தரையில் அதிக நேரம் கூன் போட்டு அமர்ந்து கொண்டு கறிகாய் நறுக்குவது, எழுதுவது, கைகளைத் தரையில் ஊன்றி எழாமல் அப்படியே தரையிலிருந்து எழுந்து கொள்ளுதல், சில்லிட்ட தரையில் கீழ் இடுப்புப் பகுதி படும்படி படுத்துறங்குதல், வயிற்றில் வாயும் சேரும் உணவுப் பண்டங்களாகிய உருளைக் கிழங்கு பொடிமாஸ், பருப்பு சாம்பார், வாழைக்காய்ப் பொரியல், வறுத்த வேர்க்கடலை சட்னி, காராமணி, மொச்சைக் கொட்டை, சூடு ஆறிப்போன கொண்டைக் கடலை, பச்சைப் பயறு சுண்டல் போன்றவற்றைச் சாப்பிட்டு மேலே குளிர்ந்த நீரைக் குடித்தல், வாரந்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், சிறுநீர், மலம் ஆகிய இயற்கை உந்துதல்களை உடனடியாக வெளியேற்றாமல் காலம் கடத்துதல், குளிப்பதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்துதல், உணவில் அதிகமான காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை சேர்த்துக் கொள்ளுதல், இடுப்பை வளைத்துத் தண்ணீர்க் குடத்தைத் தூக்குதல் போன்ற சில காரணங்களால், இந்த அபான வாயுவானது சீற்றங்கொண்டு இடுப்பின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள தண்டுவட நரம்புகள் பாதிப்படையும் வகையில் செயல்பட்டுவிட்டால், இடுப்பின் கீழுள்ள நரம்புகளைச் சுண்டி இழுக்கச் செய்யும். இரவில் ஓய்வெடுத்து உறங்கும் வேளையில், இந்த வாயுவின் சீற்றம் நரம்புகளைத் தாக்கும்போது, வலி உயிர் போகும். கால் விரல்களைத் தன்னிச்சையாக சுருண்டுவிடச் செய்யும் அளவுக்கு இந்த வாயுவானது, அபார சக்தியைக் கொண்டதாக இருக்கிறது.