திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குல்மத்தைக் குணமாக்க...

காற்றடைத்த பந்துருண்டைபோல் ஒரு சிறு கொத்தான உருவம் கைக்குப்படும்படியாக எனக்கு வயிற்றில் தெரிகிறது. இது குடல் சதை வளர்ச்சியாக இருக்குமா? சில சமயங்களில் சூலக் குத்து வலியை ஏற்படுத்துகிறது. இது என்ன உபாத

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:03 pm

எஸ். சுவாமிநாதன்

காற்றடைத்த பந்துருண்டைபோல் ஒரு சிறு கொத்தான உருவம் கைக்குப்படும்படியாக எனக்கு வயிற்றில் தெரிகிறது. இது குடல் சதை வளர்ச்சியாக இருக்குமா? சில சமயங்களில் சூலக் குத்து வலியை ஏற்படுத்துகிறது. இது என்ன உபாதை? எப்படிச் சரி செய்வது?

கஜபதி, திருச்சி.

இந்த உபாதைக்கு "குல்மம்' என்று ஆயுர்வேதம்  பெயரிட்டுள்ளது. காய்ச்சல், பேதி முதலிய உபாதைகளால் உடல் வாட்டமடைந்து அதனால் உடல் பலம் அதிலும் முக்கியமாக பசி எடுக்கும் தன்மை மிகவும் குறைந்திருக்கும் நிலையில், அதை உதாசீனப்படுத்தி, அதற்கு ஏற்றபடி உணவைச் சாப்பிடாமல், வாயுவை அதிகரிக்கச் செய்யும் வேர்க்கடலை, கொண்டைக் கடலை, மிக்ஸர், வறுத்த பருப்பு வகைகளைச் சாப்பிடுதல், நல்ல பசியுள்ள சமயத்தில் வெறும் வயிற்றில் குளிர்ந்த தண்ணீரை நிறையக் குடித்தல், உணவைச் சாப்பிட்டதும் ஓய்வின்றி உடலை வருத்தும்படியான அளவில் வேலை செய்தல், தானாகவே வெளியே வரும் ஏப்பம், வாந்தி, மலம், சிறுநீர், குடல்காற்று போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல், ஆசிரியரிடம் பயிற்சி பெறாமல், வெறும் புத்தகம் அல்லது தொலைக்காட்சி பார்த்து பிராணாயாமம், மூச்சை அடக்கும் பயிற்சிகளைச் செய்தல், கொலஸ்ட்ரால் வந்துவிடும் என்று பயந்து கொண்டு நெய், பால் முதலியவை சேர்க்காமல் தனி வறட்சியான உணவுவகைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணங்களால் தாதுக்கள் வறட்சி அடைந்து குடலில் வாத தோஷம் சீற்றம் அடைகிறது. இது போதாதென்று பித்த கபங்களைத் தூண்டும் பேல்பூரி, சமோஸô, காரமான பொருட்கள், உளுந்து சேரும் இட்லி, தோசை போன்றவை அதிகம் சாப்பிடுதல் போன்றவற்றால் கப பித்தங்களும் வளர்ந்து குடலில் குறிப்பிட்ட இடத்தில் இரு பக்கத்திலும் அடைத்துத் தாங்குகின்றன. இதனால் வாயு நகர முடியாமல் ஒரு குறிப்பிட்ட சிறு இடத்தில் ஒடுக்கப்படுகிறது. அதுதான் உங்களுக்கு காற்றடைத்த பந்துருண்டை போல ஒரு சிறு கொத்தான உருவமாகத் தென்படுகிறது. நடுவில் வாயு தங்கி, சுற்றியும் கப, பித்தங்கள் அடைத்துக் கொண்டிருப்பதால், திடீரென்று சூலக்குத்து வலியை உண்டாக்குகிறது.

இந்த நிலை நீடித்தால் வலியுடன் வாந்தி, எரிச்சல், மலக்கட்டு, குடல்காற்று தேக்கம், அதிக களைப்பு, மயக்கம், தூக்கமின்மை போன்ற உபத்திரவங்கள் தொடரக் கூடும்.

இதைச் சரி செய்யும் வழிகள் என்ன? சுத்தமான பால் பெருங்காயம் 1 கிராம், இந்துப்பு 3 கிராம், விளக்கெண்ணெய் 9 மி.லி., உள்ளிப்பூண்டுச் சாறு 27 மி.லி. என்ற அளவுமுறையில் தேவைக்குத் தகுந்தபடி அதிக அளவிலும் ஒன்று சேர்த்துக் குலுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளில் 2 -3 வேளை, ஒரு வேளைக்கு 10 -15 மி.லி. வீதம் அதே அளவு வெதுவெதுப்பான பால் அல்லது வெந்நீர் கலந்து சாப்பிடவும். இதைச் செய்ய கஷ்டமாக இருந்தால் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் ஹிங்குத்ரிகுண தைலம் என்ற  பெயரில் விற்கப்படும் மருந்தை வாங்கிச் சாப்பிடலாம்.

ஷ்ட்பலகிருதம் எனும் நெய் மருந்தை அஷ்ட சூரணம் எனும் பொடி மருந்துடன் சூடான சாதத்துடன் கலந்து காலை இரவு உணவின்போது முதல் உருளையைச் சாப்பிடவும். சூரணம் 2 கிராம் அளவு, 10 மி.லி. நெய் என்ற அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

சுமார் அரை லிட்டர் புளித்த தயிரைக் கடைந்த கெட்டி மோரில் விதை நீக்கிய கடுக்காய்கள் சுமார் 30, இந்துப்பு 20 கிராம், 3-4 நாட்கள் வெயிலில் ஊற வைத்து பிறகு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் ஒரு கடுக்காயை வாயில் அடக்கிச் சாப்பிடவும்.

இந்த நான்கு மருந்துகளையும் உபயோகித்துக் கொண்டு வாயுப் பண்டங்களை உணவில் அதிகம் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டால், குல்ம வியாதி விரைவில் குணமாகிவிடும். பசியைத் தூண்டி, குடலில் வாயு சேராமலிருக்க உள்ளிப் பூண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் இரவில் படுக்கும் முன் சாப்பிடுவதும் நல்லதே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.