ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கைவிரல்களில் கடுமையான வலி!
எனக்கு வயது 50. இரவு நேரங்களில் இடதுகாலில் கெண்டைக் காலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு நரம்புகள் இழுத்துக் கொண்டு சுமார் 10 நிமிடங்கள் விடுவதில்லை. மிகவும் கடுமையான வலி. வலி தாங்காது அலறிவிடுகிறேன்.


எனக்கு வயது 50. இரவு நேரங்களில் இடதுகாலில் கெண்டைக் காலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு நரம்புகள் இழுத்துக் கொண்டு சுமார் 10 நிமிடங்கள் விடுவதில்லை. மிகவும் கடுமையான வலி. வலி தாங்காது அலறிவிடுகிறேன். நரம்பு தானாக தளரும் வரை வலி நீடிக்கிறது. பகல் நேரங்களில் சில சமயங்களில் எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக் கொண்டு கடுமையான வலி எடுக்கும். ஐந்து நிமிடங்கள் வரை நீடித்து பின்னர் தானாகவே சாதாரண நிலைக்கு வரும். இதை எப்படிக் குணப்படுத்துவது?
வி.சகாயராஜா, திண்டுக்கல்.
"பிண்டிகோத்வேஷ்ட :' என்ற ஓர் உபாதையை ஆயுர்வேதம் வர்ணித்திருக்கிறது. காலிலுள்ள கெண்டைச் சதைப் பிடிப்பு என்று இதைத் தமிழில் கூறலாம். குடலிலுள்ள மலம் வெளியேறுவதற்காக ஏற்படும் இயற்கையான உந்துதலை, வலுக்கட்டாயமாக அடக்க வேண்டிய நிர்பந்த நிலைகளில், இந்தத் தசைப் பிடிப்பு ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குடலில் ஏற்படும் வாயு மற்றும் மலத் தேக்கலின் பிரதிபலிப்பை, கால் கெண்டைச் சதையில் உணர்வதால், வயிற்றுக்கும் காலிலுள்ள சதைக்கும் தொடர்பு இருப்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. அதனால் நீங்கள் எக்காரணம் கொண்டும் மலத்தை அடக்குவதோ, வயிற்றில் வாயுவின் தேக்கத்தை அதிகப்படுத்தவோ கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
குடலில் வாயு- மலத்தேக்கலை ஏற்படுத்தும் நெய்,எண்ணெய்ப் பசையில்லாத வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்களைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியான முறையில் ஆகாத உணவு வகைகள், உலர்ந்து போன காய்கள், குடலில் நீர்ப்பசையை சுண்ட வைக்கும் மிளகாய், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அதிகம் சேர்ப்பது, கொத்துக் கடலை, மொச்சை, சோளமுத்து, மரவள்ளிக் கிழங்கு, ஜவ்வரிசி இவற்றினுடைய மாவுகளை அப்படியே கூழாக்கிச் சாப்பிடுதல், தீட்டிய அரிசி, வாழைப்பூ, அத்திப் பிஞ்சு, சுண்டை வத்தல் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுதல், மதுபானம், அதிகப்பட்டினி, மிதமிஞ்சி சாப்பிடுதல் போன்றவை உங்களுடைய உபாதையை மேலும் பெரிதாக்கிவிடக் கூடும்.
குடலில் வாயு - மலச் சேர்க்கையை தவிர்ப்பதற்கும், நரம்புகளின் வலுவைக் கூட்டவும் சில எளிய உபாயங்கள்:
காலையில் 5 மணிக்கு எழுந்ததும் ஒரு பெரிய டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாய்ப் பருகவும்.
காலையில் 7 மணிக்கு 2 வாழைப்பழம் உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு ஒரு டம்ளர் (சுமார் 250 - 300 மி.லி.) வெதுவெதுப்பான காய்ச்சிய பால் குடிக்கவம்.
காலையில் இட்லி, தோசை போன்ற மாவுப் பலகாரம் தவிர்த்து சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய் கலந்து பருப்பு ரசம், நன்றாக வேக வைத்த கறிகாய்க் கூட்டு அல்லது பொரியல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் என்ற வகையில் சாப்பிடவும். தயிர் நல்லதல்ல.
காலையில் 11 மணிக்கு இளநீர் குடிக்கவும்.
மதியம் 12 1/2 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அத்திப் பழம், தக்காளி ஜூஸ், ஆப்பிள் பழம் இழற்றில் கிடைத்த பழங்கள் சாப்பிடவும்.
மதியம் 2 மணிக்கு காலை, உணவு வகைகளைப் போலவே சாப்பிடவும்.
மாலை 5 மணிக்கு ஒரு டம்ளர் பால் குடிக்கவும்.
இரவு சாப்பாட்டில் புளி - புளிப்புச் சேர்க்காமல் பச்சைக் கறிகாய் சேர்த்த கூட்டு சாதம், மோருடன் சாப்பிடவும். இரவு படுக்கும் முன் வெந்நீர் அருந்தவும்.
உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி, மூலிகை இலைகளைத் தண்ணீரில் கொதிக்க விட்டு, அதிலிருந்து வெளியாகும் நீராவியை உடலெங்கும்படுமாறு செய்வதும், மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகைக் கஷாயங்களைக் கொண்டு செய்யப்படும் வஸ்தி எனும் எனிமா சிகிச்சை முறையாலும், தலையில் எண்ணெய்யை நிறுத்திவைக்கும் சிரோவஸ்தி முறையும், உடலிலுள்ள நாடி நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறந்த ஆயுர்வேத சிகிச்சைமுறைகளாகும். இவற்றால் நீங்கள் நல்ல பயனைப் பெறலாம்.
தசமூலம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை, 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான பால் கலந்து சிட்டிகை அப்ரக பஸ்மத்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 41 -48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...