"நாடீஸ்வேதம்' என்று ஒரு சிகிச்சைமுறை இருக்கிறது. ஆமணக்கு, சித்தாமுட்டி, கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கன், நொச்சி, எருக்கு போன்றவற்றின் இலைகளை தண்ணீரில் போட்டு பிரஷர் குக்கரில் வேக வைத்து, குக்கரின் மூடியின் மேலுள்ள குழாயில் ஒரு ரப்பர் டியூபை மாட்டி அதன் மூலம் வெளிப்படும் நீராவியை உங்களுடைய முதுகுத் தண்டுவடப் பகுதியை கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இளஞ்சூடாகப் பூசிய பிறகு, காட்டுவதின் மூலம் வாயு தடை நீங்கப் பெற்று, சுதந்திரம் அடைந்து விடுவதால், வலி குறைந்து குணமாக வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாற்று சிகிச்சையாக ஆற்று மணலை மூட்டை கட்டி சூடாக்கி, ஒத்தடம் கொடுப்பதையும் செய்யலாம். வாயுவுக்கு ஏற்படும் இந்த விடுதலையுடன் பிரச்னை ஓய்ந்துவிட்டதாக நாம் கருத முடியாது. அதன் பாதைக்குத் தடை ஏற்படுத்திய தோஷ -தாது - மலங்கள், மறுபடியும் காரணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதால், அதற்கு வழி ஏற்படாத வகையில் நீங்கள் உணவை வெதுவெதுப்பாகச் சாப்பிடுவதும், சூடான வீர்யம் கொண்ட பூண்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம் போன்றவற்றின் துணை கொண்டு தயாரிக்கப்பட்ட ரஸம் - கூட்டு போன்றவை உணவாக ஏற்கப்பட வேண்டும். உடலுக்கு எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இருமாதங்களுக்கு ஒருமுறை 15 மி.லி. சுத்தமான விளக்கெண்ணெயைச் சூடான பாலுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுக் குடல் வாயுவை நீக்கிக் கொள்ளவும், பேதி மூலமாக. சீரகம், ஓமம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரையே பருகவும். அஷ்ட வர்க்கம் எனும் ஆயுர்வேத கஷாய மருந்தை 15 மி.லி. எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடவும். ஒரு யோகராஜ குக்குலு எனும் மாத்திரையைக் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும்.