திரைக்கதிர்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, அதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டார்.


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, அதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டார். இந்த தகவல் மீடியாக்களில் வெளியானதால் சமந்தா வருத்தம் அடைந்தார். ""நடிகையாக இருந்தாலும் நானும் மனுஷிதானே'' என நெருங்கிய நண்பர்களிடம் வருத்தப்பட்டதாகத் தகவல். இந்நிலையில் சமந்தா கடந்த வாரம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்கினார். தெலுங்கு படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இம்மாத இறுதியில் சூர்யாவுடன் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தோல் அலர்ஜி குறித்து நலம் விசாரித்த நண்பர்களிடத்தில்... திட உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால்தான் இந்த மாதிரி அடிக்கடி அலர்ஜி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தாக கூறியுள்ளார் சமந்தா. உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள நடிகைகள் பலர் பழ ரசங்களை மட்டுமே உட்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிறிது சிறிதாக திட உணவுகளை எடுத்து கொள்ள சமந்தாவை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயில் பயணத்தின் சுவையான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகும் படம் "சிக்கிக்கு சிக்கிக்கிச்சு'. சென்னையிலிருந்து மாலையில் புறப்படும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஓர் இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிறது. என்.சி.ஆர்.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மிதுன், ஆதவன், மிருதுளா ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். அனூப் அரவிந்த், அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற என்.ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ""நாயகனின் பெயர் சிதம்பர கிருஷ்ணன். அதை சுருக்கி அவரது நண்பர்கள் சிக்கி என்று அழைப்பார்கள். அவருக்கு ஒரு காதலி சிக்குகிறாள். அதைக் குறிக்கும் வகையில்தான் "சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே இதுவரை ரயில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ரயிலில் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கவே சிரமமாக இருந்தது. எனவே குறிப்பிட்ட 5 நாள்களுக்கு மட்டுமே வாடகைக் கட்டணத்தில் ஷூட்டிங் நடத்த ரயில்வே துறை அனுமதி அளித்தது'' என்றார் இயக்குநர்.
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் (3 டி) வெளியாகும் படங்கள் சமீபமாக இந்தியாவில் அதிகரித்துள்ளன. மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் இப்படங்களுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த பென்டா மீடியா நிறுவனம் "கலிவர் அண்ட் த லில்லிபுட்ஸ்' படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் 3டி அனிமேஷன் படமாகத் தயாரித்திருக்கிறது. நடிகரை நடிக்க வைத்து அவரின் முகபாவனை, உடல் அசைவுகளை மட்டும் பதிவு செய்து அனிமேஷன் கேரக்டர்கள் மீது செலுத்தி அப்படியே படமாக்குவதுதான் மோஷன் கேப்சர். கப்பல் பயணிகளுக்கான மருத்துவராகப் பணியாற்றுகிறார் கலிவர். புயல் ஆபத்தில் சிக்கி கொண்ட அந்த கப்பல் லில்லிபுட்ஸ் என்ற அதிசய தீவில் சிக்கிக் கொள்கிறது. லில்லிபுட் மக்களுக்கும் பலேஃபெஸ்கோ தீவு மக்களுக்கும் அடிக்கடி போர் மூண்டு வந்தது. தங்களை அழிப்பதற்காக கலிவர் வந்திருப்பதாக லில்லிபுட் தீவு மன்னர் சந்தேகப்படுகிறார். கலிவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரின் நிலை என்ன? என்பதுதான் கிளைமாக்ஸ். இந்த மாத இறுதியில் இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகிறது.
புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தில் நடனம் ஆட நடிகைகளுக்கு கிராக்கி. சினிமா வாய்ப்பு குறைந்து விட்டதால் பல நடிகைகள் எந்த மொழிப் படமாக இருந்தாலும் குத்து பாடல் ஆடுவதற்கு தயாராகி விடுகின்றனர். ஒரு பாடலுக்கு வரும் வருமானத்தை விட, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடும் நடனத்துக்குத்தான் சம்பளம் அதிகம் என்பதால், அதற்கான வாய்ப்புகளை தேடும் படலத்தில் நடிகைகளின் மேனேஜர்கள் இறங்கியுள்ளனர். ஷார்மிக்கு கோலிவுட்டில் சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லை. இவர் ஹைதராபாத்தில் உள்ள கிளப்பில், புத்தாண்டு இரவு நடனம் ஆட சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.20 லட்சம் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடனம் ஆட கன்னட நடிகை சஞ்சனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சம்பளம் ரூ.15 லட்சம். பூனம் கபூரும் புத்தாண்டு இரவில் நடனம் ஆடுகிறார். ரூ. 15 லட்சத்தை சம்பளமாக கேட்டுள்ளார். இதே போல் முமைத்கான், ரகசியா, தீப்தி உள்ளிட்ட குத்து பாடல் நடிகைகளுக்கும் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றனவாம். முன்னணி நடிகைகள் அதிகமாகச் சம்பளம் கேட்பதால் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளுக்கே வாய்ப்புகள் குவிகிறது.
கவர்ச்சியான வேடங்களுக்கிடையே வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பதில் நடிகைகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் மாறுபட்ட வேடங்கள் கிடைத்தாலும் போலீஸ் வேடங்களில் மட்டுமே நடித்து தனித்துவம் பெற்றார் விஜயசாந்தி. தனக்கு முக்கியத்துவம் மிகுந்த படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தின் மூலம் அரசியல் உலகிலும் பிரவேசம் ஆனார். வாய்ப்புகள் இல்லாத கால கட்டங்களில் விஜயசாந்தியின் பாணியைப் பின்பற்றத் தொடங்கினார் சினேகா. "பவானி ஐ.பி.எஸ்.' படத்தில் போலீஸ் வேடம் ஏற்று நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும், அந்த சமயத்தில் சினேகா அரசியலுக்கு வருவார் என பரபரப்பானது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு பரபரப்பு சினிமா வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கினார். சமீபத்தில் வெளியான "தலைவா' படத்தில் அமலாபால் போலீஸ் வேடம் ஏற்று நடித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது ஹரிப்பிரியா. விக்ரமனின் உதவியாளர் நாகபூஷணம் இயக்கும் "3-ம் பார்வை' படத்தில் போலீஸ் வேடம் ஏற்கிறார். இதற்காக உடல் எடையைக் குறைக்கும் உடற்பயிற்சிகளில் ஹரிப்பிரியா ஈடுபட்டு வருகிறார்.
மும்பையில் தனது வீட்டில் தங்கியிருந்த ஸ்ருதிஹாசனை மர்ம நபர் ஒருவர் தாக்கினார். போலீஸில் தரப்பட்ட புகாரையடுத்து அந்த மர்மநபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்கு ஆளான ஸ்ருதிஹாசன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்ததுடன் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார். மும்பையை விட்டு வெளியேறிய அவர் சென்னைக்கும் திரும்பவில்லை. எங்கே சென்றார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். பெரோஸ் நதியாத்வாலா தயாரிக்கும் "வெல்கம் பேக்' ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள ஆடம்பர கப்பலில் நடக்கிறது. அதில் ஸ்ருதிஹாசன் பங்கேற்றார். ஸ்ருதியுடன் ஜான் ஆப்ரஹாம், நானா படேகர், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். துபாய் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அந்த கப்பலில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...