டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: உட்புற வறட்சி... வெளிப்புற வியர்வை!

என் வயது 41. அடிக்கடி தலைசுற்றல், தண்ணீர் தாகம், பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு போன்ற உபாதைகளால் அவதிப்படுகிறேன். இவை எதனால் ஏற்படுகின்றன? இந்த உபாதைகள் நீங்கி என் உடல் வலுப்பட ஆயுர்வேதம் உதவுமா?

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:23 am

எஸ். சுவாமிநாதன்

என் வயது 41. அடிக்கடி தலைசுற்றல், தண்ணீர் தாகம், பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு போன்ற உபாதைகளால் அவதிப்படுகிறேன். இவை எதனால் ஏற்படுகின்றன? இந்த உபாதைகள் நீங்கி என் உடல் வலுப்பட ஆயுர்வேதம் உதவுமா?

சங்கர், சாலிகிராமம்.

உடலின் உட்புறப் பகுதிகளில் வறட்சியும், வெளிப்புறத்தோல் பகுதியிலிருந்து அதிக வியர்வையும் ஏற்பட்டால் நெய்ப்பு என்னும் எண்ணைப் பசை உடலில் குறைந்துவிடும். வறட்சி மற்றும் வியர்வைப் பெருக்கு ஏற்படக் காரணமாக இருப்பது, உணவு மற்றும் செயல்களில் நெருப்பு - வாயு - ஆகாயம் போன்ற மகாபூதங்களின் சேர்க்கைதான். இவற்றின் வரத்து அதிக அளவில் உள்ள நிலையில் நிலம் மற்றும் நீரின் அம்சம் குறையும்போது, உடல் வேகமாக இளைக்கத் தொடங்கி, நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும் தோன்றக் கூடும். உட்புற வறட்சி, வெளிப்புற வியர்வை யாருக்கு அதிகரிக்கக் கூடும் என்று ஒரு பட்டியலை ஆயுர்வேதம் தயாரித்திருக்கிறது. நோய்களின் தாக்குதலால் உடல் மெலிந்தவர், மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தமுள்ளவர், மதுபானம் செய்பவர், மனதில் மகிழ்ச்சி இல்லாமல் சோகமாகவே இருப்பவர், கனமான சாமான்களைத் தூக்குவதால் சோர்வடைந்தவர், அதிக தூரம் நடந்து செல்பவர், இருமலால் மார்புக் கூடு பலவீனமடைந்தவர், இயற்கையாகவே உடல் வறட்சியாயிருப்பவர் போன்றவர்களுக்கு, நீங்கள் கூறும் உபாதைகள் நன்றாகத் தென்படும்.

ஆக, நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் மகாபூதங்களைக் குறைத்து, நிலம் மற்றும் நீரின் அளவு உங்களுக்குக் கூடினால் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. மாமிச சூப்பு, பால், சர்க்கரை, நெய், நல்ல உறக்கம், படுக்கையில் சுகமாகப் படுத்திருத்தல், மூலிகை எண்ணைய்த் தேய்ப்பு, குளியல், திருப்தி மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் தொடர் உபயோகத்தினால் உங்களுடைய உபாதைகள் பல குறைந்து விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இவை அனைத்தும் நிலம் - நீரின் அளவை உடலில் அதிகரிக்கச் செய்து, நெருப்பு - வாயு - ஆகாயம் ஆகியவற்றைக் குறைத்துவிடுபவை.

மேற்குறிப்பிட்டவை உடலுக்குச் செய்யும் நன்மைகள் - உடல் வலு கூடும், உடல் போஷணை பெறும். மேற்குறிப்பிட்ட உணவு மற்றும் சிசிச்சை முறைகளை, உங்கள் உடல் உபாதைகள் குணமாகும் வரைதான் செய்ய வேண்டும். அவற்றின் மீது விருப்பம் ஏற்பட்டு, அவற்றையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், உடல் பருமன், சர்க்கரை உபாதை, காய்ச்சல், வயிற்றில் நீர் சேர்தல், பெüத்திரம், இருமல், மூச்ச்சை, சிறுநீர்த்தடை, மப்பு நிலை மற்றும் தோல் உபாதைகள் ஏற்படக் கூடும்.

எளிதில் செரிக்கக் கூடியதும், உடல் போஷணைக்கு உதவக் கூடியதுமான உணவே உங்களுக்குச் சிறந்தது. காலையில் புழுங்கலரிசிக் கஞ்சியுடன், நெய்யும் உப்பும் கலந்து வெதுவெதுப்பாகச் சாப்பிட்டால், உடல் புஷ்டிக்கு ஏற்றதாக இருக்கும். உப்பைத் தவிர்த்து இந்தக் கஞ்சியுடன் நெய்யும் சர்க்கரையும், பாலும் கலந்து வெதுவெதுப்பாகக் காலையில் குடித்தால் அது உடல் ஊட்டத்துக்கும் சுறுசுறுப்புக்கும் ஏற்றதான உணவாகும். மாமிச சூப்பும் கலந்து பருகலாம். மதியம் நல்ல திடமான இனிப்பும் நெய்ப்பும் தரக்கூடிய ஜவ்வரிசி பாயசமும், பருப்பு சாதமும், மோர்க்குழம்பும், தயிர்சாதமும் சாப்பிட உகந்தவை. மாலையில் சிறிது கோதுமை அல்வாவும், இரவில் பால்சாதம், சர்க்கரை கலந்து சாப்பிடவும் ஏற்றவை.

ப்ருகச்சாகலாதி கிருதம், விதார்யாதி கிருதம், அஸ்வகந்தாதி லேகியம், சியவனப்பிராசம் லேகியம், கூஷ்மாண்ட ரசாயனம், ப்ராம்ஹ ரசாயனம், குமார்யாஸவம், மிருத சஞ்ஜீவனீ போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் அறிவுரைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் உபாதைகள் அனைத்தும் குணமாகிவிடும்,. ஆனால் இதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இம்மருந்துகளின் சுவையில் நீங்கள் மயங்கித் தொடர்ந்து சாப்பிடாமல், உபாதைகள் குணமானதும் நிறுத்திவிடுவது மிகவும் நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.