டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

"கும்கி' உள்ளிட்ட படங்களில் குடும்பப் பாங்காக சேலை கட்டி நடித்து வந்த லட்சுமிமேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். கிளாமர் குறித்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:22 pm

ஜி. அசோக்

"கும்கி' உள்ளிட்ட படங்களில் குடும்பப் பாங்காக சேலை கட்டி நடித்து வந்த லட்சுமிமேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். கிளாமர் குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் ""எது எல்லையோ அதை மீற மாட்டேன்'' என்றார். ""ரசிகர்கள் என்னிடம் ஒரு போதும் கவர்ச்சியை எதிர்பார்க்க மாட்டார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார். இப்போது அந்த பதில்களுக்கு நேர் மாறான முடிவை எடுத்திருக்கிறார் லட்சுமிமேனன். தொடர்ந்து ஹோம்லி வேடங்களே அமைந்ததால் வெறுத்துப் போன அவருக்கு, ""குடும்ப பெண் முகம் போல் இருப்பதால்தான் அதே பாணியில் வேடங்கள் வருகின்றன. அதனால் உனது தோற்றத்தை மாற்றிக் கொள்'' என நெருங்கிய கோலிவுட் நண்பர்கள் அட்வைஸ் கொடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட லட்சுமிமேனன் தன் உடலமைப்பை கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். "பாண்டிய நாடு' படத்தை தொடர்ந்து விஷால் ஜோடியாக "நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடிக்கும் லட்சுமிமேனன் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதிலுள்ள வேடத்துக்கு கிளாமர் தேவைப்படுவதால் தனது தோற்றத்தைக் கவர்ச்சியாக மாற்றி வருகிறார். இதற்காகத் தினமும் ஐந்து மணி நேரம் வரை ஜிம்மில் செலவிடுகிறார். 

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களில் மக்களுக்குத் தேவைப்படும் போக்குவரத்து வசதியை வலியுறுத்தும்விதமாக உருவாகி வரும் படம் "ஆறு சக்கர குதிரை'. நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பதற்காக பர்மிட் இல்லாத பேருந்துகளை இயக்குவதால் ஏற்படும் விளைவுகளை சொல்வதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எஸ் அண்ட் எஸ் ட்ரீம் மேக்கர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜெய்சத்யா, அபினிதா, ராஜ்முரளி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். செந்தில்சுவாமிநாதன் கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ""பண்டிகை நாள்களில் சொந்த கிராமங்களுக்குச் செல்லும் பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் கூட்டமாக தவிக்கின்றனர். அவர்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தி சிலர் சட்டத்துக்கு புறம்பாக அரசின் அனுமதி பெறாத பேருந்துகளை இயக்குகின்றனர். அந்த பேருந்தில் ஏறிச் செல்லும் மக்கள் படும் பாட்டைத்தான் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறேன். ஒரு பேருந்தில் பயணிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கதாபாத்திர படைப்பு நிச்சயம் வரவேற்புக்குரியதாக இருக்கும்'' என்றார் இயக்குநர்.

"ராமன் அப்துல்லா', "சூரி', "ஆச்சார்யா' என மாறுபட்ட படங்களில் தன்னை வறுத்திக் கொண்டு நடித்தும் நடிகர் விக்னேஷூக்கு இன்னும் ஓர் இடம் இல்லை. தொடர் போராட்டங்கள்.... விடா முயற்சிகளின் வரிசையில் விக்னேஷின் அடுத்த படம் "புவனகாடு'. ""சந்தர்ப்பங்கள்தாம் நல்ல தருணங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நான் தவற விட்ட சந்தர்ப்பம், வெற்றி, தோல்வி இதுவெல்லாம் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்க முடியாது. சினிமாவுக்காக இழந்தது நிறைய. பெற்றது பற்றி பேச பெரிய விஷயங்கள் இல்லை. இப்போது கூட வேறு தொழிலில் வருவாய் ஈட்டி அதனை வைத்துதான் சினிமாவுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் குடும்ப உறுப்பினர்களின் வருத்தங்கள் நிறைய இருக்கிறது. இருந்தாலும் என் ஆர்வம், வேகம் எல்லாமும் அவர்களுக்கு என் நிலையைப் புரிய வைத்து விடுகிறது. ரீ எண்ட்ரிக்காக காத்திருந்தேன். ஒரு நல்ல கதை கிடைத்தது. இயக்குநரும் புதியவர். நல்ல கதையுடன் வந்தார். வாங்க செய்து பார்க்கலாம் என கைக் கொடுத்தேன். அடர்ந்த வனப்பகுதிகளில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கும் என் அயராத முயற்சிகளைத் தந்து உழைக்கிறேன். அடுத்து "பூனை புலியாகிறது' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்'' என்றார் விக்னேஷ்.

தமிழ் சினிமாவில் சிலருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக வந்த வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தார் தமன்னா. இந்நிலையில் "வீரம்' படத்தில் நடிக்க அஜித்தின் அழைப்பை ஏற்று மீண்டும் தமிழுக்கு வந்தார். தற்போது "வீரம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தனது அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்கு படம் தோல்வி அடைந்ததால் தமன்னா, தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனால் இருவருக்குமிடையே தெலுங்கில் கடும் போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பகுதியில்.... ""நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித்துடன் நடிப்பதில் மகிழ்ச்சி. நான் என் வேலையைச் சரியாக செய்து வருகிறேன். ஆனால் என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஸ்ருதியுடன் எந்த பிரச்னையும் இல்லை. என் வாய்ப்பை அவரோ, அவரது வாய்ப்பை நானோ தட்டிப் பறிக்க முடியாது'' என தெரிவித்திருக்கிறார் தமன்னா.

ஹாலிவுட் நடிகர் புருஸ்லீயின் ஆக்ஷன் பாணியில் தமிழில் உருவாகும் படம் "புதிய புருஸ்லீ'. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் நாயகன் மாமன் வீட்டில் ஏற்படும் நிலப் பிரச்னைகளை அடிதடி மற்றும் ஆக்ஷன் வித்தைகளால் தீர்த்து விட்டு கிராமத்துக்கு செல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புருஸ்லீயின் நடை, உடை, பாவனை, ஆக்ஷன், சண்டையிடும் திறன் உள்ளிட்ட அம்சங்களைப் பின்பற்றி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கூடு விட்டு கூடு பாயும் விதமாக புருஸ்லீயை போன்று முகம், உடலமைப்பு கொண்ட புருஸ் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். புருஸ்லீயின் தீவிர ரசிகரான இவர், சிறு வயது முதலே கராத்தே, குத்துச் சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை முறையாகக் கற்று தேர்ந்தவர். ரசியா, தென்னவன், ஹேமந்த், சக்திவேல் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்த சோணை இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். இறுதி சண்டை காட்சியில் பாலிவுட் வில்லன் நடிகர் ஹூடா நடித்துள்ளார். புருஸ்லீயின் படங்களில் உள்ள அம்சங்களையொட்டி உருவாகியுள்ள இப்படம் விரைவில் தமிழகமெங்கும் வெளிவருகிறது.

"ஒரு ஊர்ல' படத்துக்காக மு.மேத்தா - இளையராஜா கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பின் இணைகிறது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் "பருத்தி வீரன்' வெங்கடேஷ், நேகா பட்டீல் நடிக்கின்றனர். வசந்தகுமார் எழுதி, இயக்குகிறார். பாடல் மற்றும் பின்னணி இசைக்கு அதீத முக்கியத்துவம் தந்து உருவாகியுள்ள இப்படம் பற்றி இயக்குநர் வசந்தகுமார் கூறுகையில், ""பிள்ளையார் சுழி போட்டுதான் திரைக்கதை எழுத ஆரம்பிப்பார்கள். ஆனால் அதற்கு பதில் இளையராஜா என்ற பெயரை போட்டுதான் எழுத ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை தேவைப்பட்டது. இப்போது அது அப்படியே உண்மையாகியிருக்கிறது. இளையராஜாவை சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் சில திருத்தங்களைச் சொன்னார். ""இல்லை... இது உண்மைச் சம்பவம்...''  என்றேன். ""உண்மைச் சம்பவம் என்றால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?'' என்று கேட்டு விட்டு, ""இதற்கு நான் இசையமைக்க மறுத்து விட்டால் என்ன செய்வீங்க?'' என்றார். ""ரொம்ப சிம்பிள் சார்... இந்த கதை அப்படியே கதையாகவே இருக்கும். ஒரு போதும் படமாகாது'' என்றேன். மெலிதாகச் சிரித்து விட்டு இசையமைத்து தந்தார். இளையராஜாவுடன் நடந்த சந்திப்பை இப்படி பகிர்ந்து கொண்டார் இயக்குநர் வசந்தகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.