குடலில் வாயுவின் அழுத்தமும், பழைய மலத்தின் தேக்கமுமிருந்தால் எந்தச் சிகிச்சை முறையும் உங்களுக்கு நிவாரணத்தைத் தர இயலாது. அதனால் நீங்கள் உணவில் கிழங்கு, மாவுப் பண்டங்கள், முற்றிய வாழைக்காய், அவரைக் காய், கொத்தவரங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் முதலிய காய்கறிகள், பருப்பு, மசாலாப் பொருட்கள் அதிகம் சேரும் உணவு வகைகளைத் தவிர்க்கவும். மிளகு, மிளகாய், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் முதலியவை மிதமாகச் சேர்க்கலாம். அதிக அளவில் கூடாது. முளைக்கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை , கோவைக்காய், வல்லாரை, தூதுவளை, மிதிபாகல் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, வெண்டைக்காய் போன்றவை சாப்பிட நல்லது. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை நல்லது. பால், நெய் , தயிர், வெண்ணெய், வாழைப் பழம், மாம்பழம், இனிப்பு மாதுளம் பழம், திராட்சைப் பழம், அரிசி, கோதுமை, உளுந்து போன்றவை சாப்பிடலாம்.