திரைக்கதிர்
ஆர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்தில் இரு திரைக்கதைகள் உருவாகியுள்ளன. "அழகுராஜா' படத்துக்குப் பின் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க


ஆர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்தில் இரு திரைக்கதைகள் உருவாகியுள்ளன. "அழகுராஜா' படத்துக்குப் பின் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ராஜேஷ். இதே போல் மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் ஆர்யா ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். கடற்புரத்தைச் சுற்றி நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்துக்கு, "மீகாமன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களிலும் ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்தார். அதைத் தொடர்ந்து "ராஜா ராணி' படத்திலும் இந்த ஜோடி இணைந்தது. இரண்டு படங்களும் ஹிட். "இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்தார். நயன்தாரா, அனுஷ்கா இருவருமே ஆர்யாவுடன் நெருக்கமான நட்பில் உள்ளனர். ஆர்யாவுடன் நயன்தாரா மற்றும் அனுஷ்காவை இணைத்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த பரபரப்பைச் சாதகமாக்கிக் கொண்டு இருவரில் ஒருவரை ஹீரோயினாக்க இரு படக்குழுக்களும் முயன்று வருகின்றன. இதற்காக இருவரிடமும் தனித்தனியாக கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி "மீகாமன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
மாணவர்களின் போராட்ட குணங்களை முன் வைக்கும் படமாக உருவாகி வருகிறது "முதல் மாணவன்'. கோபி காந்தி, ஐஸ்வர்யா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். புதுமுக இயக்குநர் காந்தி கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். ""இன்றைய மாணவர்கள்தான் நாளைய இந்தியாவின் தலைவர்கள் என்கிற உன்னதமான வாசகம், தற்போதைய இந்திய கல்விச் சூழலில் எப்படி இருக்கிறது என்பதை முதன்மையான விஷயமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த மாணவர்கள் எந்த விஷயங்களையும் அடைந்து விட பெரிய தடைக் கற்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எல்லாத் திறமைகளையும் கொண்ட கிராமப்புறத்து மாணவர்கள், வசதி வாய்ப்பின்மையால் குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி விடுகின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சித்திரிக்கும் படமாக உருவாகியுள்ளது. தரமான சினிமாவாக உருவாக வேண்டும் என்ற முனைப்புடன் நண்பர்கள் சிலர் இணைந்து இப்படத்தை சிறு பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறோம். சினிமா வாய்ப்புகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற பலருக்கு இதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது'' என்றார் காந்தி.
சரும நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, மணிரத்னம் இயக்கிய "கடல்', ஷங்கரின் "ஐ' படங்களில் இருந்து விலகினார். இதையடுத்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்த சமந்தா, தற்போது முழு வேகத்தில் படங்களில் ஒப்பந்தமாகி, நட்சத்திர நடிகர்களின் பட வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தமாகி விட்டார். இதன் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியது. இதில் சமந்தா பங்கேற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். அதிக வெளிச்சமும், வெப்பம் உமிழும் விளக்குகளுக்கு நடுவில் நின்று நடித்ததால், அவரது தோலில் அலர்ஜி உண்டானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலிருந்து சிகிச்சைக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு அவர் திரும்பி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் குணம் அடைய நீண்ட நாள்கள் ஆகும் நிலையில், படத்திலிருந்து அவர் நீக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இதே போல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படமும் விரைவில் தொடங்க இருக்கிறது.
ஷர்வா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் "என் ஓவியா'. ஜானி, சோனி, செரிஸ்டர் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். காதலைப் பிரதானமாக வைத்து உருவாகும் இப்படத்தின் மூலம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வகுமார். படம் குறித்து இயக்குநர்...""காதல்தான் எப்போதும் அலுக்காது. ஏதோ ஒரு தெரு முனையில் இன்னும் காத்திருத்தல்... கவிதை கிறுக்குதல்... என காதல் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல்... தொலைபேசியில் காதல் என காலத்துக்கு ஏற்றவாறு காதல் மாறினாலும், அதன் உன்னதம் இன்னும் மகத்தான விஷயமாகவே இருக்கிறது. இந்தத் திரைக்கதையில் காதல்தான் அதிகம். சந்தர்ப்பங்கள்தாம் நல்லது, கெட்டது என எல்லாவற்றையும் தீர்மானிக்
கின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உருவான காதல்... எந்த நிலைக்குச் சென்றது என்பதுதான் கதை. விரும்பிய பெண் இவள்தான் என்று தெரியாமல் உயிர் நண்பனுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் காதலனின் நிலைதான் படம். பழைய பாணி கதை என்றாலும், அதைச் சொல்லும் விதத்தில் இது வித்தியாசப்படும்'' என்றார் செல்வகுமார்.
அஞ்சலி நடித்த கதாபாத்திரங்களில் அவர் மீண்டும் நடிக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதால், அந்த பட வாய்ப்புகளைப் பிடிக்க நடிகைகளிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் மலையாளக் கரையோரம் திரும்பிய பல நடிகைகள் மீண்டும் கோலிவுட் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். கிளாமர் வேடங்களில் நடித்த அதே வேளையில் குடும்பப்பாங்கான வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தவர் அஞ்சலி. குறிப்பிட்ட சில படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்த அஞ்சலி, அந்தந்தப் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டாராம். இயக்குநர்களிடம் வாங்கிய முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இதனால் அந்த இடத்துக்கு நடிகைகளை இயக்குநர்கள் தேடி வருகின்றனர். புதுமுக இயக்குநர் பி.ஜி.சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் "கோலாகலம்' படத்துக்கு முதலில் அஞ்சலிதான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். ஆனால் குறிப்பிட்ட நாள்களில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால், அந்த வேடத்தை தற்போது சரண்யாமோகன் ஏற்று நடித்துள்ளார். அழுத்தமான காதல் கதையாக உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
90-களுக்கு முன்பு ஆண்டுக்கு 20 படங்களாவது பக்திப் படங்களாக வெளி வருவது வழக்கம். அதன் பின் வந்த கால கட்டங்களில் அப்படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவான "ஆடிவெள்ளி', "துர்கா' உள்ளிட்ட படங்கள் வசூலில் சாதனை புரிந்தன. 2000-க்கு முன்பு ரோஜா, மீனா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகைகள் பக்தியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்கத் தொடங்கினர். ஒரு சில படங்களோடு அது மாதிரியான படங்கள் உருவாகவில்லை. அந்த வரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பிடிக்கிறது "மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா'. ஒரு பெண்ணின் உருவத்துக்குள் நாக பாம்பு புகுந்து கொண்டு பழி வாங்கும் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. புதுமுகங்கள் மகி, சரவணன், ஜான்விகா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த திவ்யா நாகேஷ் நாகப் பெண்ணாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தேவா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சந்திர கண்ணையன் எழுதி, இயக்குகிறார். சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள ஸ்ரீகனக துர்கா ஆலயத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...