எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: நேர்கோட்டில் அமையாத கனவுகள்!

நான் இது மாதிரியாக வேண்டும் என்ற என் கற்பனைகள் அனைத்தும் கால ஓட்டத்தில் நிறைவேறாமல் போய் விட்டன. ஆனால் என் பிள்ளைகளை எப்படியும் நான் நினைத்தது மாதிரி மாற்றிக் காட்டுவேன் என ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:31 pm

ஜி. அசோக்

நான் இது மாதிரியாக வேண்டும் என்ற என் கற்பனைகள் அனைத்தும் கால ஓட்டத்தில் நிறைவேறாமல் போய் விட்டன. ஆனால் என் பிள்ளைகளை எப்படியும் நான் நினைத்தது மாதிரி மாற்றிக் காட்டுவேன் என ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். ஆனால் வாரிசுகளோ வேறோரு மன ஓட்டத்தில் இருக்கிறார்கள். இந்த வேறுபட்ட கருத்துகள்தான் இரு தரப்புக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துகிறது.

இதுதான் "ஒரு முத்தம் ஒரு யுத்தம்' படத்தின் கரு என்கிறார் இயக்குநர் செல்வம். பரவலான பாராட்டுக்களைப் பெற்ற ராமேஸ்வரம் படத்தை இயக்கியவர். ""தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பெற்றோரின் கனவுகளும், இளைஞர்களின் கனவுகளும் ஒரே நேர் கோட்டில் அமையாத போது என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறேன். உறவுகளின் புனிதம் கெட்டுப் போகாமல், காதலியின் துணையுடன் தான் நினைத்ததை சாதித்தானா? என்பதுதான் மீதிக் கதை. உதய்கிரண் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஸ்வேதாபாசு நடிக்கிறார். ஆஷிஷ் வித்யார்த்தி, நளினி, ஆர்த்தி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னை, விசாகப்பட்டினம், பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார் இயக்குநர் செல்வம்.

தமிழ் டு வங்காளம்

"கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீனாட்சி. எதார்த்தமான நடிப்பால் அப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அதன் பின் தொடர்ந்து கிளாமர் வேடங்களுக்கு முக்கியத்துவம் தந்தார். "ராஜாதிராஜா' உள்ளிட்ட ஓரிரு படங்கள் அவருக்கு கிளாமர் முத்திரை குத்தின. தொடர்ந்து அது மாதிரியான வாய்ப்புகள் குவியவே, நிறைய படங்களை மறுத்தார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன.

இறுதியாக "மந்திரப்புன்னகை' படத்தில் நடித்தார். அதன் பின்னும் வாய்ப்புகள் இல்லை. அதைத் தொடர்ந்து வங்க மொழி சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவருக்கு அங்கேயும் இப்போது வாய்ப்பில்லையாம்.

இதனால் பிரபலமான இயக்குநர் ஒருவரிடம் இணை இயக்குநராக சேர்ந்திருக்கிறார் என்பதுதான் புது செய்தி. அப்படியே சின்ன சின்ன வேடங்களிலும் மறுக்காமல் நடித்து வருகிறாராம். நல்ல திறமை இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கிளாமர், எதார்த்தம் என நடித்தும் சிறப்பான வரவேற்பு இல்லை. தற்போது சினிமா இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்.

இன்னும் சில படங்களில் வேலை பார்த்து முடிந்ததும் சினிமா இயக்கும் முடிவில் அவர் இருக்கிறார் என்கிறது மீனாட்சியின் நெருங்கிய வட்டாரங்கள்.



என்கவுன்டர் கிளைமாக்ஸ்

"எதிரி எண் 3' படத்துக்காக ஸ்ரீகாந்துடன் ஜோடி சேருகிறார் பூனம் பஜ்வா. "கச்சேரி ஆரம்பம்', "துரோகி' படங்களுக்குப் பின் இப்படத்தில் நடிக்கிறார் பூனம்பஜ்வா. படம் குறித்து இயக்குநர் ராம்குமாரிடம் பேசிய போது, ""அன்றாடம் பத்திரிகைகளில் நாம் படிக்கும் செய்திகள் பற்றி நண்பர்களுடன் நான் விவாதிப்பது உண்டு.

அது வெறும் விவாதத்துடன் மட்டுமே நின்று விடும். மறுநாள் மற்றொரு செய்தி ஆக்கிரமித்து விடும். சாப்ட்வேர் இன்ஜீனியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் இளைஞன் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான் என்பதுதான் படத்தின் கரு.

தமிழகத்தில் நடந்த பிரபல 5 என்கவுன்டர்களை மையமாக வைத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் மீதான என்கவுன்டரை மையமாக வைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் உருவாக்கப்படும். பத்திரிகை நிருபராக பூனம்பஜ்வா நடிக்கிறார்.

இதற்காக பிரத்யேக பயிற்சிகள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. சம்பத், ஜெயப்பிரகாஷ், உமாபத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். ரிச்சட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது என்றார் இயக்குநர் ராம்குமார்.

சிம்புவின் சினிமா ஆசை!

"தபாங்' பட தமிழ் ரீமேக்கிற்கு "ஒஸ்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிம்பு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கிறார். சிம்புவின் தம்பியாக "ஜித்தன்' ரமேஷ் நடிக்கிறார். ரேவதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். தரணி இயக்குகிறார். படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு பேசுகையில், ""முதன் முறையாகப் போலீஸ் வேடம் ஏற்கிறேன்.

இந்த மாதிரியான ஒரு வேடத்தில் நடிப்பது சவாலானது. சல்மான்கான் நடிப்பில் முதன் முறையாக படம் பார்த்த போதே இதைத் தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. தரணியிடம் பேசினேன். அவரும் ஆர்வமாகி விட்டார். இப்போது திரைக்கதை உருவாக்கம் முடிந்து விட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் மாறுபட்ட சிம்புவைப் பார்த்தோம்.

இப்போது மீண்டும் ஆக்ஷன் பக்கத்துக்குத் திரும்பியிருக்கிறேன் என்கிறார்கள். எல்லாவிதமான சினிமாவையும் செய்து பார்க்க ஆசை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பின் "வானம்' கதையை தேர்வு செய்தேன். நன்றாகவே வந்தது. இதுவும் அதுபோலவே வரும். நயன்தாரா திருமணம் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். அஜித் ரசிகர் மன்ற கலைப்பு குறித்து அவரிடம் பேச உள்ளேன். விரைவில் சந்தித்து நிலைமையை ஆராய்வேன்'' என்றார்.

தெய்வத்துக்கு இணையான உயிர்கள்!

பழம் பெரும் நடிகர் ரங்காராவின் பேரன் பாலாஜி "உயிரே உலகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் குறித்தும், பாலாஜியின் அறிமுகம் குறித்தும் படத்தின் இயக்குநர் பொன்னுரங்கா கூறியது, ""ஒவ்வொரு உயிரும் புனிதமானது. அனைத்து உயிர்களும் தெய்வத்துக்குச் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இயற்கையோ, கடவுளோ உயிரைப் படைத்தது எதுவாக இருந்தாலும், அது உயிரை எடுக்கும் வரை தற்கொலை கூடாது. அவ்வாறு நிகழும் தற்கொலைகளுக்குப் பின் இந்த சமுதாயமும், சம்பந்தப்பட்ட குடும்பமும் எந்த மாதிரியான சிரமங்களை எதிர்க்கொள்கிறது என்பதுதான் கதை. படத்துக்குப் புதுமுக நாயகன் வேண்டும் என்பதால் கடந்த இரண்டு மாதங்களாகப் பலரைத் தேர்வு செய்து பார்த்தேன்.

இறுதியில் பாலாஜியின் போட்டோ கிடைத்தது. விசாரித்தால் நடிகர் ரங்காராவின் பேரன் என்பது தெரியவந்தது. உடனே தேர்வு செய்து விட்டேன். ஆந்திரத்தில் கல்லூரியில் பி.இ. படித்தவர். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்தார். பேசியதும், உடனே ஆர்வமாகி சென்னை வந்து விட்டார்.

இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. புதுமுக நாயகியைத் தேர்வு செய்து வருகிறேன். நிழல்கள் ரவி, ஊர்வசி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கடலூர், அம்பாசமுத்திரம், மைசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றார் இயக்குநர் பொன்னுரங்கா.

வெளியுலகுக்குத் தெரியாத திறமை!

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் "விளையாட வா'. படம் குறித்து இயக்குநர் விஜயநந்தா கூறியது, ""சென்னையில் புதுப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் சாலையோரங்களில் கேரம் போர்டு விளையாடி கொண்டிருப்பார்கள். மிக அபாரத் திறமைகள் அவர்களுக்குள் இருக்கும். ஆனால் ஐம்பதுக்கும், நூறுக்கும் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். ஒரு காலக் கட்டத்தில் அந்த விளையாட்டையே மறந்து விடுவார்கள்.

அவ்வாறான இளைஞர்களைக் கண்டெடுத்து ஊக்குவிக்க யாரும் இல்லை. நிறைய இளைஞர்களின் திறமை வெளி உலகுக்குத் தெரியாமலேயே மறைந்து விடுகிறது. அப்படியான ஓர் இளைஞன் தடைகளைத் தாண்டி, பெரிய இடத்துக்குச் சென்றால் எப்படியிருக்கும். அதுதான் கதை. அதில் கொஞ்சம் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து ஜனரஞ்சகமான வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பங்கு பெற்ற விஸ்வநாதன் பாலாஜி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக "அய்யன்' படத்தில் நடித்த திவ்யபத்மினி நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.