விழிப்புணர்வு: நிரந்தர மழலைகளுக்கான கலைப் பயணம்!
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை "சிறப்புக் குழந்தைகள்' என்று அழைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களை "நிரந்தர மழலைகள்' என்று ....


மூ ளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை "சிறப்புக் குழந்தைகள்' என்று அழைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களை "நிரந்தர மழலைகள்' என்று சொல்கிறார்கள். எங்கே என்று கேட்கிறீர்களா?
திருச்சியில் இந்தக் குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் "இன்டாக்ட்' நிறுவனத்தினர். இவர்கள் கிராமப்புறங்களில் விழிப்புணர்வுக் கலைப் பயணங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள்தான் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை "நிரந்தர மழலைகள்' என்று அழைக்கிறார்கள்.
இந்நிறுவனத்தின் ஏற்பாட்டின்படி, மதுரையைச் சேர்ந்த "உதயம்' கலைக் குழுவினர் இந்தக் கலைப் பயணத்தை 4 நாள்களுக்குள் 20 கிராமங்களில் நடத்தி முடித்துள்ளனர். மூன்று குறுநாடகங்கள் இப் பயணத்தில் இடம்பெற்றன.
திருச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளான மண்ணச்சநல்லூர், மணிகண்டம் வட்டங்களில் திருமலை சமுத்திரம், அய்யம்பாளையம், இருங்களூர், ஓமாந்தூர், அளுந்தூர் போன்ற கிராமங்களில் இந்தக் குறு நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தொடக்கத்தில் இருவர் தப்பு அடிக்கின்றனர். பாட்டு பாடுகின்றனர். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் ஒரு சிறுகூட்டம் கூடிவிடுகிறது. நாடகம் தொடங்குகிறது.
தெருக்களில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சிறப்புக் குழந்தையொன்றும் சேர்ந்து விளையாட வருகிறது. கூட்டத்திலிருந்த ஒரு பையன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் குழந்தையைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறான்.
மற்றவர்கள் அந்தப் பையனிடம் பேசுகின்றனர். பின்னர் அவன் சமாதானம் ஆகிறான். "சிறப்புக் குழந்தைகளை ஆதரிப்போம், நிரந்தர மழலைகளை ஆதரிப்போம், ஏற்றுக்கொள்வோம் நம்மில் ஒருவராக' இந்தப் பாடலுடன் நாடகம் முடிவடைகிறது.
அடுத்த நாடகம். ஒரு குழுவினரிடம் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் செல்கிறான். அந்தக் குழுவினரில் ஒருவன் அந்தச் சிறுவனை பைத்தியம் என்கிறான். மற்றொருவன் பேய் பிடித்துள்ளதாகக் கூறுகிறான். இப்படியே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகச் சொல்ல, கடைசி நபர்தான் எல்லாவற்றையும் மறுத்து விளக்கமளிக்கிறான். மனநலம் குன்றிய குழந்தைகளும் நம்மில் ஒருவர்தான் என்பதை விளக்கிய பிறகு, அனைவரும் அந்தச் சிறுவனை கட்டியணைக்கின்றனர்.
மூன்றாம் நாடகம், மூளை வளர்ச்சிக் குன்றிய சிறுவனை சிறப்புப் பள்ளியில் விடுகின்றனர் அவனது பெற்றோர். அங்கு பலவகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோலவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கிக் கொண்டே, இன்டாக்ட் நிறுவனத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை விளக்குகிறார் ஒருவர். கலைப் பயணம் நிறைவு பெறுகிறது.
இந்தக் கலை நிகழ்வின்போதே சிறப்புக் குழந்தைகளைப் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. உதயம் கலைக் குழுவின் தலைவர் கே. மணிமாறன் நன்றாகப் பாடுகிறார். எம். ஜெயசீலன், எம். ராஜா ஆகியோர் தப்படிக்கின்றனர். எஸ். பிரான்சிஸ், பி. கார்த்திக் ஆகியோர் நாடகத்தை இயக்குகின்றனர்.
இந்தக் கலைப் பயணம் பற்றி "இன்டாக்ட்' நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ. ஜெஸ்லின் கூறியது:
""ஏறத்தாழ 15 ஆண்டுகளாக இந்தக் குழந்தைகளுடன் பணியாற்றி வருகிறோம். 2008-ல் இன்டாக்ட் வாய்ப்பு வளாகம் தொடங்கப்பட்டது. சிறப்புப் பள்ளியில் 90 குழந்தைகள் பயின்று வருகின்றனர். வாய்ப்பு வளாகத்தில் 15 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிராமங்களில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டோம். உண்மை நிலவரம் மக்களுக்குத் தெரியவில்லை. விதவிதமாக அவர்களுக்குத் தோன்றியதைக் கூறினார்கள். அதன்பின், சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுடன் நடத்திய கலந்தாய்வில்தான் இதுபோன்ற கலைப் பயணத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்தோம்.
இப்போது இந்த விழிப்புணர்வு நாடகங்கள் 20 கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளதும் ஒரு முன்னோட்டம்தான். அடுத்த கட்டமாக, திருச்சி மாவட்டத்திலுள்ள அத்தனை கிராமங்களுக்கும் செல்ல இருக்கிறோம். நகர்ப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்குச் சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய குறும்படங்களை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...