ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தங்கமான இளமை!
ஆபரணத் தங்கம், வெள்ளிப் பொருட்களின் விலை எவ்வளவு கூடினாலும் மக்களுக்கு அவற்றின் மீது உள்ள மோகம் குறையவில்லை. இவற்றிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்து என்ன? விழிநாதன், சென்னை. பாலு


ஆபரணத் தங்கம், வெள்ளிப் பொருட்களின் விலை எவ்வளவு கூடினாலும் மக்களுக்கு அவற்றின் மீது உள்ள மோகம் குறையவில்லை. இவற்றிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி ஆயுர்வேதம் கூறும் கருத்து என்ன?
விழிநாதன், சென்னை.
பாலும் நெய்யும் சுவையில் இனிப்பானவை. வீரியத்தில் குளிர்ச்சியானவை. ஜீரணத்தின் இறுதியில் இனிப்பாகவே இருக்கக் கூடியவை. இப்படி எல்லா வகையிலும் அவை சமமாக இருந்தாலும் நெய், பசி எனும் தீயை வளர்த்து அதைத் தூண்டிவிடுகிறது. ஆனால் பால் பசித் தீயை மந்தமாக்குகிறது. அதி மதுரம், திராட்சை இவ்விரண்டும் சுவை, வீரியம், ஜீரணத்தின் இறுதி ஆகியவற்றில் ஒரே மாதிரியானவை. இருந்தாலும் ஓர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய திராட்சையை மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து வடிகட்டி அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலத்தை உடைத்து எளிதாக வெளியேற்றுகிறது. ஆனால் அதி மதுரத்திற்கு அந்த சக்தி கிடையாது. அதாவது இரு பொருட்கள் ஒரே மாதிரியான குணத்தையும் செயலையும் கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் மீறி, ஒரு சிறந்த காரியத்தை ஒரு பொருள் செய்தால், அதற்குப் பிரபாவம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு பொருளில் இருக்கக் கூடிய தனித்தன்மையுள்ள சக்தியே பிரபாவம் எனப்படுகிறது. அந்த வகையில் தங்கம் மற்ற எந்த உலோகத்தைக் காட்டிலும் பிரபாவத்தில் மிகவும் மேன்மையானது.
தங்கத்தை ஆபரணமாக அணிந்து கொள்வதால் விரைவில் முதுமையுண்டாகாமல் உடலுக்கு வலுவூட்டி நோய்களைப் போக்க வல்லது என்று அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. வெளிப்புறத்தின் வழியாகத் தோலில் படரும் கண்களுக்குப் புலப்படாத நஞ்சை அண்டவிடாமல் தன் பிரபாவத்தின் வழியாக தடுக்கக் கூடியது. தங்கத்தைப் புடம் போட்டு, பஸ்பமாக்கி, தங்க பஸ்பமாக நம் முன்னோர் சாப்பிட்டு உடலைக் கட்டுப்கோப்பாக வைத்திருந்தனர். தங்க பஸ்பம் சுவையிலும் சீரணித்த பின்பும் இனிப்புச் சுவையளிக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். உடல் உட்புறங்களில் பசையை ஏற்படுத்துவதால் உட்புற உராய்வுகளைத் தவிர்த்து அங்கங்களின் அசைவுகளில் தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பிரபாவத்தின் மேன்மையை வெள்ளியிலும் காண முடியும். வெள்ளித் தட்டில் சாப்பிடுவது இன்றும் சில குடும்பங்களில் வழக்கத்திலுள்ளது. வெள்ளியை உருக்கி, பஸ்மமாக்கி அந்தக் காலங்களில் முன்னோர் சாப்பிட்டு வந்ததற்கான காரணம், வெள்ளி முதுமையைத் தடுத்து நீண்ட ஆயுளைத் தரும். மலத்தை இளக்கச் செய்யும். சீரணித்த பின்பு இனிப்புச் சுவையளிக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். குடலுக்குத் தன் பசை என்னும் குணத்தினால் வழவழப்பூட்டும். வாதம், பித்தம் இவற்றைப் போக்கும்.
காதுகளில் அணியும் தோடு, மூக்கில் அணியும் மூக்குத்தி, மார்பில் தரிக்கும் திருமாங்கல்யம் போன்றவை தோலுடன் இடைவிடாது நெருங்கிய சம்பந்தமுள்ள தங்கநகைகளை அதிக தாமிரக் கலப்பு இல்லாமல் அணிவதே நல்லது. அடிக்கடி மாற்றக் கூடிய ஆபரணமாகாததால் மாற்றுக் குறையாத புதுத் தங்கத்திலேயே இவற்றை அமைத்துக் கொள்வது நல்லது.
சிலருக்குப் பவுன் நகையை அணிந்தவுடன் அரிப்பு ஏற்படும். காதில் கம்மல் போட்டால் அரிக்கும். கம்மலைக் கழட்டினால் அதில் ஊண் தண்ணீராக கை நசநசக்கும்.
இதற்குக் காரணம் அவர்கள் அணியும் நகையில் தாமிரக் கலப்பு அதிகமாக இருந்தால் தாமிர அலர்ஜி காரணமாக காதில் கரப்பான் ஏற்படும். அது சீக்கிரம் குணமாவதில்லை. இதற்கு ஆயுர்வேத மருந்தாகிய திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை சிராத்தூள் 5 கிராம் ஆகியவற்றை 300 மி.லி. தண்ணீரில் கொதிக்கவிட்டு, 75 மி.லி. ஆகும் வரை வற்றச் செய்து வடிகட்டி, பஞ்சில் முக்கி, காதில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் போட்டு துடைக்க வேண்டும். ஊண் கசிவும், நசநசப்பும் மாறும் வரை இவ்வாறு செய்த பிறகு, ஜாத்யாதி தைலம் காதுகளில் புண் ஆறும் வரை உபயோகிக்கலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...