தேள் கொட்டிய இடத்தில் கொடுக்கின் நுனியில் உள்ள முள் சிக்கிவிட்டால், கடுமையான வலி ஏற்படும். அந்த முள்ளை வெளியேற்ற, நன்கு பழுத்த பூவன் வாழைப் பழத்தைத் தோலுடன் நடுவே நறுக்கித் தேள் கொட்டிய இடத்திலும், அதனருகில் உள்ள பகுதிகளிலும், கரகரவென வேகமாகத் தேய்க்க வேண்டும். பழத்தினுள் முள் சிக்கிக் கொண்டு, வெளியே வந்துவிடும். சிலர் வாழைப் பழத்திற்குப் பதிலாக, பெரிய வெங்காயத்தைக் குறுக்கே நறுக்கி, அழுத்தித் தேய்த்தும் முள்ளை வெளியே எடுத்துவிடுவர். முள் அகலும் வரை நிற்காத கடுப்பு, அது வெளியேறியவுடன் அடங்கிவிடும். தேள் கொட்டிய இடத்திலுள்ள விஷத்தை வெளியேற்றப் பெருங்காயத்தை தண்ணீர் விட்டுக் குழைத்து அந்த இடத்தில் பூசி, தணலால் சூடு காண்பிக்க, அந்த இடம் வியர்த்து, விஷம் வெளியேறிவிடும். இதைப் போலவே நேர்வாளம் விதையைத் தண்ணீர் விட்டு உரைத்துக் கடிவாயில் ஒரு நூல் கனம் பூசி, அந்தப் பூச்சு சற்றுக் காய்ந்ததும் தணலால் சூடு காண்பித்து விஷத்தை முறிக்க முடியும். இந்த விதை ஒரு கடுமையான பேதியை ஏற்படுத்தும் சரக்கு என்பதால் கடிபட்டவரின் வாயில் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.