கசப்பான பிரண்டைத் துண்டு, நல்ல ஒரு மலமிளக்கியாகும். உளுந்துடன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், ஆண்களுக்கு சம்போக சக்தி வளரும். கண்புரை நோய் மாற, பிரண்டையைத் துவையலாக்கிச் சாப்பிடலாம். உடல் வலுவின்மை, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, மூட்டுகளில் ஏற்படும் வலி, பால்வினை நோய் போன்றவற்றுக்குப் பிரண்டையை உள்ளுக்கு உணவாகச் சாப்பிட்டுப் பயன் பெறலாம். நெய்யில் பிரண்டையை வதக்கி, கோலரக்கு, கோதுமை மாவு, மருதம் பட்டை பொடி சேர்த்துப் பாலுடன் கலந்து பருக, முட்டியில் ஏற்படும் வலி குறையும். எலும்பு முறிவு விரைவில் கூடிவிடும் என்று சக்ரதத்தர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். பிரண்டையை இடித்துப் பிழிந்த சாறுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து, பிரண்டையின் தண்டை அரைத்து கல்கமாகச் சேர்த்து எடுத்து இளந்தீயில் காய்ச்சி, மாதவிடாய் முடிந்த மறுநாள் முதல் பெண்கள் சாப்பிட, குழந்தைப் பேறு உண்டாகும் என்று வைத்ய மனோரமாவில் குறிப்பு காணப்படுகிறது.