சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இனிப்புப் பற்பசை நல்லதா?

இனிப்பாக இருக்கக் கூடிய மாவுப் பண்டத்தையோ, மாவாகக் கூடியதையோ வாயில் போட்டு அடிக்கடி

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:01 am

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 34. பல் வலியால் அடிக்கடி அவதிப்படுகிறேன். இதுவரை ஐந்து பற்களில்  சொத்தை ஏற்பட்டு தானாகவே பாதி உடைந்துவிட்டது. இதற்கு ஆயுர்வேதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? லட்சுமி, விஜயபுரி.

இனிப்பாக இருக்கக் கூடிய மாவுப் பண்டத்தையோ, மாவாகக் கூடியதையோ வாயில் போட்டு அடிக்கடி கொறித்துக் கொண்டிருந்தால், அதன் சிறு பகுதிகள் பற்களிடையே தங்கி, வயிற்றில் உணவு செரித்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் புளிப்பின் வாசனை வாயில் உள்ள இனிப்பைப் புளிப்பாக்கிவிடும். இந்தப் புளிப்பு, ஈறுகளின் இறுக்கத்தைத் தளர்த்தி நீர்க்கச் செய்துவிடும். பற்களுக்கும், ஈறுகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி விரிந்து அதில் வாய் மலப் பொருள்கள் தேங்கி அழுகும். ஈறுகளில் அழுந்தியுள்ள பற்களின் வேரின் மூலம் இதனால் பலவீனப்படுவதால், பல் வலியை ஏற்படுத்தும்.

வாயில் பற்பல நோய்க் கிருமிகள் தங்க இடமுண்டு. உணவுப் பகுதிகள் பற்களின் இடுக்குகளில் சேரும்போது இந்த நோய்க் கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. இந்தக் கிருமிகள் பற்களின் எனாமலை அரித்துவிடும்.  பற்களைச் சொத்தையாக்கிவிடும். அதனால் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

இன்று கடைகளில் கிடைக்கும் பற்பசைகளும் பற்பொடியும் இனிப்பாகவே இருக்கின்றன. இவற்றால் பல் துலக்கிய பின் வாயை நன்றாகக் கொப்பளித்து பற்பசை, பற்பொடியை அகற்றாமல் விட்டுவிட்டால் இவையே நோய்க்குக் காரணமாகலாம். ஆயுர்வேதம் இவ்விஷயத்தில் ஒரு புதிய கருத்தைக் கூறுகிறது.

பற்களைத் துலக்கப் பயன்படுத்தும் பொடியோ, பசையோ கசப்பும் காரமும், துவர்ப்பும் மிக்கதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த மூன்று சுவையினால் வாயில் ஊறும் உமிழ்நீரும், அதை ஊறச் செய்யும் உமிழ்நீர் கோளங்களும் சுறுசுறுப்பும், புத்துயிரும் பெறுகின்றன. உமிழ்நீரின் பல வேலைகளாகிய அரிசியின் மாவுச் சத்தை ptyalin என்ற என்சைம் மூலம் சர்க்கரையாக மாறுகிறது. Mucin என்ற புரதம் அதை நெய்ப்புடன் வைத்திருப்பது, உணவு உண்ணும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் வாய்ப்பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, தங்கியுள்ள உணவுப் பகுதிகளை அழுகவிடாமல் புரட்டி உட் செலுத்தி வாயில் நாற்றமில்லாமல் செய்வது போன்றவை திறம்பட நடைபெற இச்சுவைகள் உதவுகின்றன.

பற்பொடியிலுள்ள காரச் சுவையினால் சுவைக் கோளங்களும் உமிழ்நீர் கோளங்களும் தூண்டப்படுகின்றன. துவர்ப்பு புண்ணை ஆற்றும். கசப்பு அயர்வைப் போக்கும். அதிக அளவில் உமிழ்நீர் சுரப்பதைக் குறைக்கும். இம்மூன்றும் வறட்சி தரும் சுவையானதால், பிசுபிசுப்பால் ஒட்டிக் கொள்ளக் கூடிய உணவுப் பகுதிகள், வறண்டு இடுக்குகளிலிருந்து விடுபட்டு, எளிதில் வெளியாகும். வாய் மொரமொரவென்றிருக்கும். புது உணவை விருப்பத்துடன் ஏற்கும்.

 பொதுவாக மேற்குறிப்பிட்ட சுவையுள்ள பற்பொடி நல்லதெனக் கூறும் ஆயுர்வேதம், மற்ற சுவைகள் கூடாதெனக் குறிப்பிடவில்லை. உண்ட உணவு செரிக்காத நிலையில், புளிப்பும் உப்பும் கலந்த பற்பசை அல்லது பற்பொடியில் பல் தேய்தால் உணவு விரைவில் செரித்துவிடும். வாய் உலர்ந்து புண் அதிகமான நிலையில் இனிப்பே அதிகம் நல்லது. இனிப்புக்குத் தேனையும், உப்புக்கு இந்துப்பையும், கடலுப்பையும் சேர்ப்பது நல்லதே. வாய்ப்புண் ஆற எள்ளுத் தூளால் பல் தேய்ப்பது நல்லது.

ஆயுர்வேத மருந்துக் கடைகளில் பற்பொடிகள் பல, ஆயுர்வேதத்தில் கூற்றுப்படி தயாரித்து விற்கப்படுகின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். பற்களைத் தேய்ப்பதைப் போல பல மடங்கு பல் தேய்த்த பின்னரும் பிறகும் அடிக்கடியும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதோ கடமைக்கென்று செய்யாமல் வாயின் தூய்மையை மனத்தில் கொண்டு பொறுமையுடன் செய்வது அவசியம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.