நீங்கள் அரிசி, உளுந்தம் பருப்பு, எள்ளு இந்த மூன்றையும் 4-2-1 என்ற அளவில் சேர்த்து, லேசாக வறுத்துப் பெருந்தூளாக்கிக் கொள்ளவும். இதனைக் கஞ்சியாக்கி வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நடு இரவில் ஏற்படும் உடல் உட்புறச் சூட்டைத் தணிக்கும் உணவாகவும் மருந்தாகவும் இது பயன்தரும். தாகத்தைத் தணிக்க ஆறிய வென்னீர், இளநீர், பதனீர் போன்றவற்றைச் சாப்பிடலாம். குடல் உட்புற வேக்காளத்தைக் குறைக்க மொந்தன் அல்லது பேயன் வாழைப்பழம், பனம் நுங்கு, காய்ந்த திராட்சை, பேரீச்சை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்த்த பழச்சாறு, குளுக்கோஸ் தண்ணீர், சர்க்கரை கரைத்த தண்ணீர், தேங்காய்ப் பால், சர்க்கரை கரைத்த மோர், நெய்யில் வதக்கிய காய்ந்த திராட்சை போன்றவற்றில் எவை உங்களுக்கு ஒத்துக் கொள்ளுமோ அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.