திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: நடனத்துக்கு மரியாதை!

'வேட்டைக்காரன்' படத்தையடுத்து 'சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்அனுஷ்கா. தமிழிலும் தெலுங்கிலும் பெரும் நட்சத்திரங்கள் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் லாரன்ஸ் ராகவாவுக்கு கால்ஷீட் கொட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:06 pm

மனோஜ் கிருஷ்ணா

'வேட்டைக்காரன்' படத்தையடுத்து 'சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்அனுஷ்கா. தமிழிலும் தெலுங்கிலும் பெரும் நட்சத்திரங்கள் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் லாரன்ஸ் ராகவாவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா. 'முனி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸýடன் ஜோடி சேருவது குறித்து கேட்டால்.. ''லாரன்ஸ் இயக்கிய 'டான்' தெலுங்குப் படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். தவிர, அனுஷ்காவின் ஃபேவரைட் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ராகவாதான். தமிழில் எப்படியோ தெலுங்கில் அனுஷ்காவின் நடனம் பேசப்படுவதற்கு லாரன்ஸ்தான் காரணம். அதனால் அவர் கேட்டவுடன் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்'' என்கிறது அனுஷ்கா தரப்பு.

ஆர்வம் குறையவில்லை!

'பாடகசாலை' படத்தைத் தயாரித்து வரும் மூவி ட்ரீம்ஸ் நிறுவனம், அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 'ஆர்வம்' என்ற படத்தைத் தொடங்கியுள்ளது. புதியவர் ஆதித்யன் இயக்கும் இந்தப் படத்தில் சத்யா, சஞ்சய் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். மதுரையில் படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் 'ஆர்வம்' பற்றி கேட்டபோது...

''படத்தின் தலைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும். அடுத்த காட்சி என்ன என்பதைக் க்ளைமாக்ஸ் வரை யாராலும் யூகிக்கமுடியாத(!) அளவுக்குத் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறோம்'' என்றவரிடம் 'அந்தச் சம்பவம்' பற்றி கேட்டபோது... 'அது மட்டும் சஸ்பென்ஸ்; அது வெளியில் தெரிந்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு விடும்'' என்றார்.

இயக்குநராகிறார் காயத்ரி ரகுராம்?

'சார்லி சாப்ளின்', 'விசில்', 'ஸ்டைல்' தமிழ்ப் படங்கள் உள்பட தெலுங்கிலும் கன்னடத்திலும் 15}க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காயத்ரி ரகுராம் தற்போது 10}க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ''இனி தொடர்ந்து நடன இயக்கம் மட்டும்தானா?'' என்று கேட்டபோது...

''நடனத்தின் மூலம்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் சிறிது இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இப்போதும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரே மாதிரியான கேரக்டர்களாகவே உள்ளன. ஒரு படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும்... அது நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் அதுபோன்ற வேடங்களில் மட்டும்தான் இனி நடிப்பேன். இதைத் தவிர, ஒரு முன்னணி இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றிவிட்டு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அது 'சலங்கை ஒலி', 'மயூரி' போன்று நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இருக்கும்'' என்ற காயத்ரி ரகுராம் நர்த்தனசாலா என்ற நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார்.

விஜய் கிடைத்தால் வெளுத்துக்கட்டுவேன்!

65 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து வரும் புதிய படம் 'வெளுத்துக்கட்டு'. இதை அவருடைய உதவியாளர் சேனாபதிமகன் இயக்குகிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டபோது...

''இதில் கதிர், அருந்ததி என்ற இரண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை என்னுடைய சினிமா கேரியரில் முக்கியமான படமாகக் கருதுகிறேன். பொதுவாக என்னுடைய படங்களை நாற்பது அல்லது ஐம்பது நாட்களுக்குள் முடித்துவிடுவேன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 65 நாட்களுக்கும் மேலாக நடந்துவருகிறது. 70 சதவீத பகுதிதான் முடிந்துள்ளது. இந்தப் படத்துக்காக அம்பாசமுத்திரத்தில் ஒரு பிள்ளையார் கோயிலை ரூ.4 லட்சம் செலவில் ஆகம விதிப்படி கட்டினோம். படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்தக் கோயிலை அந்த ஊர் மக்களுக்கே கொடுத்துவிட்டோம். பரணியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. வெளுத்துக்கட்டு கமர்ஷியல் படம் என்பதோடு தரமான படம் என்ற பெயரையும் பெறும்'' என்றவரிடம்...

''புரட்சிகரமான கருத்துகளை வைத்துப் படம் எடுத்த நீங்கள் மீண்டும் அதுபோன்று எடுப்பீர்களா?'' எனக் கேட்டபோது... ''இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அப்படி எடுத்தால் அதில் ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டும். என் மகன் விஜய் கால்ஷீட் கொடுத்தால் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு படத்தை எடுக்க முடியும்'' என்றார்.

அழிவே இல்லாத அகிலம்!

2012}ல் உலகம் அழியும்; 2020}ல் உலகம் அழியும் என ஹாலிவுட் படங்கள் வரிந்துகட்டி களமிறங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் உலகுக்கு என்றும் அழிவே இல்லை என நம்பிக்கையூட்டும் வகையில் 'சரவணபவ' என்ற புதிய படம் தயாராகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை ஆதவன் இயக்குகிறார்.

''உலகம் ஒருபோதும் அழியாது என்பதை மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு கூறுவதுதான் கதை. முழுப் படத்தையும் அந்தமானில் படமாக்கியிருக்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானின் பல பகுதிகளில் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். பூர்வஜென்மம், பில்லி சூனியம், மாந்திரீகம் போன்ற பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் எந்த இடத்திலும் மூட நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் இல்லை'' என்ற இயக்குநரிடம் 'சரவணபவ' பெயர்க் காரணம் குறித்து கேட்டால்... ''உலகை அழியாமல் காக்கும் தமிழ்க் கடவுள் முருகனின் மகிமையைக் கூறுவதால் 'சரவணபவ' என்ற முருக மந்திரத்தை டைட்டிலாக வைத்திருக்கிறோம்'' என்கிறார்.

இனி ஸ்டார் ஹீரோதான்!

தன்னுடைய முந்தைய படங்களைப் புதுமுகங்களை வைத்து இயக்கினாலும் வெங்கட் பிரபுவுக்கு முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் இருந்தும் அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து கேட்டால்...

''உண்மைதான். என்னுடைய அடுத்த படம் ஒரு பெரிய ஸ்டார் ஹீரோவுடன்தான். அந்த ஹீரோவுக்கு ஏற்ற பில்ட் அப், பஞ்ச், கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும் அவை என் ஸ்டைலில் இருக்கும். மூன்று முன்னணி ஹீரோக்களுக்காக ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறேன். ஏப்ரல் மாதம் யார் அந்த ஹீரோ என்பது தெரிந்துவிடும்'' என்கிறார்.

பீமாவுக்குப் பிறகு!

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்துள்ள 'பையா' படம் சிறப்பாக வந்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்தப் படத்தை 'தமிழ்ப் படம்' தந்த துரை தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனம் வெளியிடுகிறது. படம் குறித்து இயக்குநர் லிங்குசாமியிடம் கேட்டபோது...

''காதல், ஆக்ஷன், காமெடி கலந்த பக்கா கமர்ஷியல் கதை. எனக்கு எப்போதுமே ஓர் இடைவெளி ஏற்பட்டால் அதையடுத்து வரும் படத்தை அதிக கவனத்துடன் எடுப்பேன். 'ஜி' படத்துக்குப் பிறகு 'சண்டக்கோழி' சூப்பர் ஹிட் ஆனது. 'பீமா' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அதையடுத்து நான் தயாரித்து இயக்கியுள்ள 'பையா' படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளேன். படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. படத்தில் வரும் சேஸிங், ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். இதுவரை கார்த்தியை கிராமத்தானாக, கரடுமுரடாகப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் அவரை ஒரு ரொமான்டிக் ஹீரோவாகப் பார்ப்பார்கள். படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.