன் எப்பொழுதும் பயணம் செய்கிறவன். தன் படைப்பின் வெற்றியில் இளைப்பாறுகிறவன் இல்லை. வெற்றி தோல்வி என்பதை அறியாமல் படைத்துக்கொண்டே இருக்கிறவன்.
தமிழ் இலக்கியப் படைப்பெழுத்தாளர்களோடும், சிற்றிதழ்களோடும் இருபதாண்டுகளுக்கு மேலாகச் சேர்ந்து இருந்தார். அவர்களின் நவீன படைப்புகளுக்குத் தன் பங்களிப்பாகச் சித்திரங்கள் வரைந்தார். அவை வழக்கமான இதழ் சார்ந்தவையோ,அட்டைப் படமோ இல்லை. புத்தம் புதிய கலைப் படைப்புகள். எழுத்து போலவே நவீனமானது. அது நவீன தமிழ்ப்படைப்புலகத்தை வசீகரித்து புதிய தடம் பதித்தது. வேறு வேறு துறைகளில் பணியாற்றினாலும் படைப்பு என்பது ஒரே மாதிரியானது என்பதை நிலை நாட்டியது. ஐரோப்பிய நாடுகளில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒன்று சேர்ந்து வேறுபாடுகளுக்கிடையில் வேலை செய்வது என்பதை அவர் சாத்தியமாக்கினார். படைப்போவியம்; சித்திரங்கள் போலவே அவர் புத்தகங்கள் இதழ்களுக்கு வரைந்த கோட்டோவியங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கறுப்பு- வெள்ளையென பிரபஞ்ச படைப்புகளில் இருந்து அவர் வண்ணங்களை கையில் எடுத்துக் கொண்டார். வண்ணங்கள் அவர் படைப்புகளில் புது அர்த்தம் பெற்றன. மனதிற்கு மகிழ்ச்சியும் அமைதியும் அழகும் கொடுத்தன. இவர் பிரபஞ்ச படைப்புகள் ஒன்று போல் இருந்தாலும் அடிப்படையில் ஒன்றில்லை. ஒவ்வொரு படைப்பும் வண்ணங்களின் கோர்வையிலும் வடிவநேர்த்தியிலும் தனித்தன்மை பெற்றவை ஆகும்.
அவர் மனிதர்களின் மனதையும்- அதில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளையும் அரூபமானவற்றையும் ஒரு வடிவத்திற்குள் ரூபத்திற்குள் கொண்டு வந்தார். அது பூரண அழகும் அமைதியும் பெற்று எல்லோர்க்கும் உரியதாகிறது. அந்தப் பொதுத்தன்மையில்தான் தனித்தன்மை கொண்ட கலைஞன் வாழ்கிறான் என்று சொல்வது ஆதிமூலம் போன்ற அசல் கலைஞர்களை முன் வைத்து சொல்வதுதான்.
ஓவியங்கள் : கே.எம். ஆதிமூலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...