இலக்கியக் காட்சிகள்: இயற்கையும் ஏங்கும்
ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான் ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியம் தீட்டுக என்றுரைக்கும் காடும் கழனியும்கார் முகிலும்வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் ஆடும்மயில்


ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியம் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும்கார் முகிலும்வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும்மயில் நிகர்பெண்கள் எல்லாம்உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்.
ஏடும் எழுதுகோலும் கையிலெடுத்து, கவிதை பாட அமர்ந்தான் பாவலன். உலகப் பொருள்கள் பலவும் தம்மைப் பாடுபொருளாக்குமாறு, கவிஞனுக்கு முன்னால் கை குவித்து நின்றன. கண்விழித்துப் பார்த்தான் கவிஞன்.
மண்ணுலகம் போர்த்துக் கொண்டுள்ள மேகப் போர்வை. மின்மினிப் பூச்சிகளாய் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். கவர்ந்து ஈர்க்கும் சித்திரை மாதத்து வட்ட நிலா. இவற்றைக் காட்டி என்னைப் பற்றி இனிய கவிதை பாடெனக் கவிஞனிடம் கேட்டது வானம்.
ஓடிவரும் சிறுகுழந்தைக் கால்சலங்கையாய் சலசலவெனச் சங்கீதம் பாடிவரும் ஊர்ப்புறத்துச் சிற்றோடை குழிகளில் இறங்கி மேடுகளில் ஏறிச்செல்லும் நளின நடையைக் காட்டித் தன்னைப் பாடுமாறு கேட்டுத் தவம் கிடந்தது நீரோடை.
நான்கு பக்கமும் கரைகளுக்குள் சிறைபட்டுக் கிடந்த நன்னீர்க் குளம். பச்சை வண்ணத் தட்டுகளாகத் தண்ணீரில் மிதக்கும் தாமரை இலைகள். பார்த்தோரைப் பரவசத்தில் ஆழ்த்திடும் செந்தாமரை வெண்தாமரைப் பூக்கள் தம்மைப் பற்றிப் பாடுக எனப் பாவலனைக் கெஞ்சின.
மரங்கள் நிறைந்த முல்லை நிலம். துள்ளியோடும் மான்கள். தோகை விரித்தாடும் மயில்கூட்டம். காட்டில் மணங்கூட்டும் கான் முல்லை மலர்கள்... காடும் தன்னைப் பாடுபொருளாக்குமாறு கவிஞனிடம் கேட்டன.
மருதம். மார்கழி மாதத்து மாக்கோலமாய் பச்சைப் பாத்திகளாலான வயல்வெளி. கத்தரித்துவிட்டாற் போன்று அளவொத்துநின்று, காற்றில் தலையசைக்கும் கவினார் பயிர்க் கூட்டம். வழிந்தோடும் வாய்க்கால் நீர். வளைந்த மரங்களில் பலாப்பழமாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் தேன்கூடுகள். இவற்றால் எழில்கொண்ட கழனிக் கூட்டம் கவிதைக்குக் கருவாக ஆசை கொண்டது.
விண்ணில் கனத்துத் திரண்ட கார்மேகக் கூட்டம். மண்ணைச் சிறப்பிக்கும் மழை மேகம், பாரினை வளமாக்கும் என்னைப் பாடமாட்டாயா எனப் பணிந்து கேட்டது.
அசைவிலே ஆடும் மயில், மொழியிலே பாடுங்குயிலான பருவப் பெண். அவள் உள்ளத்தில் உயிர்வாழும் காதல் தலைவன். அவனை நினைக்குந்தொறும் முகத்தில் மலரும் நாணப் புன்னகை. விழியிலும் இதழிலும் தேங்கிக் கிடக்கும் காதல் தேனூற்று. மண்ணுலகாய்ப் பரந்து விண்ணாய் உயர்ந்து நிற்கும் தனது காதலைக் கவிதையாக்குமாறு அவள் கவிஞனிடம் வேண்டுகோள் விடுத்தாள்.
கவிஞனுக்கு எல்லாமும் பாடுபொருள்தானே, யாரை விட்டுக்கொடுப்பது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...