/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: உணவின் மூலமான ஆரோக்கியமே சிறந்தது!

எனக்கு இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு 7.3 ஞ்ம்ள்/க்ப் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. ஆண்களுக்குக் குறைந்தது 13.5 ஞ்ம்ள்/க்ப்  இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சல் வந்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:08 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு 7.3 ஞ்ம்ள்/க்ப் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. ஆண்களுக்குக் குறைந்தது 13.5 ஞ்ம்ள்/க்ப்  இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சல் வந்தது. அப்போது  5.9 ஞ்ம்ள்/க்ப்   எனக் குறைந்துபோனது. தற்சமயம் சற்றுக் கூடியிருந்தாலும், அதன் அளவை உயர்த்த ஆயுர்வேதம் கூறும் வழிகள் எவை?

வி.சகாயராஜா, திண்டுக்கல்.

டைபாய்டு காய்ச்சலால் உங்களுக்கு உடல் உட்புற உறுப்புகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதையே உங்களுடைய கேள்வியால் ஊகிக்க முடிகிறது. அதிலும் முக்கியமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளின் செயல் திறனில் குறைவு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவற்றை வலுப்படுத்தி பசியையும் மேம்படுத்த வேண்டும். குடலின் உட்புற வறட்சி, காங்கை, மலச்சிக்கல் போன்ற உபாதைகளிலிருந்தால், ஹீமோக்ளோபின் அளவைக் கூட்ட இயலாது.

அதனால் நீங்கள் காலை உணவாக வெண்கலப் பாத்திரத்தில் அரிசியையும், தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சாதம் வெந்து கொண்டிருக்கும்போது, முக்கால் பங்கு வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியைக் கரண்டியால் எடுத்து வைத்துக் கொண்டு இளஞ்சூடானநிலையில் அதில் வெண்ணெய், நெய் சேர்த்துக் காலையில் சாப்பிடவும். இதனால் குடல் வறட்சி நீங்கும். குடலிலுள்ள சூடு, மலச்சிக்கல், குடல் வறட்சியால் ஏற்படும் வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ச்சுருக்கு, வயிற்றுக் கொதிப்பு போன்றவை விரைவில் மாறிவிடும். உண்ட உணவின் சத்தானது, விரைவில் கல்லீரல் பகுதியில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் நீங்கள் உபாதையிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது.

இதை ஒருவாரம் சாப்பிடவும்.

அதுபோல மதிய வேளைகளில் பசி ஏற்படும்போது அரிசியை வறுத்து இடித்த மாவையும், கோதுமை, ரவை,வேர்க்கடலை ஆகியவற்றை வறுத்து இடித்த மாவையும் கலந்து மோர்விட்டுப் பிசைந்து சாப்பிட, களைப்பு நீங்கி, உடல் உட்புற உறுப்புகள் வலுப்பெற உதவும். மாலை வேளைகளில், தண்ணீரில் அவலை வேக வைத்து வடித்த நீரை, பால் நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட நல்ல உடல் பலம் உண்டாகும்.

இரவில் கோதுமையைப் பெருங்குருணையாக்கி சாதம் போல வேகச் செய்து, மோருடன் சாப்பிட, நலம் பலம்தரும் ஓர்  உணவுப் பண்டமாகும்.

டானிக் மருந்துகள், ஊசிபோடுதல் போன்றவை மூலம் உங்கள் ஹீமோக்ளோபின் தற்காலிக உயர்வு மட்டுமே பெரும் அடிப்படை மனித ஆரோக்கியம் என்பது உடல் பலத்தில்தான் இருக்கிறது. அதனைப் பெறுவதற்காகத்தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் "பலா அதிஷ்டானம் ஆரோக்யம், ஆரோக்யார்த்தம் க்ரியாக்ரம:' என்று கூறுகிறது.

உணவின் மூலம் பெறும் ஆரோக்கியம் நிலைத்திருக்கக் கூடியது. அந்தவகையில்  ஒரு பிடி பச்சரிசி, ஒரு பிடி துவரம் பருப்பு, ஒரு பிடி முழு உளுந்து, ஒரு பிடி கொண்டைக்கடலை, ஒருபிடி பச்சைப் பயிறு ஆகியவற்றைத் தனித்தனியாக ஒரு வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி, மூன்று லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டர்

ஆகும் வரை வேக வைத்து, மூட்டைகளை அகற்றி, அந்தக் கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்தத்திலுள்ள அத்தனை நல்ல அம்சங்களும் விரைவில் வளர்ந்து உடல் வலுவடைய உதவும். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட கஞ்சியை ஒருவாரம் குடித்த பின்பு இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

கல்லீரல் பகுதி வலுவடைய கரிசலாங்கண்ணிக் கீரையை வேக வைத்து, பொரியல் போலச் செய்து அடிக்கடி சாப்பிடவும். அதுபோல உணவில் கேழ்வரகை முளைக்கட்டி குத்திப் புடைத்துப் பின் இதன் மாவைக் கஞ்சி, களி, கூழ், தோசை,அடை என்ற வகையில் அடிக்கடி சேர்க்கவும். ஆயுர்வேத மருந்துகளில் "தாடிமாதிகிருதம்' எனும் நெய் மருந்தை உருக்கி, காலை மாலை வெறும் வயிற்றில் சுமார் 10-15 மிலி, 41 - 48 நாட்கள் தொடர்ந்து

சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.