அமைப்பு வகைப் பிரிவுகள்
தமிழில் மிக நெடிய சொற்றொடர்கள் அமைத்துப் பேசுவோர், எழுதுவோர் உள்ளனர். இறையனார் களவியல் (அகப்பொருள்) உரை என்னும் நூலில் ஒரு பக்கம், இரண்டு பக்கம் அளவுக்கு ஒரு சொற்றொடர் நீண்டு செல்லும். குறிஞ்சி நில வருணனை உரையை ஓரிரு மணித்துளியளவுக்கு அடுக்கிப் பேசும் பேச்சாளர்கள் உள்ளனர். இவற்றுள் வாக்கியம் முடிவு இன்றித் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். ஒரு குறிப்பிட்ட இயக்கத்தவர்தம் மேடைப் பேச்சு சொற்றொடர் முடிவு இன்றிப் போய்க் கொண்டே இருக்கும். எங்கே முடிப்பார்? எப்படி முடிப்பார் என்று எவருக்கும் தெரியாது. இந்தப் போக்கு அவ்வளவாக இப்போது இல்லை. மாற்றிக் கொண்டனர் தம் பேச்சை.
இங்கு நாம் எழுத நினைப்பது மேற்கண்ட செய்தி பற்றியன்று. ஆங்கிலத்தில் வாக்கிய வகைகள் இருப்பதுபோல் தமிழில் அமைப்பு முறையில் வாக்கிய வகைகள் உள்ளனவா என்பது பற்றியே சிந்திக்கலானோம். கீழ்வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
1. கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதினார்.
2. திருவள்ளுவர் திருக்குறளையும், சேக்கிழார் பெரியபுராணத்தையும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் இயற்றினார்கள்.
முதல் வாக்கியத்தில் கம்பர் எனும் எழுவாய் எழுதினார் என்னும் பயனிலை கொண்டு முடிந்தது (ஓர் எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தது).
இரண்டாம் வாக்கியத்தில் பல எழுவாய்கள் ஒரே பயனிலை கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம் (ஆங்கிலத்தில் simple sentence) இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்.
1. பொருளீட்டல் மட்டுமே வாழ்வின் குறிக்கோளன்று; அறநெறி பிறழாமையும் வேண்டும்.
2. வாழ்க்கை என்றால் நன்மைகளும் உண்டு; அதேபோல் தீமைகளும் வருவதுண்டு.
3. அவன் வேலையை ஒழுங்காகப் பார்ப்பதில்லை; அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.
4. காலையில் கதிரொளி எங்கும் பரவிற்று; கவ்வியிருந்த பனிப்படலம் நீங்கிற்று.
5. உண்ணும் உணவு அளவாக இருத்தல் வேண்டும்; உடம்புக்கு ஒவ்வும் வகையில் இருத்தல் வேண்டும்; ஊட்டமும் சத்தும் உடையதாக இருத்தல் வேண்டும்.
இப்படிப் பற்பல காட்டுகளை எழுதிக்கொண்டே போகலாம். இவை தொடர் வாக்கியம் எனும் வகையின் பாற்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவை ஏதோ ஒரு வகையில் இணைக்கப் பெற்றுத் தொடர்வது இது. ஆகையால், ஏனெனில், அதனால், எனினும், இருப்பினும் போன்ற சொற்களால் இவை இணைக்கப்படலாம். தனித்தனியே பல வாக்கியமாயினும் கருத்துத் தொடர்பால் ஒரு வாக்கியமாதலே தொடர் வாக்கியம் எனப்படுவது (ஆங்கிலத்தில் compound sentence). ஒரே எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது இவ்வகை என்றும் குறிப்பிடலாம்.
இனி வேறு ஓரிரு எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
1. மொழிப்பற்று மட்டும் இருந்தால் போதாது என்றும் மொழியைத் திருத்தமாய்ப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் அறிஞர் கூறுவர்.
2. திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைக் காணவில்லை என்றதும் தாயானவள் பதறித் துடித்தாள்; அலறினாள்; காவலரிடம் முறையீடு செய்ய ஓடினாள்.
இவ்விரு வாக்கியங்களும் தொடர் வாக்கியங்கள் போலவே கருத்தால் தொடர்ந்து செல்கின்றன. ஆனால் ஒரு செய்தி முதன்மையாகவும் மற்றவை அதைச் சார்ந்தும் வருவதைப் பார்க்கிறோம். அறிஞர் கூறுவர் என்பது முதன்மையானது. போதாது, பயிற்சி பெற்றிருப்பது என்பவை சார்ந்து வருபவை.
தாய் முறையீடு செய்ய ஓடினாள் என்பது முதன்மை வாக்கியம், திருவிழாவில் காணாமற் போனதும், அலறித் துடித்ததும் சார்புநிலை வாக்கியங்கள். எல்லாம் இணைந்து ஒரே வாக்கியம் ஆகியுள்ளமை காண்க. இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளையும் கலவை வாக்கியம் (ஆங்கிலத்தில் complex sentence) எனச் சொல்லலாம்.
சுருக்கமாகச் சொன்னால் ஓர் எழுவாய் அல்லது ஓரிரு எழுவாய் ஒரே பயனிலை கொண்டு முடிவது தனிநிலை வாக்கியம். ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர் வாக்கியம். பல எழுவாய்கள் பல பயனிலைகள் கொண்டு முடிவது கலவை வாக்கியம்.
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. மிளகாயும் புகையிலையும் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 45
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நாட்டார் கதையின் மையம்
சின்னதாய் ஓர் அரண்மனை
தமிழை உலக அரங்கில் முன்வைக்கும் முயற்சி

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்! கவிஞர் ஜெயபாஸ்கரன்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

