எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூலிகைத் தண்ணீரில் குளிக்கவும்!

எனக்கு உணவில் காரம் சற்றுக் கூடினால் கூட உச்சந்தலையிலிருந்து வியர்க்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் தலை முழுவதும் வியர்த்து நீராக வடிகிறது. மட்டன் குழம்பு, மீன் குழம்பு, புளிக் குழம்பு, சாம்பார் என்று எ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:54 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு உணவில் காரம் சற்றுக் கூடினால் கூட உச்சந்தலையிலிருந்து வியர்க்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் தலை முழுவதும் வியர்த்து நீராக வடிகிறது. மட்டன் குழம்பு, மீன் குழம்பு, புளிக் குழம்பு, சாம்பார் என்று எது சாப்பிட்டாலும் இதுபோன்று வியர்க்கிறது. கடையில் புரோட்டா- குருமா சாப்பிட்டாலும் தலையிலிருந்து வியர்வை வழிய ஆரம்பித்து விடுகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வுதான் என்ன? நான் 40 வயது நிரம்பிய தனியார் பள்ளி ஆசிரியர். இன்னும் திருமணம் ஆகவில்லை.

டி.செய்யத்தாவூத், பாளையங்கோட்டை.

மனிதர்களுடைய குடல் நான்கு வகையில் மட்டுமே அமைய முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வாத தோஷத்தின் ஆதிக்கத்தினால் குடல் வறட்சியாகவும், பித்த தோஷத்தின் ஆதிக்கத்தினால் மிருதுவாகவும், கபதோஷத்தின் ஆதிக்கத்தினால் நடுநிலையாகவும், தோஷங்கள் மூன்றும் சமமாக இருந்தால் குடல் நடுத்தரமாகவும் இருக்கும். உங்களைப் பொறுத்தவரை குடல் பித்தத்தினால் மிருதுவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. வயிற்றில் காரமான உணவு வந்து சேர்ந்தவுடன், பித்தத்தின் குணங்களாகிய லேசான பசை, கூர்மை, சூடு, இளகும் தன்மை, பெருகும் தன்மை போன்றவை குடலின் இயற்கையான தன்மையினால் உடனடியாகத் தூண்டப்பட்டு, ரத்தம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, தலையில் தோலின் அடியிலுள்ள வியர்வைக் கோளங்களை உசுப்பேற்றி, அங்குள்ள நீரை வெளியே தள்ளுகிறது.

பிறந்தது முதலே உங்களுக்கு இந்தக் குடல் அமைப்பு இருப்பதற்கான வாய்ப்புள்ளதால் அதை இனி மாற்றுவது மிகவும் கடினம். உங்களுக்கா கவாவது பர வா யில்லை. இந் தக் குடல் வகைக் கொண்ட சில ருக்குப் பால் சாப்பிட்டால் கூடப் போதும், பேதியாகும். குடலின் ஸ்திரத் தன்மைக் குறைவால் பயணம் செய்யும்போது எங்கேனும் பேதி ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டே பயணம் செய்பவர்களும் உண்டு.

காரம், புளி, உப்புச் சுவை உங்கள் குடலுக்கு ஒத்துக் கொள்ளாது. காரத்தினால் ஏற்படும் கெடுதிகளை இனிப்பாலும், புளிப்புச் சுவைக்கு நேர் எதிரானது கசப்பும், உப்புச் சுவையினால் ஏற்படும் தாக்கத்தைத் துவர்ப்பினாலும் மட்டுமே நீக்க முடியும் என்பதால் உங்களுக்கு இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையினால் இந்த உடல் உபாதையை நீக்க முடியும்.

உங்களுக்குத் திருமணமாகாததால் சில எளிய குளிர்ச்சியும் இனிப்பும் நிறைந்த உணவுமுறைகளைக் காலையில் சாப்பிடுவதால் உடல் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. பச்சைப் பயறு வேக வைத்து, அதனுடன் வெந்நீரையும் சேர்த்து, சிறிது இந்துப்பு கலந்து காலை உணவாகச் சாப்பிட நல்லது. அதுபோல, கம்பங் கூழ், கேழ்வரகுக் கஞ்சி போன்றவையும் சாப்பிடலாம்.

வேலையின் நடுவே ஒரு சின்ன டிபன் பாக்ஸில், லேசான அவலுடன் கலந்த தேங்காய்த் துருவல் மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த உணவை வைத்துக் கொண்டு, ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சியையும், தலையிலுள்ள வியர்வையையும் கட்டுப்படுத்தலாம்.

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மதிய உணவில் பாகற்காய் பொரியல், வாழைப்பூ வடை கறி, நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி, மணத்தக்காளிக் கீரை போன்றவற்றை சேர்த்துச் சாப்பிட முயற்சிக்கவும். கசப்பும், துவர்ப்பும் உள்ள இவை அனைத்தும் உங்களுடைய உடல் நலனைப் பாதுகாக்கும் சிறந்த உணவு வகைகளாகும்.

இரவில் குடல் மற்றும் உடல் சூட்டைக் கிளப்பாத கோதுமையினால் காரம் சேர்க்கப்படாத உணவு வகைகளை உப்புமா, சப்பாத்தி, தோசை என்ற வகையில் உங்களுக்குப் பிடித்த வகையில் சாப்பிடலாம்.

இரவு முழுவதும் ஒரு மண்பானை நிறையத் தண்ணீரை ஊற்றி, ஆற்று மணலைத் தரையில் பரப்பி, பானையை அதன் மேல் வைத்து, பானைத் தண்ணீரில் சந்தன சிராத்தூள், வெட்டி வேர், தாமரைத் தண்டு, தாமரை அல்லி, ஆம்பல் மலர் ஆகியவற்றை ஊற வைத்து, மறுநாள் காலையில் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய ஹிமாசாகர தைலத்தைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு, பானையில் ஊறியுள்ள மூலிகைத் தண்ணீரைத் தலையில் ஊற்றிக் குளிக்கவும். தலையிலுள்ள வியர்வைக் கோளங்கள் இதன் மூலம் சாந்தமாகின்றன. சந்தனக் கட்டையை விழுதாக பன்னீருடன் அரைத்துத் தலையில் ஊற வைத்துக் குளிப்பதன் மூலமாகவும் தலையிலுள்ள வியர்வைக் கோளங்களை அமைதியுறச் செய்யலாம்.

பரூஷகாதி, மிருத்வீகாதி, விதார்யாதி, திராக்ஷாதி போன்ற லேகிய மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி எது உங்களுக்கு உகந்ததோ அதைச் சாப்பிட்டு நீங்கள் உடல் உபாதையை நன்றாகக் குறைத்துக் கொள்ளலாம்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.