தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால், அது தலையைச் சார்ந்த "தர்ப்பகம்' எனும் கபதோஷத்தின் சீற்றத்தினால் விளைந்ததாகக் கருதலாம். இந்தக் கபதோஷத்தின் தாக்கம் கூடினால், தலையில் நீர்க்கோர்வை, நீர் முட்டல், கண்ணீர் கசிதல், லேசான காய்ச்சல் போன்றவை தென்படும். அதற்கு ரேவல் சீனிக் கிழங்கு 100 கிராம்,வேப்பம் விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து, ஒன்றாக இடித்துச் சூர்ணம் செய்து, சிறு கண் சல்லடையில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.