நுட்பச் செய்திகள்
சபா, சபை என்று வடசொற்களால் குறித்தவற்றை இந்நாளில் நாம் மன்றம், அரங்கம் என்று சொல்லிவருகிறோம். மன்றம் என்பது ஓர் அமைப்பையும், அரங்கம் என்பது விழா நடைபெறும் கூடத்தையும் பொதுவாகக் குறிக்கும். மாமன்றம், பெருமன்றம், பேரவை, முற்றம் என்னும் சொற்களும் நல்ல தமிழில் இன்று வழக்கத்தில் உள்ளன.
பழைய நாள்களில் மரத்தடியையும், தொழுவத்தையும்கூட மன்றம் என்றனர். அப்போதெல்லாம் மரத்தின் அடியில் (நிழலில்) பலர் கூடிப் பேசியிருந்தமையால் - பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்து - நாட்டாண்மையெல்லாம் - மரத்தடியில் நிகழ்ந்தமையால் மன்றம் எனும் சொல்லின் பொருள் பொருத்தமடைகிறது. ஆனால் தொழுவம் என்பது மாடுகளைக் கட்டும் இடம். மாட்டுத் தொழுவம் என்ற பொருள் இந்நாளின் மன்றத்தோடு பொருந்தவில்லை.
அரங்கம் என்பது சிலம்ப விளையாட்டு நிகழும் இடத்தைக் குறித்தது. சிலம்ப விளையாட்டைத் திறந்த வெளியிலோ ஒரு பெரிய கூடத்திலோ இன்றும் நிகழ்த்தக் காண்கிறோம். அரங்கம், பெரிய கூடத்தை உணர்த்தும் சொல்லாகப் பொருந்துகிறது. ஆனால் அதற்குச் சுடுகாடு என்ற பொருளும் உண்டு என்று அறியும்போது நமக்கு அச்சம் ஏற்படுமன்றோ?
ஆகியோர், முதலியோர் எனும் இரண்டு சொற்களை இடவேறுபாடு கருதாமல் பொருத்தம் இல்லாமல் இந்நாளில் பலர் எழுதி வருகிறார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடியவர் ஆவர். ஆகிய என்ற சொல்லை வரையறுத்த, எண் முற்றிலும் குறிக்கப்படும் இடங்களில்தான் பயன்படுத்த வேண்டும். கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்ட நாயனார், அப்பூதியடிகளார் முதலிய நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது.
கண்ணப்பர், சிறுத்தொண்டர், அப்பூதியோடு முடியவில்லை. இன்னும் பலர் (அறுபத்து மூவர்) இருப்பதால் முதலிய எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துதல் பிழை. ஆகிய, ஆகியோர் என்று சொல்லும்போது அத்தொகுப்பில் உள்ளவர் அனைவர் பெயரும் இடம் பெற வேண்டும். ஒரு தொகுப்பில் உள்ள சிலவற்றைச் சொல்லி, பிற சொல்லாமல் விடும்போது முதலிய (முதலாகவுடைய) என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத் தொகை எனப்படும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை முதலிய பத்து நூல்கள் பத்துப்பாட்டு எனப்படும். எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் சொல்லப்பட்டனவாதலின் ஆகிய எனும் சொல் பயன்பட்டது. பத்துப்பாட்டில் இரண்டு மட்டுமே குறித்ததால் முதலிய எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் தீப ஒளித் திருநாள் என்ற சொல்லாட்சி கண்டு, கேட்டு வருகிறோம். தீபாவளி எனும் சொல் பிழையான சொல்லா?
தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்பது இதன் பொருள். வடபுலத்தில் தீபங்களை (விளக்குகளை) வரிசையாக நிரம்ப ஏற்றி வழிபடும் பழக்கத்தால் வந்த சொல் இது. நாமும்கூட, திருக்கார்த்திகை நாளில் தீபங்களை நிரம்ப ஏற்றுகிறோம் அல்லவா? தீப ஒளியென்பதற்கு 'விளக்கின் வெளிச்சம்' என்பது பொருள். விளக்கில் வெளிச்சம் வருவது இயல்புதானே? இதில் என்ன சிறப்பு இருக்கிறது?
உண்மையில் பட்டாசுகளின் இரைச்சலும் வெளிச்சமும்தான் காணுகின்றோம். ஆதலின் தீபாவளியைத் தீப ஒளி ஆக்குதல் வேண்டுமா?
செருக்கு, தருக்கு என இரு சொற்கள் ஒன்றுபோல் இருப்பவை. ஆனால் நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு. ஒருவர்க்குத் தாம் கற்ற கல்வியால் செருக்கு இருக்கலாம். இருக்க வேண்டும். ஞானச் செருக்கு என்பான் பாரதி. ஆனால் நிரம்பக் கற்றுவிட்டோம் என்று தருக்கித் திரிதல் தகாது. செருக்கு ஒரு பெருமிதம். அது கல்வியாலோ, கொடையாலோ, வீரத்தாலோ உண்டாகலாம். ஆனால் எதனாலும் மனிதர்க்கு தருக்கு உண்டாதல் தகாதாம். தன்னை விஞ்சியவர் எவருமிலர் என்னும் தருக்கு அழிவைத் தரும்.
பிழை தவிர்த்தல்
பேசுவதிலும் எழுதுவதிலும் ஏற்படக்கூடிய பிழைகளைத் தவிர்த்தல் எப்படி? ஒற்றுப் பிழைகளைப் பொருத்தவரையில் நாம் இயல்பாக வாய்விட்டுப் பேசிப் பார்த்தாலே எங்கு வல்லொற்று (க், ச், ட், த், ப்) மிகும் என்பதை அறியக் கூடும். வலிந்து நாமாக ஒற்றைத் திணித்தல் சரியன்று: ஒற்றை விட்டுவிட்டாலும் பொருட்சிதைவோ, விட்டிசைத்தலோ ஏற்படும்.
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. கட்டுரைக் கொண்ட - ஒற்றுப் பிழைகள்! பிழையற்ற தமிழ் அறிவோம்! - 24
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: அா்ஜுன்சம்பத்

நிறுத்தம் தேடும் நகரம் !
தமிழை உலக அரங்கில் முன்வைக்கும் முயற்சி

சமூக நோக்கில் பகட்டு வேண்டாம்!
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

