தனிப்பட்ட முறையிலே எந்தக் காலத்திலும் எல்லாருக்கும் எந்தக் குறைந்த அளவிலும் தீமையையே விளைவிக்கும் பதார்த்தங்கள், மதுவகைகள், புகையிலை சேரும் பீடி, சிகரெட்டுகள், அபின், கஞ்சா முதலிய லாகிரி வஸ்துகள் - இவற்றின் சுபாவ (இயற்கை) சக்திகள் அபரிமிதமானவை, அலாதிப்பட்டவை. இவற்றை உபயோகிக்கத் துவங்கியதும், அளவில் குறைவாக இருந்தாலும் அவற்றின் துர்குணம், கெடுதி அந்த அளவிற்கு ஏற்றபடி நிச்சயமாய் ஏற்படுகின்றன. ஆரம்பித்த சில தினங்களில் உடம்பில் சுறுசுறுப்பு, ஜீரண சக்திகள் வளருவது போன்ற போலி குணங்கள் உண்டான போதிலும், அவை நிலைத்ததாக இருப்பதில்லை. மதுவின் அளவும் கூடிவிடும். கூடாவிட்டால் உடம்பிலும் குடலிலும் மூளையிலும் முன்பிருந்த சுறுசுறுப்பு வரவரக் குறையும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அதிக அளவு உபயோகித்தாலும் சுறுசுறுப்பு எதுவும் ஏற்படுவதில்லை. மாறாக பலவிதமான தளர்ச்சிகள், பலவிதமான உபாதைகளும் உண்டாகும். நிறுத்தினாலோ கை,கால்கள் உதறும். நிறுத்தாவிட்டலோ அபாயம் அதிகம். இப்படி ஓர் இரண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டுவிடுகிறது.