"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' - இந்த முழக்கம் இந்தியச் செவிகளில் விழுந்து ஏராளமான ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன்னரும், உலகச் சுற்றுச்சூழல் தினத்தின்போதும் நாடெங்கும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு மரக்கன்றுகளை நடுகின்றனர்.
ஆனால், இத்தனை கோடி மரக்கன்றுகள் நடப்பட்ட பிறகும், கோடைக் காலங்களில் ஒற்றைப் பறவை ஒதுங்க நிழலின்றி, நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்று, வெப்பக்காற்று உடலைச் சுடுவது ஏன்? மரக்கன்று நடுதல் என்பது ஒரு வாழ்வியல் கடமையாக இல்லாமல், வெறும் நிழற்படத் திருவிழாவாக மாறிப்போனதுதான் இதற்குப் பின்னணிக் காரணமா?
இந்தியாவின் வனக் கொள்கையின்படி, ஒரு நாட்டின் மொத்தப் பரப்பளவில் 33 % காடுகளாக இருக்க வேண்டும். ஆனால், இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பு 21.71 % மட்டுமே. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒருசில மாநிலங்கள் ஒரே நாளில் 20 கோடிக்கும் அதிகமான கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்ததாக அறிவித்தன.
கேள்வி என்னவென்றால், அந்த இருபது கோடி மரக்கன்றுகளில் இன்று எத்தனை உயிருடன் இருக்கின்றன? மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய ஒரு தரவின்படி, காடு வளர்ப்புத் திட்டங்களின் கீழ் நடப்படும் மரக்கன்றுகளில் 30 முதல் 40 % மட்டுமே பிழைக்கின்றன. ஆனால், கள நிலவரமோ இன்னும் மோசமாக இருக்கிறது. பராமரிப்பின்றிப் பட்டுப்போகும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், நடப்பட்ட மரக்கன்றுகளில் 10 சதவீதம்கூட மரங்களாக உருவெடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இன்று மரக்கன்றுகள் நடும் விழா என்பது ஒரு சடங்காக மாறிவிட்டது. விழா நடக்கும் இடத்துக்கு சொகுசு வாகனங்களில் வந்து இறங்கும் முக்கியப் பிரமுகர்கள், பட்டுப் புடவையோ அல்லது விலையுயர்ந்த உடையோ அணிந்திருப்பர். அவர்கள் கை அழுக்காகாமல் இருக்க மண்ணைத் தோண்ட ஆள்கள், கன்றைப் பிடிக்க ஆள்கள் என ஓர் ஏவல் பட்டாளமே இருக்கும். அந்தச் சில நிமிஷப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும், செய்தித் தாள்களிலும் விளம்பரம் செய்யப்பட்டவுடன் அவர்களின் மகத்தான மர வளர்ப்புக் கடமை முடிந்து விடுகிறது.
நட்ட அன்று மாலைக்கு மேல் அந்த மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்ற ஆள் இருக்காது. நட்ட மரக்கன்று ஆடு, மாடுகளுக்கு உணவாகிறதா அல்லது காய்ந்து கருகுகிறதா என்பது குறித்து எவருக்கும் கவலையில்லை. பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து மேடை அமைத்து, பதாகைகள் கட்டி நடத்தப்படும் ஒரு விழாவில், மரக்கன்றுகளின் விலையைவிட விழாவின் செலவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது.
மரக்கன்றுகள் நடும் விழாக்கள் வெறும் விளம்பரச் சடங்காக மாறிப்போவதைத் தடுத்து, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த அரசு சில கட்டாய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்.
அரசுத் துறைகள் நடும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், உயிருடன் இருக்கும் மரங்களின் அடிப்படையில் அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு, எத்தனை மரக்கன்றுகள் பிழைத்துள்ளன என்பதைச் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றையும் 'ஜியோ}டேக்' என்ற தொழில்நுட்பக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஒரு செயலிமூலம் அந்த மரக்கன்றின் வளர்ச்சியைத் தரம் பிரித்து, குறிப்பிட்ட இடைவெளியில் அதன் புகைப்படத்தைப் பதிவேற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
நடவு செய்ய ஒதுக்கும் நிதியில் 50 சதவீதத்துக்கும் மேலாகப் பராமரிப்புக்காக (தண்ணீர் ஊற்றுதல், வேலி அமைத்தல்) ஒதுக்க வேண்டும். குறைந்தது மூன்று ஆண்டுகள் பராமரிப்பது அந்தந்தத் துறையின் சட்டபூர்வக் கடமையாக்கப்பட வேண்டும்.
அந்தந்த மண்ணின் இயல்புக்கேற்ற ஆலமரம், அரசமரம், வேம்பு, புங்கன் போன்ற உள்நாட்டு மரங்களை மட்டுமே நடுவதை அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். மரம் வளர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்ற சட்டங்களை அரசு வகுக்கலாம்; ஆனால், பொது அமைப்புகளும் மக்களுமே அதை இயக்கமாக மாற்ற முடியும்.
ஆயிரம் மரக்கன்றுகளைச் சாதாரணமாக நடுவதைவிட, நூறு கன்றுகளை நட்டாலும் அவற்றுக்கு இரும்பு அல்லது மூங்கில் கூண்டுகள் அமைத்துப் பாதுகாப்பதையும், காய்ந்து போகாமல் தண்ணீர் ஊற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். கால்நடைகள் மற்றும் இதர பிராணிகளிடமிருந்து காப்பதே முதல் வெற்றி.
பள்ளி மாணவர்களுக்கு ஒரு மரக்கன்றை வழங்கி, அவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை அந்த மரக்கன்றைப் பராமரிக்கச் சொல்லலாம். அதற்குச் சிறப்பு அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கலாம். பொது அமைப்புகள் மரக்கன்றுகளை நட்டுவிட்டுச் செல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களிடமோ, சிறு வணிகர்களிடமோ அல்லது சமூக நல அமைப்புகளிடமோ அந்த மரக்கன்றுகளைத் தத்தெடுத்துப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
பூமியைச் சோலையாக்கத் துடிக்கும் எண்ணம் உண்மையானால், நம் கைகளில் வெறும் மரக்கன்றுகள் மட்டும் இருந்தால் போதாது; அதைக் காக்கும் உறுதியும் இருக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத ஆயிரம் மரக்கன்றுகளைவிட, கூண்டு அமைத்துப் பாதுகாக்கப்பட்ட பத்து மரக்கன்றுகள் மேலானவை.
வெட்ட வெளிச்சத்தில் நின்று கொண்டு நிழலைச் சாடுவதில் பயன் இல்லை; ஒரு மரக்கன்றை வளர்த்து மரமாக்கி அதன் அடியில் அமர்வதே அறிவுடைமை. இனிவரும் காலங்களில் வெற்றுப் பெருமைக்காக மரக்கன்றுகள் நடும் விழாக்களைத் தவிர்த்து, உண்மையான மரம் வளர்ப்புத் திருவிழாக்களை முன்னெடுப்போம். அப்போதுதான் இந்தப் பூமி பசுமையின் மகுடமாக மாறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நவீன கல்வியும், பாரம்பரிய அறிவும்...

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

அரசுப் பணியாளர் வரதட்சிணை வாங்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது?

சட்டமல்ல, புரிதல்தான் வேண்டும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


