திரைக்கதிர்
ஜெய், நஸ்ரியா நடிப்பில் "திருமணம் எனும் நிக்காஹ்' என்ற புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கும் இப்படத்தின் தலைப்பே வித்தியாசமாக. ""எல்லாம் இழந்தவனுக்கு ஒரு சின்ன அன்பு கை வந்து


ஜெய், நஸ்ரியா நடிப்பில் "திருமணம் எனும் நிக்காஹ்' என்ற புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கும் இப்படத்தின் தலைப்பே வித்தியாசமாக. ""எல்லாம் இழந்தவனுக்கு ஒரு சின்ன அன்பு கை வந்து சேர்ந்தால் அது பேரின்பம். தீராத அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யார்? தெய்வம், அன்பு, பெருங்கருணை என பேசுகிற படங்கள் அழகான வாழ்க்கையை முன்னெடுத்தன. அந்த மாதிரி எந்தக் காரணமும் இல்லாமல் பாதிக்கப்படுகிற ஓர் அழகான வாழ்க்கை, தனக்கு நேர்ந்ததை எப்படிக் கடந்து போகிறது என்பதுதான் கதை. அந்தப் பெரும் போராட்டத்தின் அடையாளமாகத்தான் "திருமணம் எனும் நிக்காஹ்'. மற்றவர்கள் கஷ்டத்தில் சந்தோஷப்படுகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது. அப்போது ஒருவனுக்கு கிடைக்கிற உதவியில், அனுபவத்தில் கதை பயணமாகிறது. வெள்ளிக்கிழமை தோறும் புதுப் படங்கள் பார்த்தாலும் ரசிகர்கள் மனதில் "டெலிட்' ஆகாமல் சில படங்கள் மட்டுமே நிலை கொள்ளும். கல்யாணம் என்பது ஒரு கசப்பான விஷயம் என இப்போதைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது ரொம்பவே சுவாரஸ்யமான பயணம் என புரிய வைக்கிற மாதிரி இருக்கும் இந்த படம்"" என்கிறார் அனீஸ்.
உலகெல்லாம் ஒரு பெருங் கனவு... என்ற பாரதியின் வரிகளைத் தழுவி உருவாகும் படம் "அருத்தாபத்தி'. சாஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விதார்த், ஐஸ்வர்யா தத், தம்பிராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் வினயனின் உதவியாளர் சஜின்வர்கீஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதென்ன "அருத்தாபத்தி'...? ""சைவ சித்தாந்த நூல்களில் அருத்தாபத்தி என்ற சொல் பிரபலமானது. சொல்லப்படுகின்ற சொல்லிலிருந்து சொல்லாத ஒரு பொருளை நாம் அறிந்து கொள்வது என அந்த வார்த்தைக்குப் பொருள். கதைக்கு அந்த வார்த்தை தேவைப்பட்டதால், அதையே தலைப்பாக்கி விட்டோம். மகாகவியின் சுயசரிதையில் "உலகெல்லாம் ஒரு பெருங் கனவு...' என்ற கவிதைப் பாடல் தொடங்கும். அந்த வரிகளை ஒரு முழுமையான திரைக்கதையாக்கி இருக்கிறோம். சில சம்பவங்கள் நிகழும் போதுதான், "இது என்னடா வாழ்க்கை' என புலம்புவோம். அது தனக்கு வந்தால் மட்டும்தான் தெரியும். அதுவரை நமக்கான வாழ்க்கை, உணவு, இருப்பிடம் என வாழும் வாழ்க்கையும் சில நேரங்களில் சூட்சுமமாகி விடுவது உண்டு. அதுதான் திரைக்கதையின் முழு வடிவம்'' என்கிறார் இயக்குநர் சஜின்வர்கீஸ்.
"ஏணிப்படிகள்', "சலங்கை ஒலி' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் மோகன்சர்மா. கடந்த 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் இவர் இயக்கிய படம் "நம்ம கிராமம்'. கதை எழுதி தயாரித்ததுடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திரத்துக்கு முன்பு 1938-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பாலக்காடு அருகில் ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியிருந்தது. நிலச்சுவான்தார் மோகன்சர்மாவின் ஒரே மகன் நிஷன். இவரது அத்தை மகள் சம்விருதா. சிறுவயதிலேயே வேறு ஒரு சிறுவனுடன் திருமணம் முடிகிறது. சிறுவன் திடீரென்று இறந்து விட சம்விருதா விதவையாகிறாள். அவருக்கு மொட்டை அடித்து தனி அறையில் வைக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் நிஷன். தன் பேத்தியின் நிலையைக் கண்டு மனம் வெதும்பும் பாட்டி சுகுமாரி தீக்குளித்துச் சாகிறார். அதைக் கண்டு பொங்கி எழும் நிஷன் சம்விருதாவை மறுமணம் செய்கிறார். இப்படத்துக்காக நடிகை சுகுமாரிக்கு 2012-ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுகுமாரி உடல் நலக்குறைவால் காலமானார். வரும் ஜனவரி மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.
நிமிதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நறுமுகை'. அர்ஜூன்லால், இஷிதா, நிகிதா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்டோருடன் சரத்குமார் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். குறிப்பிடத்தகுந்த ஒரு சில காட்சிகளைத் தவிர முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகும் இப்படத்தின் மூலம் ஜான் ராபின்சன் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர்... ""நாளுக்கு நாள் தொலைத் தொடர்பில் உருவாகி வரும் மாற்றங்களால் காதலும் உருமாறி இருக்கிறது. அப்படியொரு வித்தியாசமான களத்தில்தான் இந்தக் காதல் கதை. மலேசியாவில் வாழும் பெண்ணுக்கும், கோவையில் இசைக்குழு நடத்தும் இளைஞனுக்குமான காதல்தான் கதை. படப்பிடிப்புக்காக 80 பேர் கொண்ட குழு 40 நாள்கள் மலேசியாவில் தங்கி படப்பிடிப்பை முடித்துள்ளது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர்.
திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். "புரியாத புதிர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநராக அறிமுகம்... "சேரன் பாண்டியன்', "நாட்டாமை', "முத்து', "அவ்வை சண்முகி', "நட்புக்காக', "படையப்பா', "தெனாலி', "பஞ்ச தந்திரம்', "மின்சார கண்ணா', "வில்லன்', "வரலாறு', "தசாவதாரம்', "ஆதவன்', "மன்மதன் அம்பு' என வெற்றிப் படங்களின் பட்டியல்... சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரகுவரன், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என தலைமுறைகள் தாண்டிய கலைஞர்களை இயக்கிய அனுபவம்... என எல்லாவற்றிலும் தனித்துவம். தற்போது "கோச்சடையான்' படத்தில் திரைக்கதை மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் இவருக்கு, "என்றென்றும் ரவிக்குமார்' என்ற பெயரில் ராஜ் டி.வி. பாராட்டு விழா நடத்தவுள்ளது. 2014, ஜனவரி 4-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திரையுலக நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் கே.எஸ்.ரவிக்குமாருக்கு நினைவுப் பரிசை வழங்குகிறார். இசையமைப்பாளர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிப்பை வெளிக்காட்டிய "அன்னக்கொடி', கவர்ச்சியை தூக்கலாக காட்டிய "கோ' என மாறுபட்ட படங்கள் வந்த போதும் கார்த்திகாவின் மார்க்கெட் மந்தம்தான். தற்போது அருண் விஜய் ஜோடியாக "டீல்' படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, சமந்தா, காஜல் உள்ளிட்டோர் முன்னணி இடத்துக்கு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கார்த்திகாவால் கவர்ச்சி போட்டிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இல்லாதது கார்த்திகாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இவரது தங்கை துளசி "கடல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கும் வரவேற்பு இல்லாததால் பெரிய வருத்தம். இந்நிலையில் கார்த்திகாவுக்கு ராதா மாப்பிள்ளை தேடி வருவதாக தகவல் வெளியானது. இந்த நேரத்தில்தான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் "புறம்போக்கு' படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகளை ராதா தள்ளிப் போட்டார். ஆனால் இந்த முறையும் கார்த்திகாவுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில்தான் கேரக்டர் அமைந்துள்ளது. சக ஹீரோயின்களின் கவர்ச்சிப் போட்டியை இவரது நடிப்பு திறன் வெற்றிக் கொள்ளுமா? என்பதை பொறுத்துதான் கார்த்திகாவின் திரை உலக எதிர்காலம் அமையவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...