ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நரம்புகளில் அழுத்தம்... பாதங்களில் எரிச்சல்!
நாள் முழுவதும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், முதுகுத் தண்டுவடத்தில் அமைந்துள்ள எலும்புகள் வளைவதும் நிமிர்வதுமாக வேலை


என் மனைவிக்கு வயது 70. பகலெல்லாம் வீட்டு வேலைகளை நன்கு செய்கிறாள். இரவு 7 அல்லது 8 மணிக்குப் பாதங்களில் எரிச்சல், முதுகிலும் எரிச்சல். இரவு படுக்கும் முன் இரண்டு பாதங்களிலும் துணியை தண்ணீரில் நனைத்துச் சுற்றிக் கட்டுப் போட்டு, முதுகிலும் தண்ணீர் தெளித்த பிறகு தூங்கி விடுகிறாள். பல வருடங்களாக அவதிப்படுகிறாள். எரிச்சலைப் போக்க வழி உண்டா?
பி.முருகேசன், வாரியங்காவல்.
நாள் முழுவதும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், முதுகுத் தண்டுவடத்தில் அமைந்துள்ள எலும்புகள் வளைவதும் நிமிர்வதுமாக வேலை செய்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்படாமலிருக்க, வில்லைகள் தாங்குகின்றன. இந்த வில்லைகளில் ஏதேனும் விதத்தில் மெலிந்து போனாலோ, தன் இடம் விட்டு நெகிழ்ந்து போனாலோ, உட்புறம் அல்லது வெளிப்புறம் பிதுக்கிக் கொண்டாலோ, அவ்விடங்களிலிருந்து வெளிப்படும் நரம்புகளின் மீது அழுத்தி அவை படர்ந்துவிட்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. ஙதஐ நஇஅச எடுத்துப் பார்த்தால் இந்த உபாதைக்கான காரணம் தெளிவாகத் தென்படவும் கூடும். நரம்புகளில் ஏற்படும் இந்த அழுத்தத்தைப் பொதுவாகவே பெண்கள் வேலைப் பளுவின் காரணமாக உதாசீனப்படுத்துவதால், இந்த உபாதையானது மேலும் மேலும் வளர்ந்து எரிச்சலையும் வலியையும் நிரந்தரமாக்கிவிடுகிறது.
கீழ் இடுப்புப் பகுதியில் முதலில் சில நாட்கள் அங்குள்ள நீர்க்கட்டு பிரியும் விதத்தில் ஆற்று மணலைத் துணியில் முடிந்து, சூடாக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, அவ்விடத்தில் உளுந்து மாவும் மைதா மாவும் கலந்த வரம்பைக் கட்டி, மூலிகைத் தைலங்களால் நிரப்ப வேண்டும். தைலங்கள் நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயின் வீர்யமானது, அப்பகுதியிலுள்ள தோலின் வழியே உறிஞ்சப்பட்டு, வில்லைகளின் அழுத்தத்தை விடுவித்து, அவற்றின் ஊட்டத்தை வலுப்படுத்தி, மறுபடியும் பழைய நிலைக்கு அவற்றைக் கொண்டுவரும் முயற்சிகளில் பெரிதும் பங்காற்றுகிறது. விடுவிக்கப்பட்ட நரம்புகளில் ஏற்பட்டுள்ள அழற்சியையும் வலியையும் போக்க, மணத்தக்காளிக் கீரைச் சாறு சேர்த்து, விளக்கெண்ணெய் காய்ச்சிக் கொடுப்பது பண்டைய ஆயுர்வேத மருத்துவர்கள் செய்வது வழக்கத்திலிருந்தது. காகமாசீதைலம் என இதற்குப் பெயர்.
இதன் செயல்முறை: சிற்றாமணக்கெண்ணெய் 1 லிட்டர், மணத்தக்காளிக் கீரைச் சாறு 1 லிட்டர், வால் மிளகு, ஏலரிசி, வெங்காயம், கடுக்காய், சீரகம் இந்த 5 சரக்கும் வகைக்கு 30 கிராம், சர்க்கரை 250 கிராம் இவைதான் இதற்குத் தேவையானவை. வெங்காயத்தைத் தவிர மற்ற நான்கு சரக்குகளையும் நன்கு சூர்ணமாக இடிக்க வேண்டும். வெங்காயத்தைக் காய்ந்த தோல் நீக்கிச் சூர்ணத்துடன் சேர்த்து மைய அரைக்க வேண்டும். சர்க்கரையைத் தனியே தூளாக்கிக் கொள்ளவும். மணத்தக்காளிக் கீரையை நன்கு அலம்பி, இடித்துச் சாறுபிழிந்து துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
சிற்றாமணக்கெண்ணெயை இரும்புச் சட்டி அல்லது வெங்கல உருளியில் இட்டு அடுப்பிலேற்றி வால்மிளகு முதலியவை அரைத்து வைத்துள்ளதைக் கலக்கி ஒரு கொதி வந்ததும், மணத்தக்காளிச் சாற்றையும் விட்டு நன்கு காய்ச்சவும். அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாறுத் திரவம் சுண்டி, கல்கம் முதலியவை இறுகி மெழுகி போலானதும் மேல் தெளிவாக வடிகட்டிக் கொண்டு அதில் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். சிறுவர்களுக்கு 1/2 - 1 அவுன்ஸ் கொடுத்தால் பேதியாகி குடல் சுத்தமாகிவிடும். பெரியவர்கள் 1 - 3 அவுன்ஸ் வரை சாப்பிடலாம். இரவில் 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர காங்கை எனும் உடல் உட்புற எரிச்சல் குறையும். உடல் புஷ்டியாகும். கர்ப்பிணிகள் சாப்பிட்டு வர காங்கை குறைந்து, வெட்டைப்படுதல், கை, கால் சோர்வு நீங்கும். குழந்தைகளுக்கு கரப்பான் உபாதை வராது.
ஆசனவாய் வழியாகச் செலுத்தப்படும் க்ஷீர வஸ்தி அதாவது பாலில் காய்ச்சப்பட்ட மூலிகைப் பால் வைத்திய முறையாலும் எரிச்சலையும் வலியையும் போக்க முடியும். நெடு நாளைய தொந்தரவு என்பதால், குணப்படுத்த தொடர் முயற்சி தேவைப்படும். பசியின் தன்மை, உடல் வாகு போன்றவற்றை நன்றாக அறிந்து, அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விதார்யாதி கிருதம், க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101 போன்ற உள் மருந்துகளின் தொடர் உபயோகத்தாலும் உங்கள் மனைவி குணம் பெற வாய்ப்புண்டு. உடலெங்கும் பிழியப்படும் தைலதாரா எனப்படும் ஆயுர்வேத வைத்தியமுறையும் சிறப்பான சிகிச்சை முறைதான்.
உணவில் புளிப்பையும், காரத்தையும் குறைக்க வேண்டும். ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து சமையல் வேலைகளைச் செய்வதால், முதுகுத் தண்டுவட நரம்பு அழுத்தத்தைக் குறைக்கலாம். இடுப்புப் பகுதிக்கும் ஓய்வை அளிக்கும். மலச்சிக்கலும் வயிற்றில் வாயு உபாதையும் இப்பிரச்னையைப் பெரிதாக்கும் என்பதால், அவை வயிற்றில் சேராதபடி பார்த்துக் கொள்வது அவசியம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...