திரைக்கதிர்: மல்லிகா ஸ்ஸ்ஸ்...ஷெராவத்!
பாலிவுட் நாயகி மல்லிகா ஷெராவத் நடிப்பில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள படம் 'ஸ்..ஸ்..ஸ்...'. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்


பாலிவுட் நாயகி மல்லிகா ஷெராவத் நடிப்பில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள படம் 'ஸ்..ஸ்..ஸ்...'. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழ்ப் பதிப்பை ஸ்ரீதிருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஹிந்தி நடிகர் இர்பான் கான் நாயகனாக நடிக்கிறார். திவ்யா தத்தா முக்கிய வேடம் ஏற்கிறார். மனித உருவம் எடுக்கும் பாம்பு அவதாரம்தான் கதைக் கரு. மல்லிகா ஷெராவத் இதுவரை நடித்த படங்களிலேயே இதில் மிகவும் கிளாமராக நடித்துள்ளாராம். ஹாலிவுட் இயக்குநர் ஜெனிபர் சேம்பர் லின்ச் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்ஸôண்டர் இசையமைத்துள்ளார். அக்டோபர் 22-ல் இப்படம் வெளியாகிறது.
ஆசிரியரைத் தேடி...
எழுத்தாளர் திருவாரூர் பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் 'கந்தா'. கரண் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மித்ரா நடித்துள்ளார். ராஜேஷ், சத்யன், ரியாஸ்கான், 'காதல்' தண்டபாணி, ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி.பி. ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கல்பனா பழனிவேல் தயாரித்துள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.
படம் குறித்து பாபுவிடம் கேட்ட போது, ''நான் ஒரு எழுத்தாளன், பத்திரிகையாளன். முதல் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் புதிதாக ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் 'கந்தா' படத்தின் கதையை எழுதினேன். ஆக்ஷன் படமாக உருவாகியிருந்தாலும் சமூகப் பிரச்னையும் அடங்கியிருக்கிறது. தஞ்சாவூரை கதைக் களமாக கொண்டு படம் உருவாகியிருக்கிறது. ஆசிரியர் - மாணவர் உறவை மையமாகக் கொண்டு கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் வளர்ந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் திரும்பும் இளைஞன், தன் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியரைத் தேடி பயணப்படுகிறான். அந்தப் பயணத்தில் அவன் சந்திக்கும் அதிரடி நிகழ்வுகள், நெகிழ்வான திரைக்கதையாக அமைந்துள்ளது'' என்றார்.
சூப்பர் 55!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 55-வது படமாக உருவாகி வரும் படம் 'ரௌத்திரம்'. 'கற்றது தமிழ்', 'ராம்' போன்ற படங்களைப் போல் உடலை வருத்தி இப்படத்தில் நடித்திருக்கிறாராம் ஜீவா. ''கோ', 'வந்தான் வென்றான்', 'சிங்கம் புலி', 'ரௌத்திரம்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறேன். அனைத்துப் படங்களுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகின்றன. சமூக அவலங்களைக் கண்டு வெகுண்டெழும் பெரும் கோபம் கொண்ட இளைஞனின் வாழ்க்கைதான் 'ரௌத்திரம்'. 'கற்றது தமிழ்', 'ராம்' போல் இந்தப் படம் பேசக் கூடிய படமாக இருக்கும். '3 இடியட்ஸ்' படத்தில் நடிப்பது குறித்து ஷங்கர் சாரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படங்களில் 'புது வசந்தம்' படத்தை ரீமேக் செய்தால் நடிக்க ஆர்வம் இருக்கிறது. வருங்காலத்தில் 'புது வசந்தம்' மீண்டும் உருவாகலாம்'' என்றார்.
'காதலு'க்குப் பின்...
ஸ்ரீ சுவாதி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'உனக்கென இருப்பேன்.' கதாநாயகனாக பிரபா என்பவர் அறிமுகமாகிறார். வர்ஷினி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா என்பவர் அறிமுகமாகிறார். ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 'தோழா' படத்தின் மூலம் அறிமுகமான சுந்தரேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசியபோது, ''காதல்தான் களம். அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறேன். மதுரைப் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவனைக் காதலிக்கும் நாயகி, அவன் மனதில் இடம் பிடித்தாளா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறேன். பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த 'காதல்' படத்தின் மன நலம் பாதிக்கப்பட்டவனின் கதாபாத்திரம்தான் இந்தக் கதை உருவாக காரணம். காதலுக்குப் பின் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்கிறார்களா? அவர்களின் வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகள் தலையெடுக்கின்றன என்பதையும் கதையில் சேர்த்திருக்கிறேன். திண்டுக்கல் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன'' என்றார்.
ஆங்கில நாவலைத் தழுவி..!
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சிக்கு புக்கு.' ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். 'தாம் தூம்' படம் மூலம் ஜீவாவின் இடத்தை நிரப்பிய அவரின் மாணவர் மணிகண்டன் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
''ஒரு பிரபலமான ஆங்கில நாவலை தழுவிதான் இந்தப் படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளேன். அந்த நாவலை நிறைய பேர் படித்திருப்பார்கள். அதன் பெயரை சொன்னால் படத்தின் கதை தெரிந்து விடும். காதல்தான் களம். தஸ்தயேவஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலின் தழுவல்தான் இந்தப் படத்தின் கதை என்று ஒரு பேச்சு இருக்கிறது. அதில் உண்மையில்லை. உலகத்தையே உணர்ச்சிவசப்பட வைத்த பெரும் நாவல் அது. அதை படமாக்கும் போது சில சமரசங்கள் வேண்டும். அதை படமாக்கும் தைரியம் திரைக்கதையாளர்களுக்கு இப்போது இருக்கிறதா? என்று தெரியவில்லை. ''சினிமா என்றால் பெரியதாக யோசிக்க வேண்டும். அப்படி யோசித்ததை அப்படியே செயல்படுத்த வேண்டும்.'' இதுதான் ஜீவா சார் சினிமா பற்றி என்னிடம் அடிக்கடி சொன்னது. அதை அப்படியே பின்பற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்'' என்றார்.
ஊரே ஒதுக்கிய ஒருவன்!
கிளாஸிக் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'தென்காசி பக்கத்துல.' கதாநாயகனாக சுபாஷ் என்பவர் அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகனாக விஷ்ணுதேவ் நடிக்கிறார். 'கருங்காலி' படத்தில் நடித்து வரும் அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். அமுதா என்பவர் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தவறு செய்தவர்களை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார் ஊரை விட்டே ஒதுக்கி வைப்பது இன்னமும் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் தவறே செய்யாத ஒருவனை கண்டு ஊரே ஒதுங்கி நிற்கிறது. அதற்குக் காரணம் என்ன என்பதுதான் கதை. 'நாளை நமதே' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய ஆண்டனி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். கணேஷ்ராம் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை தமிழமுதன் எழுதுகிறார். தென் மாவட்டங்களில் உள்ள ஊர்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...