/

இலக்கியக் காட்சிகள்: ஆதலினால் காதல் செய்வீர்!

இந்த நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனைக்கூடி- நின்றன் வீரத்தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டு ஆடி- குழல் பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஆரத் தழுவி அமரநிலை பெற்றதன் பயனை இன்று

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:57 pm

கிருங்கை சேதுபதி

இந்த நேரத்திலே மலை வாரத்திலே நதி ஓரத்திலே உனைக்கூடி- நின்றன் வீரத்தமிழ்ச் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டு ஆடி- குழல்

பாரத்திலே இதழ் ஈரத்திலே முலை ஆரத் தழுவி அமரநிலை பெற்றதன் பயனை இன்று காண்பேன்

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி குறவள்ளீ சிறு கள்ளி



- மகாகவி பாரதியார்வள்ளிப்பாட்டு

காணும் திசைதோறும் கவின் பூத்த மலையடிவாரம் இது. சங்கீதம்போலச் சலசலத்து ஓடும் நதியின் ஓரம். ஐம்புலனுக்கும் இனிமை தரும் அழகின் துடிப்பிடம். மலர்களின் வண்ணமும் மணமும் நதியின் குளிர்ச்சியும் இயற்கையின் இயக்கமும் புலன் ஐந்தினுக்கும் பூரிப்புத் தர விரிந்த அழகிய சூழல். அவையனைத்தும் மொத்தமாய்த் திரண்டு பெண்மையுருவில் முன்னெழுந்து வந்ததே போன்று கவியின் மனங் கவர்ந்த கள்ளியாம் வள்ளி நிற்கிறாள். வள்ளிக் குறமகளின் வீரமிகுந்த தமிழ்ச்சொல் செவிக்கின்பம். பாரம் மிகுந்த குழல் என்பதால் குறிஞ்சியில் பூத்த மலர்களைக் குறவள்ளி கூந்தலில் சூடியுள்ளாள் என்பது குறிப்பு. எனவே, கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் மணம் நாசிக்கு இன்பம். இதழ் ஈரம் வாய்க்குஇன்பம். முலை ஆரத் தழுவுதல் மெய்க்கு இன்பம். ஆக, புறம் விரித்த இன்பத்திற்கு நிகராய் அகம்பூத்த இன்பக் களஞ்சியமாய் அழகிய உயிரோவியமாய் நிற்கிறாள் குறவள்ளி. அவளிடமிருந்து பிறக்கும் சொற்கள் வீரம் விளைக்கும் வேகத் தமிழ்ச்சொற்கள். சொற்சுவை  இன்னதெனக் கேட்டுணர முடியாதபடிக்கு காம மயக்கம் கவிக்கு. எனினும் அதன் சாரம் உள்ளத்தில் வீரக்கிளர்ச்சியை வேகப்படுத்துகிறது. மனம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது. குறவள்ளியின் அடர்கருங்கூந்தலின் வனப்பும் கனமும் செக்கச்சிவந்த இதழ்களின் ஈரமும், பருத்த தனத்தின் பாரமும் மொத்தமாய் அழுத்த ஆரத்தழுவிப் பெறப்போகும் இன்பம் பேரின்பம். அமரநிலை என்று அடிக்கடி எழுதியும் பாடியும் பேசியும் வந்த தன்மையை, தன்மையாம் பயனைத் தாமே எய்தப்போகும் பெருமிதத்தில் எந்த நேரத்திலும் மையல் தந்த வள்ளியை நினைந்து முருகக் கடவுளாக நிலைக்கே உயர்ந்துவிடும் பாரதியின் கீதம் இது.

தேவமகள் தெய்வானை மீது முருகன் கொண்ட காதலைவிடவும் தமிழ் மானுடப் பெண்ணின், அதிலும் குறமகளின் மீது கொண்ட காதலே சாதியம் கடந்த சமூக மாற்றத்திற்குப் பேராற்றல் தரும் என்ற எண்ணத்திலும் இப்பாடல் தோன்றியிருக்கக்கூடும்.

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்,  கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்,  காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்,  கவலைபோம்,  அதனாலே மரணம் பொய்யாம் என்ற பாரதி, அதனையே, இவ்வுலகத் தலைமை இன்பம் எனக் குறிக்கிறார். அத்தகு மானுடக் காதலினால் மரணத்தை வென்று அமரவாழ்வு எய்தும் வழியை உணர்த்த அவர் இசைத்த வள்ளிப்பாடல் இது.

உங்களுக்குத் தோன்றும் எந்த ராகத்திலும் இசைக்கக் கிடைக்கும் இந்தப் பாடலைப் பாடுங்கள். குறவள்ளிக்கு முன்னர் முருகக்கடவுளாய் நீங்களும் கோல உருக் கொள்வீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.