திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முகங்கள்: மனவெளி மனிதர்கள்!

சாலையோரங்களில் நின்றும், அமர்ந்தும், பேசியும் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் நம்மில் பலருக்கு கொஞ்சம் இரக்கம் வரும். வெகுசிலர் அப்போதைக்கு சில்லறைக் காசுகளை வீசிச் செல்வோம். ஆனால், ஈரோட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:05 pm

சா. ஜெயப்பிரகாஷ்

சாலையோரங்களில் நின்றும், அமர்ந்தும், பேசியும் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் நம்மில் பலருக்கு கொஞ்சம் இரக்கம் வரும். வெகுசிலர் அப்போதைக்கு சில்லறைக் காசுகளை வீசிச் செல்வோம். ஆனால், ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் திருநாவுக்கரசுக்கு வித்தியாசமான யோசனை தோன்றியிருக்கிறது.

ஈரோட்டைச் சுற்றியுள்ள இடங்களில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைச் சில நாள்கள் கூடவே இருந்து புகைப்படமாக்கியிருக்கிறார். 11 பேரின் படங்களைக் கொண்டு, "தேடலின் ஒரு தேடல்' என்ற தலைப்பில் ஓர் ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்.

பணவெளி மனிதர்கள் பலருக்கும் ஒரு கதை இருக்கும்போது, இந்த மனவெளிமனிதர்களுக்கு ஒரு பின்னணி இருக்காதா என்ன?

அதைத் தேடியபோது...

"படிப்பு கொடுத்த பரிசு' என்று தலைப்பிடப்பட்ட ஒரு (முதல்) பக்கத்தில் இருப்பவர் பெயர் சேகர். எம்.ஏ., பி.எட்., முடித்துள்ள இவர் கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளாக கொடுமுடி ரயில் நிலையம் அருகே இருக்கிறார். சட்டையில் ஒரு பட்டன்கூட இணைந்திருக்கவில்லை. பேண்ட்டை கயிறுகளால் பிணைத்திருக்கிறார் இந்தப் பட்டதாரி.

அடுத்தவர், 50 வயது மதிக்கத்தக்க பெண்.

கார்ணம்பாளையம் ரயில்வே கேட் அருகே அமர்ந்திருக்கிறார். இப் பகுதியில் கடந்த 15 நாள்களாக இவரைப் பார்க்க முடிவதாக அங்கிருந்தோர் தெரிவித்திருக்கின்றனர். இவர் அணிந்திருப்பது, அரசின் இலவச சேலை போலத் தெரிகிறது. இவரது படத்துக்கு திருநாவுக்கரசு அளித்திருக்கும் தலைப்பு "ஏக்கம்'.

அடுத்த களம் கருமாண்டம்பாளையம் பேருந்து நிலையம். 70 வயது மதிக்கத்தக்கவர் இந்தப் பெருமாயி. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இவரைப் பார்க்க முடிகிறதாம். பெருமாயி படத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் "தெய்வம் தந்த வீடு'.

சடைமுடி, தாடியுடன் மடித்துக் கட்டிய வேஷ்டி, உருவத்தைவிடவும் பெரிய சட்டை. 55 வயது மதிக்கத்தக்க இவரது பெயர் தெரியவில்லை.

சோளங்காபாளையத்தில் திரியும் இவருக்கு உணவு கிடைக்கும் பகுதி, கடைத் தெருவும், குப்பைத் தொட்டியுமாம். "யாத்திரை' இப்படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு.

"மெüனம்'. 60 வயது மதிக்கத்தக்க இவருக்கும் நீண்ட சடைமுடி. சென்னிமலை- காங்கேயம் சாலை மலைப் பகுதியில் இவர் வாசம் கொண்டிருக்கிறார். ஏறத்தாழ 4 ஆண்டுகளாக இப் பகுதியில் இவரைப் பார்க்க முடிகிறதாம். மலைப்பாதையின் சாலைக் கட்டையில் அட்டணக்காலிட்டு அமர்ந்திருக்கிறார்.

நெடுஞ்சாலைத் துறையின் கல்லில் "தவம்' இருப்பதைப் போலிருப்பவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர். பெருந்துறை எல்லைமேடு அருகே இவரைக் கடந்த ஓராண்டாகப் பார்த்து வருவதாகக் கூறுகின்றனராம். லாரி ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அளிக்கும் உணவுதான் இவரின் தவத்துக்கு அச்சாணி.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க இவர் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் படமாக்கப்பட்டவர். பீடியை உற்சாகத்துடன் இழுக்கும் "க்ளோசப் ஷாட்'- இந்தப் படத்துக்கு "புகை உயிரின் பகை' எனத் தலைப்பிட்டிருக்கலாம். ஏறத்தாழ 6 மாதங்களாக இந்தப் பகுதியிலிருக்கிறாராம்.

"நிம்மதி கிடைச்சாச்சு'. தலைப்புக்குத்தக்க செடிகளுக்கும் சருகுகளுக்கும் நடுவே ஒய்யாரமாக பள்ளிகொண்டிருக்கிறார் இவர். வெள்ளக்கோயில் சாலை, நஞ்சை ஊத்துக்குளி பேருந்து நிறுத்தம் இவரது முகவரி. 55 வயதிருக்கலாம். 5 ஆண்டுகளாக இப்பகுதியில் அறியப்படுகிறாராம்.

பவானி பிரதான சாலை, பிபி அக்ரஹாரத்தில் அமர்ந்திருக்கும் பழனிக்கு 70 வயதிருக்கலாம். சீன பயில்வானைப் போன்ற வெள்ளை முடி, நீண்ட தாடி. படமெடுப்பதை ரசித்து சிரிப்பதைப் போலத் தெரிகிறது. அதனாலேயேகூட இந்தப் படத்துக்கு "புன்னகை' என்று பெயராகியிருக்கலாம். 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில்

புன்னகை பூத்து வருகிறாராம்.

இறுதியில் இருப்பவர் ஈரோடு அரசு மருத்துவனைப் பகுதியைச் சேர்ந்தவர். 60 வயதிருக்கலாம். இவருக்கு அருகே தண்ணீருடன் சில பாட்டில்கள். சிறிய அளவிலான சிவ லிங்கம், அதற்கு பூக்களால் அலங்காரம். சில இலைகள். "நான் கடவுள்' இவரின் படத்துக்குக் கிடைத்த பெயர்.

நுட்பமாக எடுக்கப்பட்ட படங்கள், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் ஒரு தலைப்பும், கலைத்தன்மையுடனான ஒரு பதிவைத் தந்திருக்கின்றன. சரி, ஏன் இந்த வேலை? என்னதான் செய்ய நினைக்கிறீர்கள்?

திருநாவுக்கரசு கூறுகிறார்:

""பேருந்து நிலையத்தில் என்னிடம் பிச்சை கேட்ட ஒருவரைப் பார்த்த போதுதான் இந்த முயற்சி தோன்றியது. சில்லறைக் காசுகளைக் கொடுத்திருக்கலாம்.

ஆனால், இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? இவர்களுக்காக என்ன செய்யலாம்? என என்னுள் எழுந்த கேள்விகளை இந்த ஆல்பத்தின் மூலம் மற்றவர்களிடம் கேட்பதுதான் என் நோக்கம்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புகைப்படம் எடுக்க எல்லா மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். அங்கெல்லாம் பார்ப்பவர்களிடம் இந்த ஆல்பத்தை கொடுத்து கூடவே ஒரு நோட்டையும் கொடுத்து கருத்து எழுதி வாங்கி வருகிறேன். விஐபிக்கள், மாணவ, மாணவிகள், சிந்தனையாளர்கள் எனப் பலரும் ஆல்பத்தை பார்க்கின்றனர். எழுதுகின்றனர்.

இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் இதைக் காட்டியிருக்கிறேன். ஒவ்வொருவரின் மனதிலும் சில தாக்கங்களை இந்த ஆல்பம் ஏற்படுத்துகிறது. இதன்மூலம் ஏதாவது நன்மை நடக்கும் என நம்புகிறேன்'' என்கிறார் திருநாவுக்கரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.