கருவைக் கலைப்பதற்காக எடுக்கும் முயற்சியால், அங்க சிதைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு அப்படி ஏதும் நிகழவில்லை என்றாலும், நீங்கள் குறிப்பிடும் பல உபாதைகள், கருக்கலைப்புக்கான வீர்யமிக்க மருந்துகளால் ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மாதவிலக்கு என்பது பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்பட வேண்டியது அவசியம். அதை வலுக்கட்டாயமாக ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வரவழைத்தால், பலவிதமான பக்கவிளைகள் ஏற்படலாம். ஹார்மோன் சுரப்பிகளை இயற்கையாகத் தூண்டிவிடும் எளிய பயிற்சிமுறை - இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம் பொரித்து, உச்சந்தலையில் காலையில் அரை - முக்கால் மணி நேரம் ஊறவிடுவதே. அடிவயிற்றில் வெதுவெதுப்பாக விளக்கெண்ணெய் தேய்த்து ஊறி, வெந்நீரில் குளிப்பது, அன்றைய தினம் சூடான சாதம், மிளகு ரசம், சோம்பு, மிளகு, தேங்காய் அரைத்துவிட்ட புடலங்காய்க் கூட்டு, கறிவேப்பிலைத் துவையல், மோர் என்ற வகையில் சாப்பிடுவது நல்லது. மூளையிலிருந்து சுரக்கும் ஆக்ஸிடாசின், கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யும் தன்மையுடையது. மேற்படி தைலமுறையால் நன்றாகச் சுரக்கும். விளக்கெண்ணெய் தேய்ப்பு முறையால், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்ட்ரோன் சுரப்பிகள் செயல்பாடு மேம்படும்.