டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சைவ கலங்கரை விளக்கம்

நெல்லை மாவட்டத்துக்குப் பெயர் கொடுத்த பெருமை நெல்லையப்பர் கோயிலையே சாரும். பல நூற்றாண்டு வரலாற்றையும், பெருமையையும் கொண்டுள்ள இந்தக் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். பாண்டிய நாட்டில் பாடல

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:57 pm

கே.வாசுதேவன்

நெல்லை மாவட்டத்துக்குப் பெயர் கொடுத்த பெருமை நெல்லையப்பர் கோயிலையே சாரும். பல நூற்றாண்டு வரலாற்றையும், பெருமையையும் கொண்டுள்ள இந்தக் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 தேவாரத் தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. சைவத்துக்கு கலங்கரை விளக்காக வீற்றிருக்கும் இந்தத் தலம் சைவக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது.

 நெல்லையப்பர் கோயில், இரண்டு மூலவர் களைக் கொண்ட " த்விமூர்த்தி' வகைக் கோயிலாகும். இங்கே மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயனக் கோலத்திலும் அருகருகே தனித்தனி சந்நிதியில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

இக் கோயிலின் தலமரம் மூங்கில். 32 தீர்த்தங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை ஆகிய 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.

பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் வேணுவனமாக (மூங்கில் காடாக) காட்சியளித்த திருநெல்வேலியில் வேதசன்மா என்ற சிவபக்தர் சிவபெருமானை வணங்கி தினமும் சுவாமிக்கு செந்நெல் அறுத்து அமுதாக்கி பூஜை செய்து வந்தார்.

பஞ்ச காலத்தின்போது சிவபெருமான், வேதசன்மாவின் பக்தியை சோதிக்க விரும்பி, அவரை வறுமையில் சிக்கச் செய்தார். இந்தக் காலகட்டத்தில் வேதசன்மா ஒரு நாள் வீடு வீடாக நெல் சேகரித்து கோயிலின் சந்நிதி முன் உலரச் செய்துவிட்டு நீராடச் சென்றார்.

அப்போது திடீரென மழை பெய்தது. இதைப் பார்த்த வேதசன்மா இறைவனுக்கு அமுது படைக்க உலர வைத்த நெல் என்ன ஆனதோ என்று கலங்கியபடி கோயிலுக்கு ஓடோடி வந்தார். ஆனால் அங்கே உலரப் போட்டிருந்த நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல்லின் மீது வெயில் அடித்தது.



இதைப் பார்த்த வேதசன்மா மெய்சிலிர்த்தார். தான் கண்ட காட்சியை மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் அந்தக் காட்சியைக் கண்டு பக்தியில் உருகினான். பின்னர் நெல் மட்டும் நனையாது காத்த பரம்பொருளான இந்தப் பிரான், இன்று முதல் " நெல்வேலி நாதர் ' என்று அழைக்கப்படுவார் என்றான். இந்தப் பெயரே நாளடைவில் மருவி நெல்லையப்பர் என்று அழைக்கப்படலானது.



ஒருமுறை ராமக்கோன் என்னும் பக்தர் வேணுவனம் வழியாக அரசனுக்கு பால் கொண்டு செல்லும்போது, மூங்கில் முளையால் கால் இடறி பால் தினமும் கொட்டி வந்தது. ஒருநாள் கோபத்தின் எல்லைக்கே சென்ற ராமக்கோன், அந்த மூங்கில் முளையை கோடாரியால் வெட்டினார். அப்போது அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்து பயந்த ராமக்கோன், மன்னன் ராமபாண்டியனிடம் தான் கண்ட காட்சியைக் கூறினார்.



மன்னன் அங்கே விரைந்து வந்து பார்த்தபோது, சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி கொடுத்தார். நடந்தது இறைவனின் திருவிளையாடலே என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், சிவபெருமானின் ஆணையை ஏற்று அங்கேயே ஆலயத்தைக் கட்டினார்.

இறைவனின் இந்தத் திருவிளையாடலை மெய்ப்பிக்கும் விதமாக இன்றும் கோயிலின் மூலவராக வீற்றிருக்கும் லிங்கத்தில் கோடாரி பட்ட தடம் பதிந்திருக்கிறது.

இந்தக் கோயிலில் மாதம் ஒரு திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இதில் முக்கியமாக ஆனிப் பெருந் திருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொன்றுதொட்டு நடைபெறுகிறது.  இந்தத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 3 வது பெரிய தேர் இழுக்கப்படும். இந்தத் தேருடன்  5 தேர்கள் இழுக்கப்படும். இந்தத் திருவிழாவின்போது திருநெல்வேலி மாநகரமே விழாக்கோலம் பூண்டுவிடும். மாவட்டம் முழுவதிலும் இருந்தும் மக்கள் சாதி, சமய பாகுபாடு இன்றி தேரை இழுப்பர்.



மேலும் இந்தக் கோயிலில்தான் நடராஜ பெருமான் திருநடனம் புரியும் பஞ்ச சபைகளில் ஒரு சபையான தாமிரசபை உள்ளது. இந்த சபையில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரைத் திருவிழாவின் நிறைவு நாளன்று நடராஜ பெருமான் திருநடனம் புரியும் வைபவம் நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் நடைபெறும் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. சுவாமி நெல்லையப்பர் கோயில், பல கட்டங்களில், பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை, நின்றசீர் நெடுமாற பாண்டியனால் சீர்படுத்திக் கட்டப்பட்டிருக்கிறது.



சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுவாமி சந்நிதி அருகே உள்ள பொள்ளாப் பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கே குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற, சங்கடஹர சதுர்த்தியன்று பொள்ளாப் பிள்ளையாருக்கு 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால், அந்தத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். 41 நாள்கள் தொடர்ந்து கணவனும் மனைவியும் பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக, மாக்காளை மண்டபத்தில் பிரம் மாண்டமாக சுமார் 10 அடி உயரத்துக்கு வீற்றிக்கும் கர்ணன்,அர்ஜுனன், வீரபத்திரர் உள்ளிட்ட சிற்பங்களைக் கூறலாம். இச் சிலைகளில் மனிதனுக்குத் தெரிவது போல நரம்புகள்,விழி அசைவுகள்,உடல் அசைவுகள் ஆகியவை தெரிகின்றன. மேலும் சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக சங்கிலி மண்டபம்,வசந்த மண்டப சிற்பங்கள்,சுவாமி சந்நிதி முன் உள்ள இசைத் தூண்கள் என கூறிக் கொண்டே செல்லலாம். நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றால் சுவாமி தரிசனம் மட்டுமின்றி, வியக்க வைக்கும் சிற்பங்களையும் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.